என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை பறித்து சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் உரிமை மீட்பு குழு கூட்டங்கள் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலையை வைத்து கொண்டு படுதோல்வி அடைந்தார். கட்சிக்காக அவர் என்ன தியாகம் செய்தார். அவரை முதலமைச்சராக்கியது சசிகலாதான். ஆனால் தற்போது சசிகலா பற்றி தேவையில்லாத வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்து அ.தி.மு.க.வை வளர்த்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை பறித்து சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 108 சாதிகளின் இடஒதுக்கீட்டை பறிக்க எடப்பாடி பழனிசாமி காரணமாக இருந்தார். இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.


    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தேனி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அ.தி.மு.க. சார்பில் எனது மகன் வெற்றி பெற்றார். எனது மகனுக்கு கிடைக்க வேண்டிய மத்திய மந்திரி பதவியை தடுத்தது எடப்பாடி பழனிசாமி தான்.

    என் பேச்சை மீறி பழனிசாமி தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டதால் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. விரைவில் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் தொண்டர்களே அவரை அகற்றுவார்கள். இந்த தர்மயுத்தத்தில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். தொண்டர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம். 2 அணிகளையும் இணைக்க சசிகலா முயற்சி செய்தார். ஆனால் பதவி ஆசையால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை.

    கடந்த 4 ஆண்டுகள் பா.ஜனதாவின் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. தற்போது பா.ஜனதா கூட்டணியை முறிப்பது உச்சப்பட்ச துரோகம். அ.ம.மு.க. பிரிந்து போட்டியிட்டதால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை 5 ஆக உடைத்துள்ளார். ஆனால் நாங்கள் தொண்டர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். எடப்பாடி இல்லாத அ.தி.மு.க. விரைவில் மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.
    • மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள்.

    கோவை:

    அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி ஆ.ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்.பற்றி அவதூறாக பேசியதற்காக பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.

    தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது குறித்து ஆ.ராசா எம்.பி.யிடம் கோவையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளித்து ஆ.ராசா எம்.பி. கூறியதாவது:-


    எனக்கு என்னென்ன தகுதியிருக்கிறது என்று சொல்வதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம் என கூறுகிறீர்கள்.

    அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், முதலமைச்சரை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, முதலமைச்சர் குடும்பத்தினரை பற்றி பேசியது தொடர்பாக ஐகோர்ட்டில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அதன்பிறகு நடந்த மாநாட்டில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முதலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். எம்.ஜி.ஆர் முகத்தை வைத்து தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பழனிசாமி கூறுகிறார். அது தனிக்கதை. அதைப்பற்றி பின்னர் தனியாக பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பயணிகளிடம் போலீசார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவில் அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும், கிளாம்பாக்கம் வரும் பஸ்களில் இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்களை சிறைபிடித்தனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • கோவையில் உக்கடம் உள்பட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    சென்னை:

    கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார்.

    தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரே அந்த சதித்திட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    கார் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முபினுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவருடன் படித்தவர்கள் வீடுகளில் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி தடயங்களைக் கைப்பற்றி வருகிறார்கள்.

    குண்டு வெடிப்பை நிகழ்த்த முபினும், அவரது கூட்டாளிகளும் பல இடங்களில் ரகசிய கூட்டங்களை நடத்தி உள்ளனர். மேலும் தாக்குதல் நடத்துவதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக பலர் அவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளதும், பலர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என கண்ட றிந்து அவர்களை கைது செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்ட னர்.

    இந்நிலையில், முபினின் நண்பர்கள், அவருடன் அரபிக்கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர் என 8 மாவட்டங்களில் இன்று ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உக்கடம் அல்-அமீன் காலனியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஹபீப் ரகுமான் என்பவர் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் அவர்கள் வெளியே அனுமதிக்கவில்லை. புதிய நபர்களையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போனையும் அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். சோதனையின்போது சில ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

    உக்கடம் என்.எஸ்.கார்டனில் உள்ள பைசல்ரகுமான் என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். போத்தனூரில் நாசர் என்ற மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோல மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் இந்த சோதனையானது நடந்தது. சோதனை நடந்த இடங்களில் பிரச்சனைகள் எதுவும் நிகழாமல் இருக்க உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது. திரு.வி.க. நகரில் வசிக்கும் முகம்மது அப்துல்லா பாஷா என்பவர் வீட்டுக்கு அதிகாலையில் அதிகாரிகள் அதிரடியாகச் சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர், வில்லிவாக்கம், பல்லாவரம் உள்ளிட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கடலூர் மங்கலம்பேட்டையில் முகமது சுலைமான் வீட்டிலும், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பக்ரூதின் அலி அகமது வீட்டிலும் சோதனை நடந்தது.

    இன்றைய சோதனையின் போது பல இடங்களில் இருந்து லேப்-டாப், செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த ஆவணங்களை கொண்டு தொடர் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

    கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 3 முறை சோதனை நடத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று 4-வது முறையாக இந்த சோதனை நடந்தது. ஒரே நாளில் 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்.
    • எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

    • கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது.
    • கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் திமுக மீனவரணி சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை கடற்படையினரால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.

    இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

    ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.
    • முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைந்த செய்தி வந்த சில மணி நேரத்திலேயே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அவரிடம் பிரேமலதா உள்பட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அவராகவே உத்தரவிட்டார்.

    2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைக்க கலைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.

    அவர் மட்டும் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கலைஞர் முதலமைச்சராக இறந்திருப்பார். இன்னும் சொன்னால் அவர் மறைந்திருக்வே மாட்டார். அந்த தெம்பிலேயே அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.

    இன்னும் ஒரு படி மேலே சொன்னால், ஜெயலலிதா கூட இறந்திருக்க மாட்டார். கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் ஜெயலலிதா அமெரிக்கா சென்று அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.

    அதேபோல், விஜயகாந்தும் இறந்திருக்க மாட்டார். அன்று படுத்தவர் அதோடு எழுந்திருக்கவில்லை. அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து, இன்றும் எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பார்.

    ஆனால், விஜயகாந்த் திமுகவுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தார். எதிர்க்கட்சி தலைவராக இல்லாத நிலையில் கலைஞர் மறைய செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

    இருந்தாலும், விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின் அரசு மரியாதை செய்தார் என்றால் அந்த வலி அவருக்கு தெரியும். கலைஞர் இறந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கை போட்டு கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை.
    • அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும்.

    அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், இதில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.

    அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும்.
    • மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பரில் குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜனவரி 3ம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். இலங்கை வசம் தற்போது உள்ள 77 மீனவர்கள் மற்றும் 151 படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
    • வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்துவிட்டது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×