search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 times Pooja. Chaturagiri Sundara Mahalingam temple"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
    • 4 கால பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் 8 நாட்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆடி, தை, அமாவாசை நாட்களிலும், மகா சிவராத்திரி அன்றும் சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதன்படி இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர். மலைப்பாதையில் உள்ள சங்கிலிப்பாறை, வழுக்குபாறை, மாங்கனி ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து விட வேண்டு மென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கி ஆடுகளை பலியிட்டு அன்னதானம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை, சதுரகிரி கோவில் பகுதிளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்துவார்கள். ஆனால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி வழங்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×