என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
- ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.
அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
- ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
- மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும்.
நாகர்கோவில்:
இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றன. அந்த நிலங்களுக்கு கட்டளைதாரர்கள், மாலைக்கட்டு வரிதாரர்கள் முறையாக கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் தகவல் தெரிவித்தும் கட்டளை செய்யாமல் இருந்து வந்தனர். ஒரு சில இடங்களை கட்டளைதாரர்கள் பெயரில் சிலர் உள்குத்தகைக்கு விட்டு ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் கட்டளை செய்யப்படாத கிளாங்காடு ஜமதக்னீஸ்வரர், இலத்தூர் மதுநாதசுவாமி, புளியரை கிருஷ்ணசாமி ஆகிய கோவிலுக்கு சொந்தமான கட்டளை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 நபர்களிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் இடம் அளவீடு முடிந்து அறிவிப்பு பலகை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்டது.
மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். அப்போது சூப்பிரண்டு ஆனந்த், பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ரத்தினவேலு, கோபாலகிருஷ்ணன், நவீன், தொழில்துட்ப உதவியாளர் பிரேம், தி.மு.க.கிளை செயலாளர் கிளாங்காடு ராமர், தங்கராஜ், நில அளவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
- கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.
தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார்.
- ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த கண்ணன்-அனுப்பிரியா தம்பதியின் மகள் தன்மயா (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது சிறு வயது முதலே தமிழ் ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழிகளை கற்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இதற்காக யுடெமி என்ற ஆன்லைன் வழியாக அயல்நாட்டு மொழிகளை கற்கத் தொடங்கினார். பிரான்ஸ், பிரட்டிஷ், ஆஸ்த்திரேலியா, அமெரிக்கன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை இலக்கணப் பிழையின்றி எழுதி படிக்க கற்றுக் கொண்டார். உச்சரிப்பு, எழுத்து, வாக்கியம், இலக்கணம் ஆகியவற்றை வீடியோ வடிவிலும், பி.டி.எப்., டெக்ஸ்ட் வடிவிலும் புதிர் கேள்விகள், வினாடி வினா மூலம் கற்றுத் தேர்ந்தார்.
இது குறித்து ஆன்லைன் மூலம் நடந்த தேர்விலும் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார். இவரது திறமையை கண்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இவர் மொழித் திறன் பயிற்றுவிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆங்கில துறை மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி பட்டறை வகுப்புகள் எடுத்து வருகிறார். 5 வெளிநாட்டு ஆங்கில மொழியை அந்த நாட்டின் நளினத்தில் உரையாற்றி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து அவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எந்தவித தயக்கம் மற்றும் கூச்சம் இருக்க கூடாது என்று கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். இவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கு கல்லூரி பேராசிரியர்கள் கூட பேசுவதற்கு திணறி வருகின்றனர் என்பது கூடுதல் விஷயமாகும்.
தமிழகத்தில் பிற மொழிகளை கற்கக்கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்திய மொழிகளைக் கடந்து அயல்நாட்டு மொழிகளையும் கற்று அதனை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்றுவித்து 8ம் வகுப்பு மாணவி அசத்தி வருவதோடு இந்த காலத்திலேயே வருவாயும் ஈட்டி வருகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
- சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
- முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.
- பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரையும், சொந்த ஊரில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் போலீசாரையும், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்றி வரும் போலீசாரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை பணியிட மாற்றம் செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெற்கு மண்டலத்துக்கும், தெற்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் வடக்கு மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சென்னையில் 62 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் 35 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள் மற்றும் சொந்த ஊரில் தொடர்ச்சியாக பணியாற்றிய டி.எஸ்.பி.க்கள் 100 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் முதல் நிலை காவலர்கள் முதல் ஐ.ஜி.க்கள் வரை 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றுபவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியை நாம் வென்றாக வேண்டும்.
- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளை சந்தித்து தேர்தலையொட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் 6-வது நாளாக நேற்று ராமநாதபுரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் நிர்வாகிகளிடம் அவர்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பாராளுமன்ற தொகுதிகள் குறித்த நிலவரம், மக்களின் எதிர்பார்ப்பு என்ன?, அரசின் திட்டங்கள் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
அதிலும் ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நின்று வெற்றி பெற்ற தொகுதியாக உள்ள நிலையில், இந்த முறை தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதியை நாம் வென்றாக வேண்டும். இன்னும் தேர்தலுக்கு 60 முதல் 65 நாட்கள்தான் இருக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலைவிட, இந்த தேர்தல் மிக மிக முக்கியம். தி.மு.க. தலைவர் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சியாக நாம் இருக்கும்போதே 40 தொகுதிகளில் வெற்றி அடைந்தோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். அந்த தேர்தலைவிட நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்துதான் காணப்பட வேண்டும்.
இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம். எனவே தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். மக்களிடம் ஆதரவு பெற்ற ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். கருணாநிதிதான் உங்கள் தொகுதியில் வேட்பாளர் என்று மனதில் வைத்து நீங்கள் பணியாற்ற வேண்டும்' என்றார்.
- 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.
- நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.
இன்றுடன் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா அணி பிடித்தது.
இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்து தகுதியும் உள்ளது.
பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறைதான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கிராமபுற ஏழை, எளிய மாணவர்களை கண்டறிய வாய்ப்பாக அமைந்தது.
சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறும். விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது.
அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
பங்கு கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகள்.
கிராமங்களில் இருந்தும் வீரர்கள் வரவேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்ஐஏ, யுஏபிஏ சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
- பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.
மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதல் நிதி.
- ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்பு.
- பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் என தகவல்.
bu2024ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி பிறகு பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






