என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    லோகேஷ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் அங்கு பணியில் இருந்தனர். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த போது லோகேஷ்வரனுக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கும் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஷ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து லோகேஷ்வரனின் உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதன் பின்பு உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

    • ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர்.
    • அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றனர்.

    கட்சி தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் தமிழக குழுவினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர்.

    இதற்கிடையில் அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள். மீண்டும் வருகிற 11-ந்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். மறுநாள் 12-ந்தேதிக்குள் தமிழக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதுவரை ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்ட தொகுதிகளும் அதில் பரீசிலிக்கப்பட்ட வேட்பாளர்கள் பெயர் விபரமும் கசிந்து உள்ளது.


    கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி.

    கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பா.ஜனதா தலைவர் அண்ணாமலை.

    நீலகிரியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, கடலூரில் சாய் சுரேஷ், அஸ்வத்தாமன், விழுப்புரத்தில் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, திருவள்ளூர் பொன் பால கணபதி, மதுரையில் மகாலெட்சுமி, நெல்லையில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் கரு.நாகராஜன், கிருஷ்ணகிரியில் கே.எஸ். நரேந்திரன், முன்னாள் எம்.பி.நரசிம்மன், நாமக்கல்-கே.பி.ராமலிங்கம், பொள்ளாச்சி-ஏ.பி.முருகானந்தம், திருப்பூர்-கனகசபாபதி, ராம்நாடு-தேவநாதன், கருப்பு முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூர்-காயத்ரி தேவி, சுமதி வெங்கடேஷ், காஞ்சிபுரம்-மா.வெங்கடேசன், சிதம்பரம்-தடா பெரியசாமி, அரக்கோணம்-எம்.கே.ரவிச்சந்திரன்.

    வடசென்னை-பால் கனகராஜ், ஏ.என்.எஸ். பிரசாத், மத்திய சென்னை-குஷ்பு, வினோஜ் செல்வம், தென்சென்னை-எச்.ராஜா, எஸ்.ஜி.சூர்யா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

    • பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகின்றனர்.
    • தென் மாவட்டங்களில் தனி தொகுதியாக இருப்பது தென்காசி தொகுதி மட்டுமே.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய கட்சியான பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளது என அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உறுதிப்படுத்திய நிலையில் அவருடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளோம். மக்களவை மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றில் தலா ஒரு சீட் கேட்டு உள்ளோம். மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விருப்பத்தொகுதி என 3 தொகுதிகளை கொடுத்துள்ளோம்.

    அதில் தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகுதியும் அடங்கும். பெரும்பாலும் தென் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை தெரிவித்து விட்டோம். விரைவில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.


    தென் மாவட்டங்களில் தனி தொகுதியாக இருப்பது தென்காசி தொகுதி மட்டுமே. எனவே அந்த தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டபோது, தனி தொகுதியில் தான் நிற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எந்த தொகுதியிலும் நிற்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

    தென்காசி தொகுதியில் தற்போது தி.மு.க.வை சேர்ந்தவர் எம்.பி. ஆக இருந்து வருகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

    இதேபோல் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வென்றுள்ளன. இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதால் அக்கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு விஸ்வை ஆனந்தன், பொன் பால கணபதி, வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளிட்ட பலரும் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் ஜான்பாண்டியனும் தென்காசி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

    இதனால் அவருக்கு அந்த தொகுதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு இல்லை எனில் நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படலாம் என்று அக்கட்சியினரின் மத்தியில் பேசப்படுகிறது.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    இதற்காக நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோவிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து புறப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சாமிபெட்டி அழைப்புடன் நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் ஊர்வலம் தொடங்கி மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து 7 வருடத்திற்கு ஒருமுறை மாட்டு டயர் வண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக அனைவரும் மாசிமகா சிவராத்திரி விழாவுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாங்கள் சலங்கை கட்டிய மாட்டுடன் பாரம்பரிய முறையில் செல்கிறோம்.

    இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இந்த பயணம் வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்றனர். இதனை வழிநெடுகிலும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரித்துடன் கண்டு ரசித்தனர்.

    • நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை.
    • எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.

    சென்னை :

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும்.

    எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம்.

    சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 50 காசுக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79-க்கும் பார் வெள்ளி ரூ.79 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்தே உயர்ந்து கொண்டே செல்கிறது. 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி ரூ.200-ம், நேற்று ரூ.400-ம் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,105-க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,840-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 காசுக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79-க்கும் பார் வெள்ளி ரூ.79 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

    கோவை:

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

    இதற்காக ஜகதீப் தன்கர் இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் சாலை மார்க்கமாக ஜகதீப் தன்கர் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். மாலை 5.40 மணி முதல் இரவு 7 மணி வரை அவர் அங்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் மீண்டும் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


    ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்கிறார்கள்.

    இதுதவிர மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன.
    • ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மைசூரு வரை சென்று வருகிறது.

    தமிழக-கர்நாடக மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. சென்னை-பெங்களூரு இடையே உள்ள 362 கி.மீ.தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது.

    சதாப்தி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 40 நிமிடங்களில் செல்கிறது. வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    தற்போது உள்ள வந்தே பாரத் ரெயிலை விட புதிதாக விடப்போகும் வந்தே பாரத் ரெயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகின்றன. வெள்ளை மற்றும் நீல கலரில் தற்போது ஓடும் வந்தே பாரத் ரெயிலுக்கு பதிலாக 'ஆரஞ்சு' மற்றும் 'கிரே' கலரில் வெளிவருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் ரெயிலை வருகிற 12-ந்தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை மங்களூரு வரை நீட்டிப்பு செய்து சேவையை தொடங்கி வைக்கிறார். இது தவிர தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு முக்கிய ரெயில்வே திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிய வந்தே பாரத் ரெயிலில் இருக்கைகள் மேலும் சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்சிகியூடிவ் சேர் காரில் பயணிகள் கால் வைப்பதற்கான வசதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய வந்தே பாரத் ரெயிலை பெங்களூரில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த ரெயிலுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
    • 4 கால பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் 8 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆடி, தை, அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதன்படி இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர். மலைப்பாதையில் உள்ள சங்கிலிப்பாறை, வழுக்குபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து விட வேண்டு மென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை, சதுரகிரி கோவில் பகுதிளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள். ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அடித்தளமிட்டது.
    • படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள்.

    சென்னை:

    சென்னை கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துகுமரப்பா சாலையில் நடைபெற்ற விழாவில் அனிதா அச்சீவா்ஸ் அகாடமியில் பயின்ற மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

    மேலும், பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினாா். விழாவில் அவா் பேசியதாவது:-

    தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் 'நான் முதல்வன்' திட்டத்துக்கு அடித்தளமிட்டது அனிதா அச்சீவா்ஸ் அகாடமிதான். இங்கு 10 குழுக்களைச் சோ்ந்த பெண்களும், 6 குழுக்களைச் சோ்ந்த ஆண்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.


    சிறந்த அடிப்படை கட்டமைப்புகளையும் திட்டங்களையும் நிறைவேற்றி கொளத்தூா் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக, முன் மாதிரி தொகுதியாக ஆக்கி இருக்கிறோம். இதுபோன்று செய்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்களை அழைத்து வந்துள்ளேன்.

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் முன்னேறி வரக்கூடிய தருணங்களில் அவா்களுக்கு தடைகள் பல வரும். அந்தத் தடைகளை நியாயப்படுத்தவும் பலா் இருப்பாா்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள். இவற்றை கடந்துதான், நாம் முன்னேறியாக வேண்டும்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பவா்கள் பெண்கள். அத்தகைய பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றமடைய ஊக்கமளிக்கும் நாளாக, மகளிா் தினத்தைக் கொண்டாடுகிறோம்.


    திராவிட மாடல் அரசு என்பது மகளிா் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களைத் தீட்டியும், பல சாதனைகளையும் செய்து வருகிறது. நீங்களும் (பெண்களும்) தமிழ்நாடும் முன்னேற்றம் அடைந்தால்தான் எனக்கும், அரசுக்கும் பெருமை. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் திட்டங்களை எவ்வளவோ செய்தாலும் மத்திய அரசு ஒத்துழைப்போ நிதியுதவியோ தருவதில்லை. நாம்தான் செய்து வருகிறோம்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத, அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் மத்திய அரசு அமைந்தால்தான் இன்னும் நிறைய திட்டங்களைச் செய்ய முடியும். அதற்கு உங்களுடைய அனைவரின் ஆதரவும் தேவை. நீங்கள் ஒவ்வொருவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்களுடைய குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிடச் செய்ய, மக்களவைத் தோ்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பி.கே. சேகா்பாபு, சென்னை மேயா் பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    ×