என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் இடம் பெற்று இருக்கின்றன.
என்றாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய இரண்டும் இடம் பெறுமா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள். ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்து விட்டனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தென் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் 22 தொகுதிகள் கொண்ட ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அடுத்தடுத்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பிரேமலதாவை நெகிழ்ச்சி அடையவைத்தது. மேலும் பத்ம விருது கொடுத்து விஜயகாந்தை கவுரவித்ததின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பா.ஜ.க. தந்திருப்பதாக பிரேமலதா கருதினார்.
இந்த நிலையில் பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ள பிரேமலதா ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
தே.மு.தி.க. சார்பில் பா.ஜ.க.விடம் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பாக பிரேமலதாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை பாரதிய ஜனதாவிடமும், அ.தி.மு.க.விடமும் கொடுக்கப்பட்டது. எந் தெந்த தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. விரும்புகிறது என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்.பி. இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்து உள்ளது.

இதையடுத்து தே.மு.தி.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க. தரப்பில் கள்ளக்குறிச்சி, மதுரை உள்பட 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதில் பிரேமலதாவின் இளைய சகோதரர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.
மதுரை தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் தே.மு.தி.க. வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க. அளித்துள்ள வேண்டுகோள்கள் அனைத்தையும் பா.ஜ.க. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.
இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
- இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
- இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
சென்னை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தனர். அதுமட்டு மின்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்தும் ஆலோசித்து வந்தனர்.
கடந்த மாதம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக நிலவரம் குறித்து எடுத்து கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யவும், தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அயஜ் பாதூ, தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மல்லிக் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் இதுவரை தேர்தலுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது? வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் புதிதாக விண்ணப்பங்கள் வந்துள்ளதா? எந்த அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் கேட்டறிந்தனர்.
இதுவரை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவே பாராளுமன்றத் தேர்தல் நடந்திருப்பதால் இப்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து விரைவில் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தவிர வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பு விவரம், எவ்வளவு மின் னணு எந்திரங்கள் இன்னும் தேவைப்படும் போன்ற விவரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1 மணிநேரம் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
அப்போது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக என்னென்ன தேவைப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமான வரித்துறையினர் எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
கூட்டம் முடிந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை காலை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக வாக்காளர் பட்டியல் முழுமையாக உள்ளதா?
திருத்தங்கள், பெயர் சேர்த்தல் ஆகியவை சரிவர செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிகிறார்கள். நாளை மாலை வரை இந்த ஆலோசனை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு நாளை இரவு 9 மணிக்கு டெல்லி புறப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
- கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
- பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.
28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.
இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.
இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
- மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் தனது காரில் 5 பேர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.
இன்று அதிகாலை வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த கார் ஓங்கி உயர்ந்த 2 மரங்களுக்கு இடையில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.
பின்னர் படுகாயமடைந்த டிரைவர் சரவணன், மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் (60) ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
- அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனரகத்தில் புகார் மனு அளித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
147 நபர்களிடம் விசாரணை, டிஎன்ஏ பரிசோதனை என பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனரகத்தில் புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் ரவி வர்மன் இன்று வேங்கைவயல் கிராமத்தில் விசாரணை நடத்தினார்.
குடிநீர் மேல் நிலைத்தொட்டியை பார்வையிட்ட அவர், கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடத்திலும் அவர் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையின்போது உடனிருந்த ஆதிதிராவிட நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் தாசில்தார்களிடமும், சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் இவ்வழக்கை விசாரணை செய்து வரும் காவல்துறையினரிடத்தில் எந்தெந்த வகையில் விசாரணை செய்யப்பட்டது என்பது குறித்து கலந்து ஆலோசித்தார்.
- அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
- கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவொற்றியூர்:
எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயு வெளியேறியது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரை சுற்றி உள்ள 33 மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது போராட்டம் இன்று 42-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் மீனவ கிராமமக்கள் இன்று காலை திடீரென அன்னை சிவகாமி நகர், தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மீனவ கிராம மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டு உள்ளது. துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அன்னை சிவகாமி நகர் முதல் எண்ணூர் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உரத்தொழிற்சாலை முன்பும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
- மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு.
- இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது.
மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப் பட்ட நிதிப்பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில் இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது, இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.
நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதோடு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது, இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ் நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடந்தது.
சென்னை:
தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுத் துறை மூலம் 1,021 புதிய டாக்டர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 20 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக கூட்ட அரங்கில் இன்று நடந்தது.
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள புதிய டாக்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-
அறந்தாங்கி-62, அரிய லூர்-45, செய்யாறு-41, திண்டுக்கல்-44, கோவில்பட்டி-44, மயிலாடு துறை-47, நாகப்பட்டி னம்-41, பரமக்குடி-60, புதுக்கோட்டை-64, ராம நாதபுரம்-48, சிவ கங்கை-84, சிவகாசி-50, தென்காசி-52, தஞ்சாவூர்-70, நீலகிரி-55, தூத்துக்குடி-38, நெல்லை-53, திருவண்ணா மலை-71, திருவாரூர்-106, எருது நகர்-43.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், டாக்டா் சங்கு மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார்.
- விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.
பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒருநாள்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்.
வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றியும், கோபிநாத்தும் அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார்.
கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் 200 அடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதியில் கார் பாய்ந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது டிரைவர் தஞ்சின் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பள்ளத்தாக்கு பகுதியில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சட்லஜ் நதியில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
- பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன்.
- ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஸ்பெயினின் தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற் கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.
நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும்.
இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.
இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
Wrapped up exhilarating talks with top executives from Spain's industrial giants – #Gestamp, #Talgo, and #Edibon. Convinced them of the boundless opportunities in Tamil Nadu, India's manufacturing powerhouse. Thrilled to seal the deal with Edibon, securing a massive investment of… pic.twitter.com/T5bVAuZbI0
— M.K.Stalin (@mkstalin) February 5, 2024
- ராகுல் காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார்.
- இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பண்டித நேருவை விமர்சனம் செய்கிற அதேநேரத்தில் அன்னை இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 15 ஆண்டுகள் பொறுப்பேற்று வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கதேச போர் வெற்றி, இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியவர், முதல் வின்வெளி பயணத்தின் மூலம் முதல் இந்தியராக ராகேஷ் சர்மாவை அனுப்பி சாதனை படைத்தவர்.
இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் படைத்தவர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

22 ஆண்டுகாலம் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றாத, அது ஒரு துண்டு துணி என்று கொச்சைப்படுத்திய பாரம்பரியத்தில் வளர்ந்த பிரதமர் மோடி காங்கிரஸ் பாரம்பரிய தலைவர்களை இழிவுபடுத்துவதில் அவர் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களுக்கு இணையாக ஆர்.எஸ்.எஸ். வழிவந்த தலைவர்களில் எவரது பெயரையாவது மோடியால் ஒப்பிட்டு கூற முடியுமா ? அத்தகைய தியாக வரலாறு இல்லாத பின்னணியில் வந்த பிரதமர் மோடி, இந்தியாவின் விடுதலைக்காகவும், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பண்டித நேரு, இந்திரா பாரம்பரியத்தை சிதைத்து விட்டால் தலைவர் ராகுல் காந்தியின் எழுச்சியை தடுத்து விடலாம் என்று பிரதமர் மோடி கனவு காண்கிறார்.
எனவே, கடந்த 9 ஆண்டுகளில் 117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்திய பொருளாதாரத்தை திவாலான நிலைக்கு அழைத்து செல்கிற பிரதமர் மோடி அவர்களே, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்துங்கள். மக்களுக்காக ஆட்சி செய்யாமல் அதானி, அம்பானியை வளர்க்க முயற்சி செய்யாதீர்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவித்து ஊழலை வளர்க்காதீர்கள், இந்திய பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 பொதுத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
- மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.
200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.
விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






