என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
- தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கடுமையான பணியை நீங்கள் பாருங்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பா.ம.க. நிறுவனம் டாக்டர் ராமதாஸ், கூட்டணி அமைத்துதான் போட்டி எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-
* மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் வரும் மக்களை தேர்தலில் 10 இடங்களை நம்மால் வெல்ல முடியும். அதற்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல முடியும்.
* மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
* தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கடுமையான பணியை நீங்கள் பாருங்கள்.
* கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட நாம் குறைந்தது ஏழு இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
* உங்களது விருப்பத்தின்படி தனித்து போட்டியிட தற்போது தயாராக இல்லை.
- அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
- பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா?
விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது.
மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். அதனை ஐ.நா. மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.
அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான்.
வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள். மசூதியை இடித்து விட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது.
- ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பா.ஜ.க.வின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது.
பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வறுமை குறியீட்டில் முன்பு இருந்ததை விட இந்த ஆட்சியில் இந்தியா முன்னேறிவிட்டதாக இந்த அரசு சுய தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், 125 நாடுகளைக் கொண்ட பசியால் வாடுவோரின் அட்டவணையில் ( global hunger index) இந்தியா முன்பு இருந்ததைவிடக் கீழே இறங்கி 111 ஆவது இடத்தில் இருக்கிறது. அருகாமையில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலான நாடுகளைவிடக் கீழே இந்தியா சென்றிருக்கிறது என்பது தலைகுனியச் செய்கிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க 'இந்த நான்கு தூண்களையும் அதிகாரப்படுத்துவதற்காக பாடுபடுகிறேன்' என்று இந்த பாஜக அரசு சொல்வது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை. குடியரசுத் தலைவரை அவமதிக்கும் உரை. இதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரெண்டே ஆகியோர் முதலமைச்சர் அவர்களை 31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாரா பெர்ஜானோ, சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (Guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் அலுவலர் திரு.வே.விஷ்ணு, ஆகியோர் உடனிருந்தனர்.
- நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
- நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின்படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திற்கான மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல்களில் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இன்றி கடந்த மாத(ஜனவரி) நூல் விலையே தொடரும் என அறிவித்துள்ளனர்.
அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை.
சென்னை:
சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் மற்றும் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.197.14 கோடி மதிப்பில் நவீன கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக 1021 மருத்துவர்கள் 20 மாவட்டங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.
டாக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 3-ந்தேதி நடைபெறுகிறது. 4-ந்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. மகளிருக்கு சலுகை விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை. டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 வருடங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. மழை, வெள்ளம் பாதிப்பு இருந்த போதும்கூட தொற்று நோய் பரவவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோவை:
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து இன்று கோவையில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும், கோவை மாவட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அ.தி.மு.க பகுதி, பேரூர், வார்டு செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் குவிந்திருந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு வந்தனர்.
தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பகுதி, வார்டு, பேரூர், செயலாளர்கள், தொண்டர்கள், மகளிர் அணியினர், சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்குகிறார். இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
- 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள்.
- நாளை 8-ம் கால வேள்வி பூஜை, பேரொளி ஆராதனை நடக்கிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து, கும்பாபிஷேக விழா நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோலகலமாக நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்திற்காக 79 குண்டங்களுடன் இதுவரை எந்த கோவிலிலும் இல்லாத அளவில் வேள்வி சாலை அமைக்கப்பட்டுள்ளது. 79 குண்டங்களில் 8 லட்சம் அட்சதைகள் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது. இன்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும், காலை 10 மணிக்கு அவினாசியப்பர் துணை நிற்கும் அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களான அரசமர வினாயகர், செல்வ வினாயகர், பாதிரியம்மன், வீரபத்திரர், உள்பிரகார கோஷ்ட தேவதைகள், தட்சிணாமூர்த்தி, பைரவர், செந்தில் ஆண்டவர், 63 - நாயன்மார்கள், பஞ்சலிங்கம், கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம், சனீஸ்வரர், வெளி பிரகார கோஷ்ட தேவதைகள், நைருதி வினாயகர், தண்டபாணி, விஷ்ணு துர்கை, சிவதுர்கை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்தது. கும்பாபிஷேக பெருவிழாவும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

நாளை 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி அவிநாசி, சேவூர், கருவலூர், பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை திறமையாக நடத்தி முடித்தார்.
- தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 19-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன.
இதில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர். இந்த விளையாட்டு போட்டியை திறமையாக நடத்தி முடித்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மூலம் சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், உலகளவில் விளையாட்டு மையமாகவும் தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் ரன்னர் ஆனது.
எங்களது சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் கேலோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலினுக்கும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை குறைவின்றி நடத்தியதற்காக அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
- கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் அதிகாலையில் பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் தொடக்கத்தில் லேசான சாரல் அடித்த நிலையில் படிப்படியாக மழை அதிகரித்தது. சுமார் 1 மணி நேரம் தச்சநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. டவுனில் சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டையில் அரை மணி நேரமாக பெய்த கனமழையினால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் வண்ணார் பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நனையாமல் மழைக்கு ஒதுங்கி நின்றனர். காலையில் பெய்த மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் அவர்கள் பணிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு செல்லவும் தாமதம் ஏற்பட்டது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெய்த மழையில் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.
மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 20 மில்லிமீட்டரும், நெல்லை யில் 7.40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணை பகுதியில் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதல் ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சிவகிரி பகுதிகளிலும் காலையில் இருந்து சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதி, திருச்செந்தூர் சாலை, கடற்கரை பகுதிகளில் இன்று காலை சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அதிகாலை 3 மணிக்கு சாரல் மழை தொடங்கிய நிலையில் 4 மணி அளவில் இடி-மின்னலுடன் ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் முள்ளக்காடு, பழைய காயல், ஆறுமுகநேரி, முத்தையா புரம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய மழையால் அவை தடைபட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டி னத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு ‘ஷாக்’ ஆனார்கள்.
சென்னை:
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது.
சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விலை குறைவாகவும், பிரீமியம் வகை மதுபானங்கள் விலை அதிக அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10-ம், அரை பாட்டிலுக்கு ரூ.20-ம், முழு பாட்டிலுக்கு ரூ.40-ம் அதிகரித்துள்ளன.
பிரீமியம் வகை மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், அரைபாட்டிலுக்கு ரூ.40-ம், முழு பாட்டிலுக்கு ரூ.80-ம், பீர் வகைகளுக்கு ரூ.10-ம் கூடியுள்ளது.
மதுபானங்களின் அதிக பட்ச சில்லறை விலை 80 ரூபாய் வரை கூடியதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவாட்டர் பாட்டில் சாதாரண, நடுத்தர வகை மதுபானங்கள் முன்பு ரூ.130, ரூ.160-க்கு கிடைத்தது. அவை தற்போது ரூ.170 ஆக கூடியுள்ளது.
பிரீமியம் வகை குவாட்டர் பாட்டில் முன்பு ரூ.180, ரூ.190, ரூ.200, ரூ.240 என்ற அளவில் விற்கப்பட் டது. இவற்றின் விலை தற்போது ரூ.20 உயர்ந்துள்ளது.
மெக்டவல் விஸ்கி, மெக்டவல் பிராந்தி ரூ.200-க்கு இன்று விற்கப்பட்டது. வி.எஸ்.ஒ.பி.எக்ஸ்டிரா கோல்டு பிராந்தி ரூ.220, ராயல் சேலஞ்ச் விஸ்கி, சிக்னேச்சர் பிரீமியம் விஸ்கி குவாட்டர் ரூ.240-ல் இருந்து ரூ.260 ஆக உயர்ந்தது.
ஓல்டு காஸ்ரம் கோல்டன், கிரேப் ஆர்டினரி பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி ஆகியவை குவாட் டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. டைமண்ட் பிராந்தி, விஸ்கி, ரம், சாபில் சூப்பர் ஸ்டார் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140 ஆக உயர்ந்தது. எம்.ஜி.எம் மீடியம் ஓட்கா, எம்.ஜி.எம். ஒயிட் மீடியம் ரம், வி.எஸ்.ஓ.பி. பிராந்தி குவாட் டர் ரூ.170-க்கு விற்கப்பட் டது.
ஆபிசர்ஸ் சாய்ஸ், டைநைட் பிராந்தி ரூ.170, எம்.சி. ஓல்டு காஸ்க் ரம் ரூ.200, எம்.சி வின்டேஜ் கோல்டு பிளன்டட் மால்ட் விஸ்கி ரூ.230, செஞ்சூரியன் பிரெஞ்ச் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி ரூ.250 ஆக உயர்ந்து உள்ளது.
பிரிஹான்ஸ் நெப்போலியன் பிராந்தி ரூ.210, பிரிஹான்ஸ் பிரீமி யம் விஸ்கி ரூ.200, பவர் ஆப்பிள் ஓட்கா, பவர் ஆரஞ்சு ஓட்கா ஆகியவை ரூ.170 ஆக உயர்ந்தது.
ஓல்டு மங்க் டீலக்ஸ் ரம், கோல்டன் ஈகிள் ஆர்டினரி பிராந்தி, ஓரியன் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140, மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி குவாட்டர் ரூ.250, அரை பாட்டில் ரூ.500 ஆக கூடியது.
கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானங்கள் குவாட்டர் பாட்டில்கள் ரூ.140 ஆகவும், அரைபாட்டில் ரூ.280 ஆகவும் உயர்ந்தன. இனிமேல் சாதாரண வகை குவாட்டர் சரக்கு அடிக்க வேண்டுமா னால் குறைந்த பட்சம் ரூ.200 தேவைப்படும். தண்ணீர் பாட்டில், கிளாஸ், சினாக்ஸ் என ரூ.250 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
பிரீமியம் வகையான சரக்குகளை சாப்பிடுபவர்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.350 வரை செலவிட வேண்டும். மதுபானங்கள் விலை இன்று முதல் அமலுக்கு வந்ததால் மது பிரியர்கள் முனுமுனுத்து கொண்டே சரக்கு வாங்கி குடித்தனர். "குடிகாரர்கள் தலையில் தான் கடைசியில் கை வைக்கும்" என்று புலம்பிக் கொண்டே சரக்கு வாங்கியதை காண முடிந்தது.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு 'ஷாக்' ஆனார்கள். ஆனாலும் கடைகளில் கூட்டம் குறையவில்லை. கடைகள் இன்று திறந்ததும் சரக்கு வாங்குவதற்கு காத்து நின்றனர்.
கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் வேதனையுடன் புலம்பலை காண முடிந்தது.
- ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
- மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
சென்னை:
தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.
இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.
அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.






