என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.
- செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இப்போது இல்லை.
ஓ.பன்னீர் செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்காக ஓ.பி.எஸ். எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இதனால் அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இதனால் எந்த வழியில் பயணிப்பது என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் திசை தெரியாமலேயே அவருடன் பயணித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் சிறப்பாக அமையவும், தனக்கு முன்னால் நிற்கும் தடைகள் தவிடு பொடியாகவும் குலதெய்வம் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்தான் தனது அரசியல் முடிவுகள் பலவற்றை அவர் எடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகளின் போதும் குலதெய்வமான வனப் பேச்சியம்மனை வழிபட்டு விட்டுத்தான் தனது செயல்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார்.
அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போதைய அரசியல் சூழல் சாதகமானதாக இல்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது?
அரசியல் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்வது? என்பது போன்ற எந்த முடிவுகளையும் அவரால் எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் அதிகாரப்பூர்வமான ஒரு கட்சி அவரிடம் இல்லை. எனவே அரசியல் களத்தில் தடுமாற்றமான நிலையிலேயே ஓ.பி.எஸ். உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் சாய முடிவு செய்து உள்ள ஓ.பி.எஸ். தாமாகவே முன்வந்து பா.ஜனதா ஆத ரவு கோஷத்தை எழுப்பி வருகிறார். ஆனால் பா.ஜ னதா தலைவர்களின்
காதுகளுக்கு போய் இன்னும் அது எட்டாமலேயே உள்ளது.
இதனால் பாரதிய ஜனதா கட்சி ஓ.பன்னீர்செல்வத்தை தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ளுமா? இல்லை அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுமா? என்பதும் மிகப் பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது.
இதற்கெல்லாம் விடை காணும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் குலதெய்வ கோவிலான வனப் பேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து ஓ.பி.எஸ். பூஜைகளை செய்து உள்ளார். அப்போது கோவிலில் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓ.பி.எஸ். குலதெய்வ வழிபாடு அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது.
- கலைஞர் அருங்காட்சியகத்துக்கு சென்ற வடிவேலு அதனை புகழ்ந்து பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சனம் செய்தார். தி.மு.க. கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் விஜயகாந்த், அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். இந்த கூட்டணி வெற்றியும் பெற்றது.
வடிவேலுவின் பிரசாரம் எடுபடாமல் போனது. தி.மு.க. கூட்டணி தோல்வியையே தழுவியது. இதன் பின்னர் வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டது. "இனி எனக்கு அரசியலே வேண்டாம்" என்று வடி வேலுவும் ஒதுங்கினார்.
அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் வடிவேலு காமெடியாகவே பதில் அளித்து விட்டு நழுவுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் வடிவேலு சமீப காலமாகவே தி.மு.க. வுடன் நெருக்கமாக உள்ளார். கருணாநிதி தொடர் பான நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மெரினாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்துக்கு சென்ற வடிவேலு அதனை புகழ்ந்து பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து வடிவேலு 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அவருடன் பேசி வருவதாகவும் தெரிகிறது.
இதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் களத்தில் வடிவேலு தி.மு.க.வை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது போன்று வடிவேலு பிரசாரத்தில் ஈடுபடும் பட்சத்தில் மத்திய அரசையும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை விமர்சித்தும் வடிவேலு பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
- ஒரு சீட் மட்டுமே இழுபறியில் இருப்பதால் தி.மு.க. விட்டுக் கொடுத்து விடும் என்று நம்பிக்‘கை’யோடு காங்கிரஸ் காத்திருக்கிறது.
சென்னை:
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது.
5 தொகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது புதுவை உள்பட 9 தொகுதிகள் வழங்க தி.மு.க. தரப்பில் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் கடந்த தேர்தலை போல் 10 சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருக்கிறது.
தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
காங்கிரசுடன் மட்டுமே உடன்பாடு ஏற்பட வேண்டும். ஒரு சீட் மட்டுமே இழுபறியில் இருப்பதால் தி.மு.க. விட்டுக் கொடுத்து விடும் என்று நம்பிக்'கை'யோடு காங்கிரஸ் காத்திருக்கிறது.
எப்படியும் அடுத்த வாரம் டெல்லி பிரதிநிதிகள் வருவார்கள். உடன்பாடு ஏற்பட்டு விடும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
- தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தினவிழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டின் பேரில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 76 கிலோ கேக் வெட்டி மகளிர் அணியினருக்கு வழங்கினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது. இது பற்றி நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். பள்ளி கல்லூரிகளின் அருகில் போதை பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும் அதனை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
ஆனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தடுக்க தவறிவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 15-ந் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருட்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த போதை பொருள் கடத்தலில் தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக்குக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அவர் மீது ஏற்கனவே 26 வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் குடும்பத்துடனும், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் அவர் நெருங்கி பழகியிருப்பது வேதனையானது.
இந்த விவகாரம் பற்றியும் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு பற்றியும் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அமைப்பு செயலாளரை வைத்து பேச வைத்துள்ளார்கள். இது ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் தொடர்ச்சியாக போதை பொருட்கள் பிடிபடுகிறது. உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்களிடம் இருந்து 500 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இல்லையா? சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய முதலமைச்சர் 'பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்றதாக 2,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒத்துக் கொண்டார். அதில் 145 பேர் மட்டுமே கைதாகி இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் தான் இப்போது பிடிபட்டு கொண்டிருக்கிறார்களா? தமிழக காவல் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாகி விட்டது.

இந்த ஆட்சியில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் நடக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் சீரழிகிறார்கள். கடலோர காவல் படையினரும் போதை பொருட்களை பிடிக்கிறார்கள். நாமக்கல்லிலும் 10 ஆயிரம் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. டெல்லியில் மத்திய அதிகாரிகள் நடவடிக்கைக்கு பிறகுதான் இங்கு போதை பொருட்கள் பிடிபடுகிறது.
எனவே தமிழக அரசு போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் விரைவில் கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
மேலும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழக அரசால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாத நிலையில்தான் 'நீங்கள் நலமா?' என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
(கூட்டத்தினரை பார்த்து நீங்கள் நலமா இருக்கிறீர்களா என்று கேட்டார்).
இந்த ஆட்சியில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நாட்டு மக்களை பார்த்து நலமா? என்று எப்படி கேட்க முடியும்.
தமிழக முதல்வர் செயல்படாத பொம்மை முதலமைச்சராக உள்ளார். போதை பொருள் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
- நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
சென்னை :
நடிகர் அஜித்குமார் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
இதையடுத்து சாதாரண வார்டில் உள்ள நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 8, 2024
நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.#Ajithkumar
- சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
- சங்கு நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்று வதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெப்பக்குளத்தில் சங்கு தோன்றியது. அதன்பின்னர் நேற்று காலை அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி வெளியே வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக தோன்றிய சங்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறிய பல்லக்கில் மேள தாளத்துடன் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.
பின்னர் பக்தர்கள் பார்வைக்காக அங்கு சங்கு வைக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிவரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கை பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
இன்று சிவராத்திரி என்பதால் காலை முதலே கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தோன்றிய சங்கை பார்க்க ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் சங்கை பார்த்து வழிபட்டு சென்றனர்.
உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் சங்கை பார்க்க வருவதால் வருகிற 13-ந் தேதி வரை சங்கு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சங்கை சுற்றி பூ அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு தாழக்கோவில் கிழக்கு கோபுரம் மின்வி ளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சங்கு தரிச னம் நடைபெறும் நாட்கள் வரை கோபுர மின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
- தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
கடல் வளத்தை அழிக்கும் இழுவை மடியை தடை செய்ய வேண்டும். மீன்பிடி சட்டம் 1983 பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழ்வேளூர், நாகை தாலுகாவை சேர்ந்த 19 கிராம பைபர் படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மீனவர்களின் போராட்டம் 12-வது நாளாக நீடித்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தால் ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் ரேசன், ஆதார் கார்டுகளை ஒப்படைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
- பஸ்கள் இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர்.
- கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர்.
கடலூர்:
புதுச்சேரியில் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்தபோதும் கடலூரில் இருந்து கன்னியகோயில், மகாத்மா காந்தி, ரெட்டிச்சாவடி வரைக்கும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது.
பஸ்கள் இயங்காத காரணத்தினால் இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் சென்று வந்தனர். இதில் கன்னியகோவிலுக்கு 30 ரூபாயும், மகாத்மா காந்தி கல்லூரி வரை 50 ரூபாயும், ரெட்டிச்சாவடி வரை 80 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு பயணிகளை ஏற்றி சென்று வருவதாக கூறப்படுகிறது.
ஏராளமான பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் கூடுதல் தொகை என்றாலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.
பழனி:
பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.
- அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் கிராமத்தில் காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருஉருவ சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காட்டாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா. இவர் இக்கிராமத்தில் ஓம்சக்தி ஆலயம் கட்டி அதனை பராமரித்து வருகிறார்.
யூ டியூபில் விடியோ பதிவிட்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில் இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் கொண்ட பற்று காரணமாக அவரின் 5 அடி திருஉருவ சிலை நிறுவி, இன்று அச்சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தார்.
காட்டாகரம் பகுதியில் விஜயகாந்துக்கு திருஉருவ சிலை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உருவ சிலைக்கு கும்பாபிஷேகம் செய்து அதனை யூடியூபில் மட்டுமே வெளியிட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.
திருப்பூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
கும்பாபிஷேக விழா மேள தாளங்களுடன் நிறைவடைந்த நிலையில், விஜயகாந்துக்கு கற்பூர தீபாராதனை செய்து தொண்டரகள் வழிபட்டனர். அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.
- 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை:
திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் வட்டங்களில் 196 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச் சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 108 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம்-முடிச்சூர்-ஸ்ரீபெரும்பத்தூர் நான்கு வழிச் சாலை; மதுராந்தகம் உத்திரமேரூர் வட்டங்களில் 54 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புக்கத்துரை உத்திரமேரூர் நான்கு வழிச் சாலை; திருவண்ணாமலை வட்டத்தில் 140 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலூர் சித்தூர் நான்கு வழிச்சாலை; திருத்தணி நாகலாபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 18 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் 518 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

219 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்ப்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவிக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
- கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
- தேர்தல் நெருங்குவதையொட்டி, கோவை மாவட்டத்தில் 3,077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் தேர்தலுக்கான பணிகள் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த 10 சட்டமன்ற தொகுதிகளும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
தேர்தல் நெருங்குவதையொட்டி, கோவை மாவட்டத்தில் 3,077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 18 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், விவிபேட் எந்திரங்கள், ரசீதுகள் அச்சடிப்பதற்கான பேப்பர் உருளைகள், பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோவை மாவட்டத்திற்கு வந்தார்.
இன்று மதியம் 12 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அதிகாரியான டி.ஆர்.ஓ. ஷர்மிளா, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது. பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப் பட்டுள்ளனவா? தேர்தல் முன்னேற்பாடு பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.






