என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிய தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட வாரியாக கருத்து கேட்டு வந்தனர்.

    கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இந்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடத்தினார்கள்.

    அப்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கூறும்போது யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும். கோஷ்டி பிரச்சினைகளை தேர்தலுக்கு பிறகு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க அழைக்கப்படவில்லை. அவர்களிடம் தனியாக கருத்து கேட்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

    அதன்படி இப்போது வருகிற 14-ந் தேதியும், 15-ந் தேதியும் தி.மு.க. இளைஞரணி மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்கும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தாங்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழகப்பணிகள் குறித்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    14-ந் தேதி மாலை சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதே போல் மண்டலம் 2-ல் இடம் பெற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அன்றைய தினம் பார்த்து பேசுகிறார்.

    15-ந் தேதி காஞ்சிபுரம் வடக்கு தெற்கு மாவட்டங்கள் வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மண்டலம் 4-ல் உள்ள மாவட்ட அமைப்பாளர்கள் 15-ந் தேதி பங்கேற்க உள்ளனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து பேசுவதுடன் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து கேட்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம், மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் வீடியோக்களில் விளம்பரம் பார்த்தால் தினமும் சராசரியாக ரூ.5 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஒண்டிப்புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டடோர், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ஒருசிலர் சமூகவ லைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் உள்ளார். எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டுமென கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் சக்தி ஆனந்தன் மீது போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவுசெய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த சிலரை போலீசார் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இன்றும் பலர் வ.உ.சி பூங்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை தனியார் நிறுவனத்தின் இணையதள செயலியை மாநகர போலீசார் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த செயலி மீண்டும் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் அந்த இணைய செயலி மூலம் வாடிக்கையாளர் மேலும் சேர முடியாத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    • தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. 3 குழுக்களை அமைத்துள்ளது.
    • தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. 3 குழுக்களை அமைத்துள்ளது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார்.

    ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.



    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்து பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு தி.மு.க. தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அதில் தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    அதை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    64 உபசாரங்களில் கடவுளை நேரடியாக சென்றடையும் விதமாக பழனி முருகனுக்கு சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து ஆகியவை நாட்டியமாக ஆடி முருகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்ட இந்த நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.

    நாட்டிய உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய நாட்டிய கலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை கலைமாமணி முரளிதரன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுந்தரேச குருக்கள், ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். 

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
    • இன்று 10.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று 10.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
    • கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த கூட்டம், அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுக்க சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா உள்ளிட்டவைகளால் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். ஜி.எஸ்.டி.-யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் செய்வோர் தங்களது தொழிலை செய்ய முடியாத சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்."

    "கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்," என்று தெரிவித்தார். 

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .

    தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.

    இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
    • இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.

    காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு மார்க்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வலா, நீதிபதி மரகத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் மற்றும் வேளான் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசு உரிமம் வழங்காத காரணத்தால், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்த பணியும் துவங்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்கள் மேம்பாட்டு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி இருக்கிறது.

    அந்த சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×