search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell phone app"

    • லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம், மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் வீடியோக்களில் விளம்பரம் பார்த்தால் தினமும் சராசரியாக ரூ.5 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஒண்டிப்புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டடோர், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ஒருசிலர் சமூகவ லைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் உள்ளார். எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டுமென கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் சக்தி ஆனந்தன் மீது போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவுசெய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த சிலரை போலீசார் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இன்றும் பலர் வ.உ.சி பூங்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை தனியார் நிறுவனத்தின் இணையதள செயலியை மாநகர போலீசார் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த செயலி மீண்டும் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் அந்த இணைய செயலி மூலம் வாடிக்கையாளர் மேலும் சேர முடியாத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    • கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
    • சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 6 பேர் சிக்கினர்

    இதனை அறிந்த அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றனர். அந்த கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அந்த கும்பல் தப்பிச்சென்ற காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 6 பேரையும், காருடன் சேர்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வாசுதேவநல்லூர் அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்(வயது 19), கனகராஜ் மகன் சதீஷ் (20), சிவகிரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கவிக்குமார்(21), ராமர் மகன் கனகராஜ் (22) ஆகிய 4 பேருடன் 17 வயது இளஞ்சிறார்கள் 2 பேர் என்பது தெரிய வந்தது.

    அந்த கும்பல் சிவகிரி பகுதியில் செல்போன் செயலி மூலம் வாலிபர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் பணத்தை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிப்பதை இவர்கள் வாடிக்கையாக செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்கணக்கீட்டாளர் மொபைல் போனில் கணக்கீட்டு செயலியை பதிவேற்றிக்கொள்ளலாம்.
    • சி.டி., (கரன்ட் டிரான்ஸ்பார்மர்) மின் இணைப்புகளில் கணக்கீடு செய்யும் பணி இம்மாதம் தொடங்கியுள்ளது.

    திருப்பூர்:

    மின் வாரியம் சார்பில் ஆண்டுக்கு 6 முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. மின் கணக்கீட்டாளர், மின் கணக்கீட்டு கருவியுடன் சென்று மின்மீட்டரில் உள்ள தகவலை பதிவு செய்கின்றனர். அலுவலகம் சென்று, ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். பின்னரே மின்நுகர்வோருக்கு மின் கட்டணம் எவ்வளவு என்பது தெரியவரும்.

    மின் கணக்கீட்டு பணியை எளிதாக்கும் வகையில், மொபைல் செயலி மூலம் தற்போது மின் கணக்கீடு சோதனை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. மின்கணக்கீட்டாளர் மொபைல் போனில் கணக்கீட்டு செயலியை பதிவேற்றிக்கொள்ளலாம்.

    ஆப்டிக்கல் கேபிள் எடுத்துச்சென்று, மின்மீட்டர் மற்றும் மொபைல்போனுடன் இணைத்தால் உடனுக்குடன் மின் பயன்பாடு, செலுத்த வேண்டிய கட்டண விவரம், மின்வாரிய இணையதளத்திலும், மின் நுகர்வோருக்கும் சென்றுவிடுகிறது.அனைத்து மாவட்டங்களிலும், முதல்கட்டமாக, சி.டி., (கரன்ட் டிரான்ஸ்பார்மர்) மின் இணைப்புகளில் கணக்கீடு செய்யும் பணி இம்மாதம் தொடங்கியுள்ளது. விரைவில் இதை முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார்.
    • கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார்.

    ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார்.

    இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலியாஸ் மேலும் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
    • தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது52). சேலத்தை சேர்ந்த இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது செல்போன் செயலியில் பகுதி நேர வேலை தேவையா என்ற விளம்பரம் வந்துள்ளது.

    இதைப்பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசினார். அப்போது அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அது உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு செய்தால் கமிஷன் தருவதாகவும் தங்க துரையிடம் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து முதலில் ரூ.1,100, ரூ.1,500 லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்துள்ளனர். பின்னர் அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை செய்யும்படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து தங்கதுரை அவர்கள் கூறிய வலைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 91 ஆயிரத் 54-ஐ தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து தேசிய சைபர் கிரைம் பிரிவு தளத்தில் புகார் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்கதுரையிடம் பணம் மோசடி செய்தது நெல்லை மாவட்டம் மானூர் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த எலியாஸ் பிரேம் குமார் (வயது31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

    விசாரணையில் எலியாஸ் பிரேம்குமார் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தி உள்ளதும், அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூ.25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் எலியாஸ் மேலும் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரிடமிருந்து லேப்டாப், செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்பு களையும் பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டிய எஸ்.பி. பாலாஜி சரவணன் கூறும்போது, இதுபோன்று பல்வேறு சைபர் குற்றங்கள் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே இது போன்றவற்றை நம்பி பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

    • 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.
    • 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பை பூஜ்யமாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை பிரத்யேக மொபைல்போன் செயலி வாயிலாக கண்காணிக்கும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில், கர்ப்பிணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பார்க்கலாம். பிரச்னைக்குரிய கர்ப்பிணிகளை அடையாளம் கண்டு எளிதில் கண்காணிக்க முடியும்.

    ஒவ்வொரு மாதமும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து உரிய ஆலோசனைகள், சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். இதனால் கர்ப்பகாலங்களில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • செல்போன் செயலிகள் மூலம் வங்கி விவரங்கள் திருட வாய்ப்பு உள்ளது.
    • www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது வங்கிக் கணக்கில் மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் மோசடி செய்து ரூ.85 ஆயிரத்து 798-ஐ 3 தவணைகளாக எடுத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கம் செய்து ரூ.72 ஆயிரத்து 99-ஐ மீட்டனர். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மீட்கப்பட்ட பணத்தை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:

    பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தும் செல்போன்களை கவனமாக கையாள வேண்டும், மேற்படி சம்பவம் செல்போனில் மனுதாரரின் மகன் கேம் ஆப்பை டவுன் லோடு செய்து அதில் வந்த தேவையற்ற லிங்கை தொட்டதால் தான் வங்கி விபரங்கள் லிங்க் மூலம் செல்போனில் உள்ள வங்கி விபரங்கள் திருடி உள்ளதாக தெரிகிறது. தேவையற்ற அப்ளிகேஷன் நமது செல்போனில் பயன்படுத்துவதால் நமது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருட வாய்ப்புள்ளது ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றங்கள் நடந்து விட்டதாக கருதினால் உடனே சைபர் கிரைம் உதவி 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகாரை பதிவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர்.
    • சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சுதாவிற்கு கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர். அதை உண்மை என்று நம்பிய சுதா அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுதாவிடம் பிரேம் குமார் மற்றும் சுனில் குமார் என்ற பெயரில் மர்ம நபர்கள் பேசினர். உடனே அவர்கள் கூப்பனில் உள்ள பரிசு தொகையை பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி பெற வேண்டும் என்று கூறி அதற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். 

    இதனையடுத்து சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார். பின்னர் போனில் பேசிய நபர்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால பாதிக்கப்பட்ட சுதா நேஷனல் க்ரைம் ரிப்போர்ட்டிங் கோர்ட்டில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடலூர் மாவட்ட இணையவழி குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
    • புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., - மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    பாய்ன்ட் ஆப் சேல் மெஷினை நிறுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வதற்காக பிரத்யேக செயலி உணவு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சக்ரபாணி, அறிமுகப்படுத்தினார். இதையடுத்து திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளின் செல்போனில் இந்த செயலி நிறுவப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    ரேஷன் கடைக்கு செல்லும் ஆய்வு அதிகாரி தனது செல்போன் செயலியில், யூசர்நேம், பாஸ்வேர்டு அளித்து, புதிய ஆய்வுக்கான பகுதியை உருவாக்குவார். மாவட்டம், தாலுகா, ரேஷன் கடை எண் விவரங்களை அளிப்பார். உடனடியாக கடை பொறுப்பாளர் பெயர், கடை அமைவிடம் உள்பட முழு விவரம் காட்டப்படும்.

    பொருட்கள் இருப்பு, கடை குறித்த ஆய்வு, இதர ஆய்வு என்கிற 3 பிரிவில் ஆய்வு மேற்கொள்ளலாம். பொருட்கள் இருப்பு பிரிவை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட பொருளின் பெயரை அதிகாரி பதிவு செய்வார். உடனடியாக அந்த கடையின் பாய்ன்ட்ஆப்சேல் மெஷினில் பதிவாகியுள்ள விவரங்கள் அடிப்படையில் விற்பனை, பொருட்கள் இருப்பு ஆகியன செயலியில் காட்டப்படும்.

    நேரடி ஆய்வுமூலம் குறிப்பிட்ட அளவில் பொருள் இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு முரண்பாடு இருப்பின், அவ்விவரங்களையும் அபராத தொகையையும் செல்போன் செயலியிலேயே ஆய்வு அதிகாரி பதிவு செய்து விடுவார்.

    இதேபோல் ரேஷன் கடை சரியான நேரம் இயங்குகிறதா, பணியாளர், மின் இணைப்பு, எலக்ட்ரானிக் தராசு, பொருள் இருப்பு, பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் செயல்பாடு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து ஆம், இல்லை என பதிவு செய்யும் வசதியும் உள்ளது.செயலியை பயன்படுத்துவது எளிதாக புரிந்து கொள்ள படவிளக்கத்துடன் கூடிய விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளன.குறைகள் கண்டறிந்து களையப்பட்ட பின், ரேஷன் கடை ஆய்வுகள் முழுமையாக இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்கின்றனர் வழங்கல் பிரிவு அதிகாரிகள்.

    ×