என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 198 தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரையை நிறைவு செய்துள்ளார்.
    • சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்த நடைபயண யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.

    ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக அண்ணாமலையின் யாத்திரை நடந்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்த யாத்திரைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

    அண்ணாமலை செல்லும் ஊர்களில் எல்லாம் கூட்டம் திரள்கிறது. அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து செல்பி எடுக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இன்றுவரை 198 தொகுதிகளில் அண்ணாமலை யாத்திரையை நிறைவு செய்துள்ளார். நேற்று அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டார்.

    இன்று (சனிக்கிழமை) உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி தொகுதிகளில் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு பேச இருக்கிறார். பூந்தமல்லி நசரத்பேட்டையில் இன்று இரவு 8 மணிக்கு அவரது இன்றைய யாத்திரை நிறைவு பெறுகிறது.

    இன்று இரவு பூந்தமல்லியில் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் இன்று மதியம் வரை அனுமதி வழங்கவில்லை.


    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரது நடைபயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் நாளை யாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். இந்த யாத்திரையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் சென்னை நடை பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வடமாநிலங்களில் பா.ஜ.க. நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

    என்றாலும் நடைபயணத்தை திட்டமிட்டபடி நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை சென்னை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சென்னை உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "அண்ணாமலையின் நடைபயண திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் நாளை காலை சென்னையில் நடைபயணம் செல்ல அனுமதிப்பது குறித்து கமிஷனர் இறுதி முடிவு எடுப்பார்" என்று கூறினார்.

    போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைக்காத பட்சத்தில் தடையை மீற பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளதால் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே அமைந்த கரை புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நாளை மாலை பா.ஜ.க. பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அந்த இடம் மாற்றப்பட்டு உள்ளது.

    அமைந்தகரைக்கு பதில் சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கசாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நட்டா பங்கேற்று உரையாற்றுகிறார் இந்த கூட்டத்துக்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    • கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
    • மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.

    சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்று உள்ளது. அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதன்படி இன்று (சனிக்கிழமை) செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு மலர் கண்காட்சிக்காக விதவிதமான பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 வகையான உருவங்களை வைத்து உள்ளனர்.


    இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.

    இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இந்த மலர் கண்காட்சியை நிரந்தரமாக வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது போன்று நிரந்தரமாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் நடத்தினால் பொதுமக்கள் செம்மொழி பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள்" என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வக்கீல் சதீஷ் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
    • ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி அணியாக செயல்படுகிறது. பா.ஜ.க.வை தவிர்த்து மற்ற கட்சிளை இணைத்து போட்டியிட தீவிரமாகி வருகிறது.

    அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போல இந்த முறையும் அந்த தொகுதியில் மகனை நிறுத்த முடிவு செய்துள்ளார்.


    மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தன்னை இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக 5 தொகுதிகளை கேட்டு பா.ஜ.க. தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்களான கோபால கிருஷ்ணன் (மதுரை), ஜே.சி.டி. பிரபாகர் (ஸ்ரீபெரும்புதூர்), புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் வக்கீல் எம்.வி. சதீஷ் ஆகியோரில் சிலரை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளார். வக்கீல் சதீஷ் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலமாக குவித்து வருகிறது.
    • கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில் உரையாற்றி இருக்கிறார்.

    சில குறிப்பிட்ட தொழிலதிபர்களின் சொத்து குவிப்பினால் பா.ஜ.க. தேர்தல் நிதியாக கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரங்களின் மூலமாக குவித்து வருகிறது. 2018 முதல் 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூபாய் 9,200 கோடி. இதில் பா.ஜ.க. பெற்ற நன்கொடை மட்டும் ரூபாய் 5272 கோடி. இது மொத்த நன்கொடையில் 52 சதவிகிதமாகும்.


    கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சீரழிந்த விவசாயிகளின் வாழ்வாதாரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மக்களை வதைக்கும் ஜி.எஸ்.டி. என குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.
    • திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொது மக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பஸ் நிலையத்தை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய தி.மு.க. அரசு, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

    நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பஸ்கள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பஸ்களும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

    குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் தி.மு.க. அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய் தும், பஸ்களைச் சிறை பிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

    பஸ் நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசு, வார இறுதியில் கூட போதுமான பஸ்களை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் தி.மு.க. அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தி.மு.க. அரசு, உடனடி யாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பஸ்களை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனு மதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொது மக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
    • இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன என்றும், இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MOHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்குப் பிறகு, மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள், 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்ததாக தனது கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், பிரதமர் அவர்களுடனான பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாகவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும் என்றும் தனது கடிதத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.

    அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.

    சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
    • பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சேர்ந்த கோவி. செழியன், அப்துல்லா எம்.பி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் நேற்று வந்தனர்.

    ஓசூரில், தளி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த குழுவினர், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் 2 கருத்துகளை ஒரே மாதிரியாக பார்க்க முடிகிறது. ஜி.எஸ்.டி.யில் உள்ள பல குழப்பங்கள் பற்றி வியாபாரிகள், சிறு, குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, தொழிற் சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதை தெரிவித்து உள்ளனர்.

    மாநிலங்களுக்கு நிதி பகிர்வு வழங்குவதில் பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராக, தற்போது பிரதமராக உள்ள நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் இந்த விவகாரத்தில் போராட்டங்களை கையில் எடுத்து வருகிறார்கள்.

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி பல மாநில முதலமைச்சர்கள் களத்தில் போராட வேண்டிய சூழலுக்கு ஒன்றிய அரசு தள்ளியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் என 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். 

    • முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
    • உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.

    இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
    • தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் கூட்டணி அமைக்க அரசியல் கட்சியினர் தீவிரமாகி வருகின்றனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தங்களது தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போல் பா.ஜ.க. தங்களது தலைமையில் டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் கூட்டணியை அமைத்து தேர்தல் களம் காண தயாராகி வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த 2 கட்சிகளிடமும், பா.ஜ.க., அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடந்த அ.தி.மு.க. தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று கூறினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம், மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்த போது, 14+1 தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்தார். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர். ராமதாசை தைலாபுரத்தில் அவரது தோட்டத்தில் சந்தித்து பேசினார். எனவே பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அ.தி.மு.கவை சேர்நத நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் சிறப்பான கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பா.ம.க. தலைவர்களுடன் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் நேரடியாக அவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதே போல் தே.மு.தி.க.விடமும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தே.மு.தி.க. சார்பில் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இன்னும் குழு அமைக்கபடவில்லை. வருகிற 12-ந் தேதி தே.மு.தி.க. கொடிநாள் ஆகும். எனவே அன்று தேர்தல் குழு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே அவர்கள் குழு அமைத்ததும் தே.மு.தி.க.வுடனும் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்ட போது அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.விடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை உறுதி செய்தனர். இதே போல் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவித்தனர். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றனர். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள்.
    • நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிகளில் சேர தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள். அந்த அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான தேர்வு மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    இன்று முதல் ஆன்லைன் வழியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ந் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்.

    அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடிகிறது.

    நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வு எழுதி எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் வாய்ப்பை இழந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.

    இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

    ×