என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று கோவையில் ஆய்வு- அதிகாரிகளுடன் ஆலோசனை
- கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
- தேர்தல் நெருங்குவதையொட்டி, கோவை மாவட்டத்தில் 3,077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் தேர்தலுக்கான பணிகள் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த 10 சட்டமன்ற தொகுதிகளும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
தேர்தல் நெருங்குவதையொட்டி, கோவை மாவட்டத்தில் 3,077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 18 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், விவிபேட் எந்திரங்கள், ரசீதுகள் அச்சடிப்பதற்கான பேப்பர் உருளைகள், பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோவை மாவட்டத்திற்கு வந்தார்.
இன்று மதியம் 12 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அதிகாரியான டி.ஆர்.ஓ. ஷர்மிளா, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது. பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப் பட்டுள்ளனவா? தேர்தல் முன்னேற்பாடு பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.






