search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. கூட்டணியில் சேர தே.மு.தி.க. பேச்சுவார்த்தை
    X

    பா.ஜ.க. கூட்டணியில் சேர தே.மு.தி.க. பேச்சுவார்த்தை

    • தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் இடம் பெற்று இருக்கின்றன.

    என்றாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய இரண்டும் இடம் பெறுமா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள். ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்து விட்டனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தென் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் 22 தொகுதிகள் கொண்ட ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அடுத்தடுத்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பிரேமலதாவை நெகிழ்ச்சி அடையவைத்தது. மேலும் பத்ம விருது கொடுத்து விஜயகாந்தை கவுரவித்ததின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பா.ஜ.க. தந்திருப்பதாக பிரேமலதா கருதினார்.

    இந்த நிலையில் பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ள பிரேமலதா ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் பா.ஜ.க.விடம் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பாக பிரேமலதாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை பாரதிய ஜனதாவிடமும், அ.தி.மு.க.விடமும் கொடுக்கப்பட்டது. எந் தெந்த தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. விரும்புகிறது என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்.பி. இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்து உள்ளது.


    இதையடுத்து தே.மு.தி.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தே.மு.தி.க. தரப்பில் கள்ளக்குறிச்சி, மதுரை உள்பட 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதில் பிரேமலதாவின் இளைய சகோதரர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    மதுரை தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் தே.மு.தி.க. வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க. அளித்துள்ள வேண்டுகோள்கள் அனைத்தையும் பா.ஜ.க. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.

    இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    Next Story
    ×