என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூர்:
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் எம்.பி.க்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து செல்வராஜ் எம்.பி. தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது செல்வராஜ் எம்.பி. நல்ல நிலையில் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
- 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.
- கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். அத்துடன் காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்தார்கள்.
ஆனால் தி.மு.க. தரப்பில் 5 பிளஸ் 1 என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.
பேச்சுவார்த்தை முழுவதும் டெல்லி தலைவர்களுடனேயே தொடர்ந்தது. தி.மு.க. தரப்பில் ஒரு கட்டத்தில் 6 பிளஸ் 1 என்று முடிவாக சொல்லியதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வடமாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுத்து பிடித்தது போல் தமிழகத்திலும் சிக்கல் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் காட்டியது. அதே போல் 12-ல் இருந்து குறைவாக சம்மதிக்கப் போவதில்லை என்று காங்கிரசும் பிடிவாதம் காட்டியது.
இதனால் உடன்பாடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. வரட்டும் பார்க்கலாம் என்று இரு தரப்பும் கொஞ்ச நாட்கள் விட்டு பிடித்தன.

இதற்கிடையில் 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.
இரண்டு தொகுதிகளுக்காக மல்லு கட்டிய வைகோவும் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.
அடுத்து காங்கிரஸ்தான் என்ற நிலையில் தி.மு.க. தலைவர்கள் நேற்று டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எல்லா கட்சிகளுக்கும் பழைய எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்து விட்டோம். எனவே நீங்களும் கூடுதல் தொகுதி வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள். பழைய எண்ணிக்கையில் அதாவது 9 பிளஸ் 1 தர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
தொகுதி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று மாலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜய்குமார் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.
விமான நிலையத்தில் இருந்து நேராக அறிவாலயம் செல்கிறார்கள். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடுகிறார்கள்.
இந்த உடன்பாட்டின் போது எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.
அதே போல திமு.க. தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தியதில் சில தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றும் அதனால் அந்த தொகுதியை மாற்றி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
தலைநகர் சென்னையிலும் ஒரு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக தென்சென்னை தொகுதியை கேட்கிறது. இது தி.மு.க. கைவசம் இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
- அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.08 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 34 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.10 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.34 அடியாகவும் குறைந்து உள்ளது.
- கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.
- கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை :
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி ரூ.200-ம், 7-ந்தேதி ரூ.400-ம், நேற்று ரூ.120-ம் உயர்ந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.
- பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
- வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஆறுகளில் தண்ணீர் வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் அனைத்தும் காய்ந்து இருக்கிறது. இந்நிலையில் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் அக்காமலை எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள வனத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், 7 ஏக்கர் மதிப்புள்ள செடி, தேயிலை, மரங்கள் போன்றவை எரிந்து சாம்பலாகியது,
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
- ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார்.
சென்னை:
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் மகாவீர் இரானி வசித்து வருகிறார். கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் சப்ளை செய்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் புறப்பட்டுச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
- உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.
கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.
மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.
கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.
- அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம்.
- ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
* அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம்.
* ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம்.
- அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
- பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அக்குழுவில் வைத்திலிங்கம், கிருஷ்ணன், பிரபாகர், மனோஜ் பாண்டியன், தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
- ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?
- அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.
மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.
ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?
தேர்தலுக்காக 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு கூட்டமாட்டோம் எனச் சொல்லட்டும். தேர்தலுக்காக குறைக்கிறேன் என்றால்... வேண்டாம் என்று சொல்லல.. மக்களுக்கு பயன்.

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட்டமாட்டேன் என்று பிரதமர் மோடி சொலலட்டும்.
இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
- நம் பாரத கலாச்சாரத்தில் மகா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஈஷா மகா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன்.
ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறினார்.
கோவை ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்கள் விழாவில் பேசியதாவது:-
சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மகா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன். நம் பாரத கலாச்சாரத்தில் மகா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழாவானது தனித்துவமானது; ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது. அத்துடன் ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்கங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சத்குரு அவர்கள் யோகாவை உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்
இவ்விழாவில் சத்குரு தொடக்க உரையாற்றுகையில், "இன்று நடைபெறும் மகாசிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30-வது மகா சிவராத்திரி விழாவாகும். 1994-ம் ஆண்டு நாம் நடத்திய மகா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார்.

இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது. கடந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகாசிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும். எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்." எனக் கூறினார்.
இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் மட்டுமின்றி அவரது மனைவி டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்த அவர்களை சத்குரு வரவேற்றார். பின்னர் அவர்கள் ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியான லிங்கம் உள்ளிட்ட சக்தி தலங்களுக்கு சென்று தரிசித்தனர். மேலும் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத க்ரியா நிகழ்விலும் பங்கேற்றனர்.
நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா இன்று காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருந்து, இது அனைவரையும் கவர்ந்திழுத்தது.
இரவு முழுவதும் களைகட்டிய கலை நிகழ்ச்சிகளில் கிராமிய விருது வென்ற பாடகர் சங்கர் மஹாதேவனின் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து தெய்வீகம், விவசாயம் மற்றும் மண் சார்ந்த பாடல்களை தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிர செய்தார் தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம்.
அதுமட்டுமின்றி மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடி மக்களின் உற்சாகத்தை பன்மடங்கு கூட்டினர். மேலும் லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
- பிரத்யேக உதவி எண் பெண்களால் இயக்கப்படுகிறது.
- ஆதரவு வழங்குவதற்காக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மகளிர் உதவி எண் 155370 முழுக்க முழுக்க பெண்களால் 24/7 முறையில் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற பின்க் ஸ்குவாட் என்ற பெண் பாதுகாப்பு பணியாளர்கள் குழு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.






