search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram collector"

    • கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
    • பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நாளை நடைப்பெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள,

    1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம், 4. அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும் 9.எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.

    • திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
    • பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமில் 218 பயனாளிகளுக்கு ரூ.3.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்த முகாமில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ரம்யா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஷ்வரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன்கடையை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு நிலையை கேட்டறிந்தார். மேலும் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
    • 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    விவசாயிகளுக்கான வேளாண் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கூட்டுறவு துறை சார்பில், 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.6,18,791 மதிப்பீட்டில் பயிர் கடன்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஒரு விவசாய பயனாளிக்கு ஒரு விசைத்தெளிப்பான், ஒரு விவசாய பயனாளிக்கு உயிர் உரங்கள், 3 விவசாய பயனாளிகளுக்கு ரூ.120 மதிப்பிலான தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவையொட்டி, மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
    • தவணைத் தொகையினை பெறுவதற்கு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தின் மே 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே. விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத் தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவுசெய்து உறுதிசெய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஆதார் அட்டை நகல். புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

    • குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் வருகிற 16, 17, 18, 19, 23,24 ஆகிய 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 16, 17, 18,19, 23 ஆகிய 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை, மே 23 முதல் 26 வரை ஆகிய 8 நாட்கள் காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    வாலாஜாபாத் வட்டத்தில் வருகிற 16 -ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மற்றும் மே 23-ந்தேதி ஆகிய 5 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    முன்னதாகவே, சம்பந்தப்பட்டதாசில்தாரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் முன்கூட்டியே கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

    தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு முனைப்பு இயக்கம் வருகிற 1.10.2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இதனை தொடங்கி வைத்தார்.

    அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் வரதராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திவ்ய பிரியா வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

    வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் 28-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூரில் முகாம் நடைபெறுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600), 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.750) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.1000) வீதம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்).

    பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. தினசரி மாணவராக பயின்று வருவோருக்கு உதவித் தொகை பெற தகுதியில்லை.

    அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு அலுவலக தொலைப்பேசி எண்- 044-27237124யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்கால் கிராமம், (செவித்திறன குறை உடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.1500, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.135 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

    மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை 16, 17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோறும் ரூ.400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

    இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் வட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆேலாசனை முகாம் அம்மையப்ப நல்லூர் மற்றும் மேல்துளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 140 குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு வளர்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டு, குழந்தையின் ஊட்டச்சத்து வளர்ச்சி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சத்துமாவு, கொழுக்கட்டை மற்றும் வேர்க்கடலை பர்பி வழங்கப்பட்டது.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் ஆர்த்தி அப்பகுதியில் உள்ள இருளர் இன குடியிருப்புக்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரியா ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் யோகேஷ் பி.மகசி, டெசிஸ்தான், சிவகுமார் வர்மா முன்னிலையில் வேட்பாளர்களுடன் தேர்தல் விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிகளை, வேட்பாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளும் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் முறையும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தேர்தல் நடைபெற வேண்டுமென வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019

    ×