என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யாவிட்டால் தொண்டர்களே பதவியில் இருந்து அகற்றுவார்கள்
- அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை பறித்து சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் உரிமை மீட்பு குழு கூட்டங்கள் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலையை வைத்து கொண்டு படுதோல்வி அடைந்தார். கட்சிக்காக அவர் என்ன தியாகம் செய்தார். அவரை முதலமைச்சராக்கியது சசிகலாதான். ஆனால் தற்போது சசிகலா பற்றி தேவையில்லாத வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்து அ.தி.மு.க.வை வளர்த்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை பறித்து சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 108 சாதிகளின் இடஒதுக்கீட்டை பறிக்க எடப்பாடி பழனிசாமி காரணமாக இருந்தார். இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தேனி தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அ.தி.மு.க. சார்பில் எனது மகன் வெற்றி பெற்றார். எனது மகனுக்கு கிடைக்க வேண்டிய மத்திய மந்திரி பதவியை தடுத்தது எடப்பாடி பழனிசாமி தான்.
என் பேச்சை மீறி பழனிசாமி தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டதால் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. விரைவில் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் தொண்டர்களே அவரை அகற்றுவார்கள். இந்த தர்மயுத்தத்தில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். தொண்டர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம். 2 அணிகளையும் இணைக்க சசிகலா முயற்சி செய்தார். ஆனால் பதவி ஆசையால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகள் பா.ஜனதாவின் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. தற்போது பா.ஜனதா கூட்டணியை முறிப்பது உச்சப்பட்ச துரோகம். அ.ம.மு.க. பிரிந்து போட்டியிட்டதால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை 5 ஆக உடைத்துள்ளார். ஆனால் நாங்கள் தொண்டர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். எடப்பாடி இல்லாத அ.தி.மு.க. விரைவில் மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.






