என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார்.
    • தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.

    ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், செயலி முடங்கியுள்ளது.

    வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியுள்ளது.

    • மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.
    • 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கி தொடங்கியது. மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

    மேலும், துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஈஷா யோக மையத்தில் தொடங்கியுள்ள மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்றுள்ளனர்.


    • 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நேற்று நியமனம் செய்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

    இதன் முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நான் பதிவு செய்துவிட்டேன், நீங்களும் பதிவு செய்ய வேண்டும்" என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும்,"வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்" எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. அரசு சிலிண்டர் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.
    • உதயநிதி ஸ்டாலின் ஏன் ஜாபர் சாதிக் உடன் உள்ள போட்டோவை நீக்கி உள்ளார். இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பதில் சொல்ல வேண்டும்.

    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள கட்சி தலைவர்களை சந்திக்க சென்று இருந்தார். இந்தநிலையில் இன்று காலை அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் மட்டும் பெண்களுக்கு சிறந்த நாள் இல்லை. வருடத்தில் அனைத்து நாளும் பெண்களுக்கு சிறந்த நாள் தான். பெண்கள் தான் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    மோடி அரசு பெண்கள் தினத்தை முன்னிட்டு, சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தி.மு.க. அரசு சிலிண்டர் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை 100 ரூபாய் கூட குறைக்கவில்லை.

    ஜாபர்சாதிக் தி.மு.க.வின் அயலக அணியில் இருந்து கொண்டு அதை வைத்து போதை பொருட்களை கடத்தி உள்ளார். இது குறித்து தி.மு.க. வினர்தான் பேச வேண்டும். ஆனால் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலை பேச வைத்து உள்ளனர். ஜாபர் சாதிக் விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யை பலிகடாவாக தி.மு.க.மாற்றி உள்ளது. இதே போல் தான் சைலேந்திரபாபுவை வைத்து கோவை குண்டுவெடிப்பில் சிலிண்டர் வெடிப்பு என்று பேச வைத்தனர். உதயநிதி ஸ்டாலின் ஏன் ஜாபர் சாதிக் உடன் உள்ள போட்டோவை நீக்கி உள்ளார். இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பதில் சொல்ல வேண்டும். மார்ச் 22-ந்தேதிக்கு பிறகும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு பலமுறை வர உள்ளார். இதைப்பற்றி பின்னர் விவரமாக தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீத ஆக உயர்ந்திருக்கிறது.
    • அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீத ஆக உயர்ந்திருக்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை.

    மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டுவிட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆனந்தை வீழ்த்தி இரண்டாவது பட்டம் வென்றார் மஹிபால் சிங்.
    • பட்டம் வென்ற மஹிபால் சிங்கிற்கு பரிசளித்த விஜே அஞ்சனா.

    சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் (LetsBowl) மையத்தில் 2வது நெரோலக் பெயிண்ட் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2024 நடைபெற்றது.

    இதன் இறுதிப் போட்டியில் மகிபால் சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த் பாபுவை (399-394) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில் ஆனந்த் பாபு, மஹிபால் சிங்கை விட ஒரு பின் என்ற மெல்லிய வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார்.

     


    2வது போட்டியில், மஹிபால் 4 பின்களில் ஆனந்தை வீழ்த்தி, 5 பின்களின் (399-394) குறுகிய வித்தியாசத்தில் இந்த ஆண்டின் இரண்டாவது பட்டத்தை வென்றார்.

    6 போட்டிகளில் அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (234.67)

    18 போட்டிகளுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (220.17)

    இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வி.ஜே.அஞ்சனா ரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    • கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.
    • பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

    பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதில், பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    மேலும், பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
    • மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்திருப்பதால் நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300 - ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம் 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தினால் பெரும் பயனடைவார்கள். பிரதமர் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் நலன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஹோலி பண்டிகையையொட்டி ரெயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை- நாகர்கோவில் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

      சென்னை:

      அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளரிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

      கேள்வி:-பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுகிறதா?

      பதில்:-அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பும் கட்சிகள் எங்களோடு இணைந்து வருகின்றன.

      தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளது. நீங்கள் கேட்பது பற்றி (பா.ம.க.பற்றி) ஏற்கனவே சி.வி.சண்முகம் விளக்கியிருக்கிறார்.

      எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ப்பு நடந்தாலும் வெளிப்படையாக சொல்வோம். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி உருவாக்கி பொதுவான தொகுதி உடன்பாடு ஏற்படுத்தப்படும்.

      கேள்வி:-பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று கூறினாலும் அவர்கள் அ.தி.மு.க.வுக்கான கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக கூறி வருகிறார்களே?


      பதில்:-அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்தோம். அதை திரும்ப திரும்ப தெளிவு படுத்தி வருகிறோம். ஆனால் நீங்கள் திரும்ப திரும்ப அதை கேட்பதால் தி.மு.க. வும், முதலமைச்சரும் கூட அதுபற்றி ஏதேதோ பேசுகிறார்கள்.

      கேள்வி:-திருமாவளவனும் அந்த கருத்தை கூறி உள்ளாரே?

      பதில்:-எங்கள் கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். இது நாங்கள் எடுத்த முடிவு. எனவே அவர் எங்களிடம் சொல்ல வேண்டாம்.

      கேள்வி:-அ.தி.மு.க. தலைவர்கள் முன்னிறுத்தி பிரதமர் மோடி ஆதரவு திரட்டுகிறாரே.

      பதில்:-எங்கள் கட்சியின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செய்த ஆட்சி அப்படி. எனவே அனைவரும் அவர்களை புகழ்கிறார்கள்.

      வருகிற தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று பாராளுமன்றத்தில் தமிழக மக்கள் குரல் எழுப்ப செய்வோம். தற்போதைய தி.மு.க. எம்.பி.க்கள் எதுவும் பேசவில்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.
      • செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது.

      சென்னை:

      அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இப்போது இல்லை.

      ஓ.பன்னீர் செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.

      அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்காக ஓ.பி.எஸ். எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிவடைந்துள்ளன.

      இதனால் அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இதனால் எந்த வழியில் பயணிப்பது என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் திசை தெரியாமலேயே அவருடன் பயணித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

      இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் சிறப்பாக அமையவும், தனக்கு முன்னால் நிற்கும் தடைகள் தவிடு பொடியாகவும் குலதெய்வம் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார்.

      ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்தான் தனது அரசியல் முடிவுகள் பலவற்றை அவர் எடுத்துள்ளார்.

      ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகளின் போதும் குலதெய்வமான வனப் பேச்சியம்மனை வழிபட்டு விட்டுத்தான் தனது செயல்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார்.

      அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போதைய அரசியல் சூழல் சாதகமானதாக இல்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது?

      அரசியல் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்வது? என்பது போன்ற எந்த முடிவுகளையும் அவரால் எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் அதிகாரப்பூர்வமான ஒரு கட்சி அவரிடம் இல்லை. எனவே அரசியல் களத்தில் தடுமாற்றமான நிலையிலேயே ஓ.பி.எஸ். உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் சாய முடிவு செய்து உள்ள ஓ.பி.எஸ். தாமாகவே முன்வந்து பா.ஜனதா ஆத ரவு கோஷத்தை எழுப்பி வருகிறார். ஆனால் பா.ஜ னதா தலைவர்களின்

      காதுகளுக்கு போய் இன்னும் அது எட்டாமலேயே உள்ளது.

      இதனால் பாரதிய ஜனதா கட்சி ஓ.பன்னீர்செல்வத்தை தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ளுமா? இல்லை அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுமா? என்பதும் மிகப் பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது.

      இதற்கெல்லாம் விடை காணும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் குலதெய்வ கோவிலான வனப் பேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து ஓ.பி.எஸ். பூஜைகளை செய்து உள்ளார். அப்போது கோவிலில் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

      அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓ.பி.எஸ். குலதெய்வ வழிபாடு அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

      ×