என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.
இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
- இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு மார்க்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வலா, நீதிபதி மரகத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் மற்றும் வேளான் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசு உரிமம் வழங்காத காரணத்தால், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்த பணியும் துவங்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்கள் மேம்பாட்டு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி இருக்கிறது.
அந்த சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்தனர்.
- புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.
அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடிதத்தை திமுக எம்பி வில்சன் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த சில நாட்களாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள், இந்நாள் தேர்தல் ஆணையர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை கேட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்று எழுதப்பட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில் இந்த கடிதத்தை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார். இந்த திட்டத்தை தி.மு.க. நிராகரிப்பதாகவும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், இது குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கி செல்வதற்கு சமம் என்றும் திமுகவினரால் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இந்த திட்டதை கைவிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு பல்வேறு கட்சிகளிடம் கருத்து கேட்டு வரும் நிலையில் தி.மு.க. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே அவசரம் கதியில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேந்து முனையத்திற்கு வரும் பயணிகளின் தேவையை அறிந்து தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்காட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிளாம்பாக்க பேருந்து முனையத்திற்கு அதிகளவில் நகர பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து முனையத்திற்குள் ஏடிஎம், உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
கிளாம்பாக்கம் முனையத்தில் அடிப்படை வசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
- சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் திங்கட்கிழமை மதியம் நடைபெற உள்ளது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாட்களை இறுதி செய்யும் பணியை அலுவல் ஆய்வு குழு மேற்கொள்ளும்.
அதனைத் தொடர்ந்து, 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்.

மேலும் 20-ந்தேதி 2024-2025-ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21-ந்தேதி 2023-2024-ம் ஆண்டிற்கான முன் பணச் செலவின மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் சட்டப் பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் நுழைவாயிலில் உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி அறிந்துக்கொள்ள ஏதுவாக அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா? அல்லது கடந்த ஆண்டை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா? என்பது அப்போது தான் தெரிய வரும்.

கவர்னர் உரைக்கு பிறகு தொடர்ந்து நடைபெறும் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் விவரங்கள், அவர்களது கேள்விகள் போன்றவற்றைக்காண வைக்கப்பட்டுள்ள அகண்ட திரையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காகிதம் இல்லாத சட்ட சபையின் அங்கமாக சட்டசபை மண்டபத்தில் ஒரு சில இடங்களில் அகண்ட திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.
கேள்வி நேரத்தின்போது வினா எழுப்பும் உறுப்பினரின் பெயர், தொகுதி விவரங்கள், எழுப்பப்பட்ட வினா, அதற்கு பதிலளிக்கும் அமைச்சரின் பெயர், துறை விவரங்கள் அந்தத் திரையில் இடம் பெற்று வருகின்றன.
இதற்காக வைக்கப்பட்டு உள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம் இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திரையில் காட்டப்படும் விவரங்களை எங்கிருந்தும் எளிதாக பார்க்க முடியும். இதே போன்று சட்டசபையின் மண்டபத்தின் தரைத் தளத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சுழலும் வகையிலான நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. அவையும் இந்த கூட்டத் தொடரில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
சட்டசபை கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உரையைத் தவிர்த்து, சில பத்திகளை விடுத்தும், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கவர்னர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனவும் அரசின் சார்பில் தயாரித்து சட்ட சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெறும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
- விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
கோவை மாநகரில் 2035-ம் ஆண்டுக்கான மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகத்துக்காக ரூ.780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக்குடி நீர் திட்டம் கோவை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானியாற்றை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பில்லூர் 3-வது திட்டத்துக்காக முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பில் தலைமை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூருக்கு குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. தண்டிப்பெருமாள் புரத்தில் ரூ.104.90 கோடி மதிப்பில் 178 எம்.எல்.டி. திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டன்மலைக்கு தண்ணீர் செல்கி றது. அங்கு 900 மீட்டர் தூரத்துக்கு சுங்கம் அமைக்கப்பட்டு, பன்னிமடைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளை (11-ந் தேதி) பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. குடிநீர் வினியோகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பங்கேற்று பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.362.20 கோடி மதிப்பீல் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அன்னூர், சூலூர், அவினாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். விழாவில் 8 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
விழா நடைபெறும் மைதானத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் தற்போது 10 நாள், 12 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. இந்த பில்லூர் திட்டம் தொடங்கினால் தினமும் தண்ணீர் அளிக்கும் நிலை ஏற்படும்.
கோவையின் மக்கள் தொகை 22 லட்சமாக உள்ளது. இவர்களுக்கு 300 எம்.எல்.டி. தண்ணீர் இருந்தால் தினமும் தண்ணீர் வழங்க முடியும்.
ஆனால் 300 எம்.எல்.டி. தண்ணீருக்கு மேலாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிச்சி பகுதிக்கு 8 எம்.எல்.டி. கவுண்டம் பாளையம் பகுதிக்கு 22 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் பில்லூர்-2 திட்டத்தின் கீழ் மாவட்ட த்திற்கு மொத்தம் 125 எம்.எல்.டி. கிடைக்கும் நிலையில் நகராட்சிக்கு 3 எம்.எல்.டி. மட்டுமே வழங்கி வருகிறோம். பில்லூர் 2 திட்டத்தில் நகராட்சிக்கு 125 எம்.எல்.டி. தண்ணீர் வருகிறது. எனவே பில்லூர் 3-வது திட்டம் வந்தால் மாநகரில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை தினமும் வழங்க முடியும். இத்திட்டத்தை உடனடியாக கோவைக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
- தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். ஒரு மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெறவும், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு முழுமையாக வேலை செய்வது எனவும் முடிவு செய்தனர். அடுத்த வாரம் நடைபெறும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவை தெரி விக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
- காட்டாங்குளத்தூரில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ஜனதாவின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அதன் பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவர் திடீரென பயண திட்டத்தை மாற்றியுள்ளார். காலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவிற்கு பதில் மாநில செயலாளர் அண்ணாமலையும், பொறுப்பாளர் தேசிய விநாயகமும் கலந்து கொள்கிறார்கள்.
மாலை 5 மணிக்கு நட்டா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அதன் பிறகு அமைந்தகரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
- இந்தியா ஒரு பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக மட்டுமே பார்க்கப்பட்டது.
- உலக நாடுகள் ஏங்கிய போது இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.
திருச்சி:
திருச்சி தனியார் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் செயலர்கள் முதல்வர்கள், நீண்ட காலமாக சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கௌரவித்தார்.
மேலும் கல்வி, கலை மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
இந்தக் கல்லூரி மற்ற கல்லூரிகளை போல் அல்லாமல் ஆசிரமம் மூலமாக சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்த நாட்டிற்கு என்னென்ன தேவையோ அதை உணர்ந்த பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். இந்த பாரத பூமி புண்ணிய பூமி. இங்கு ஞானிகள் ரிஷிகள், முனிவர்கள் நிரம்ப இருக்கிறார்கள்.
இந்த நாடு உலகத்தை ஒரு குடும்பமாக பாவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக மட்டுமே பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றைக்கு உலக நாடுகள் நம்மை உற்று நோக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளால் இந்தியா பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கம் இந்திய மக்களுக்கு மட்டு மல்லாமல் உலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என தேசம் விரும்புகிறது.
ஜி. 20 மாநாடு நடத்தி அதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சி உலகிற்கு பறைசாற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரன் என்றில்லாமல் எல்லோரையும் உயிர்பலி வாங்கியது.
அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கமாட்டார்களா? என உலக நாடுகள் ஏங்கிய போது இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த தடுப்பூசி உலக நாடுகளுக்கும் சப்ளை செய்யப்பட்டது.
அப்போது நாட்டு மக்களை காப்பாற்றாமல் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதாக பிரதமர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதில் நாட்டு மக்களையும் உலக மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி காத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
- மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.
அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
- ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:
"கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.
இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






