என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக?- முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
- நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
- தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் கூட்டணி அமைக்க அரசியல் கட்சியினர் தீவிரமாகி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தங்களது தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போல் பா.ஜ.க. தங்களது தலைமையில் டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் கூட்டணியை அமைத்து தேர்தல் களம் காண தயாராகி வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த 2 கட்சிகளிடமும், பா.ஜ.க., அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடந்த அ.தி.மு.க. தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று கூறினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம், மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்த போது, 14+1 தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்தார். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர். ராமதாசை தைலாபுரத்தில் அவரது தோட்டத்தில் சந்தித்து பேசினார். எனவே பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அ.தி.மு.கவை சேர்நத நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் சிறப்பான கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பா.ம.க. தலைவர்களுடன் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் நேரடியாக அவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதே போல் தே.மு.தி.க.விடமும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தே.மு.தி.க. சார்பில் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இன்னும் குழு அமைக்கபடவில்லை. வருகிற 12-ந் தேதி தே.மு.தி.க. கொடிநாள் ஆகும். எனவே அன்று தேர்தல் குழு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே அவர்கள் குழு அமைத்ததும் தே.மு.தி.க.வுடனும் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்ட போது அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.விடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை உறுதி செய்தனர். இதே போல் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவித்தனர். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றனர். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.






