search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு பஸ் நிலையம் வெறிச்சோடியது
    X

    கோயம்பேடு பஸ் நிலையம் வெறிச்சோடியது

    • கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் 6 பிளாட்பாரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு நாள்தோறும் 2100 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் ஏற்கெனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டன. இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் நேற்று முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. மீதமுள்ள 20 சதவீத பஸ்கள் மாதவரம் புறநகர் பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டன.

    மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஏற்கெனவே ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய இடங்களுக்கு தினமும் 160 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் மற்ற 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு 710 பஸ்கள் செல்கின்றன.

    இதையடுத்து பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்.இ.டி.சி மற்றும் டி.என்.எஸ்.டி.சி பஸ்கள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே தற்போது கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பகல் நேரத்தில் மிகவும் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் பயணம் மேற்கொள்வதை காண முடிகிறது. இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்த பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு கிடக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×