search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக இளைஞரணி அமைப்பாளர்களுடன் பாராளுமன்ற தொகுதி நிலவரம் பற்றி கருத்து கேட்கிறார்- அமைச்சர்
    X

    திமுக இளைஞரணி அமைப்பாளர்களுடன் பாராளுமன்ற தொகுதி நிலவரம் பற்றி கருத்து கேட்கிறார்- அமைச்சர்

    • கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிய தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட வாரியாக கருத்து கேட்டு வந்தனர்.

    கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இந்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடத்தினார்கள்.

    அப்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கூறும்போது யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும். கோஷ்டி பிரச்சினைகளை தேர்தலுக்கு பிறகு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க அழைக்கப்படவில்லை. அவர்களிடம் தனியாக கருத்து கேட்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

    அதன்படி இப்போது வருகிற 14-ந் தேதியும், 15-ந் தேதியும் தி.மு.க. இளைஞரணி மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்கும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தாங்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழகப்பணிகள் குறித்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    14-ந் தேதி மாலை சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதே போல் மண்டலம் 2-ல் இடம் பெற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அன்றைய தினம் பார்த்து பேசுகிறார்.

    15-ந் தேதி காஞ்சிபுரம் வடக்கு தெற்கு மாவட்டங்கள் வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மண்டலம் 4-ல் உள்ள மாவட்ட அமைப்பாளர்கள் 15-ந் தேதி பங்கேற்க உள்ளனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து பேசுவதுடன் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து கேட்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×