search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்றத் தேர்தலுக்கு கடும் போட்டி: தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்
    X

    பாராளுமன்றத் தேர்தலுக்கு கடும் போட்டி: தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

    • கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
    • பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.

    இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.

    ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.

    28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.

    இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

    1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

    தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.

    மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×