என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.
    • எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது.

    விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு இங்கு வந்துள்ளேன்.

    * பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம்.

    * அரசு நிகழ்ச்சியா அல்லது மண்டல மாநாடா என்று எண்ணக்கூடிய அளவுக்கு கூட்டம் இருக்கிறது.

    * கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம் என ஏராளமாக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

    * அனைத்து திட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    * கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதல்வர் நான்தான்.

    * திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி நடத்தி வருகிறார்கள்.

    * பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

    * கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக மதுரை போன்று நூலகம் அமைக்கப்படும்.

    * திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    * தென்னை நோய் பாதிப்புகளை களைய ரூ.14 கோடி நிதி வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

    * அகில இந்திய அளவில் தென்னை விற்பனைக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும்.

    * கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடி விற்பனை செய்யப்படும்.

    * உக்கடத்தில்ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.

    * குளிரூட்டப்பட்ட மஞ்சள் கிடங்குகள் அமைக்கப்படும்.

    * ஈரோடு மாவட்டத்தில் 8 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.

    * ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    * சமுதாய நலக்கூடங்கள் ரூ.11 கோடியில் சீரமைக்கப்படும்.

    * உதகை தாவரவியல் பூங்கா உலக தரத்தில் உயர்த்தப்படும்.

    * புதிதாக 2 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.

    * நான் ஒரு கோப்பில் கையெழுத்திட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.

    * 10 ஆண்டு ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா?

    * கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?

    * பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.

    * கொடநாடு கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது.

    * தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா விவசாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது?

    * அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.

    * ஒன்றிய அரசின் உதவி இன்றியே பல சாதனைகளை செய்கிறோம். உதவி இருந்தால் 10 மடங்கு சாதனைகளை செய்வோம்.

    * மோடி உத்தரவாதம் என்று கூறுகிறார். வேலைவாய்ப்பு குறித்த அளித்த வாக்குறுதி என்ன ஆனது?

    * அடுத்த வாரம் பிரதமர் வரும்போது, அவரிடம் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்.

    * எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?

    * மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார். பிரதமரின் கட்டுக்கதைகள் எடுபடாது என்று கூறினார்.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்றார்.
    • முதலமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

    வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு சென்றார்.

    விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அதனைதொடர்ந்து 4 மாவட்டங்களிலும் 273 முடிவுற்ற திட்டப்பணிகளையும் பொள்ளாச்சியில் இருந்தபடியே காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    மேலும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உள்ளார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவையொட்டி இன்று பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

    • மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
    • மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

    1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.

    எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.

    இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.

    அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
    • 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 முதல் 30 வயது வரையிலான 3 வாலிபர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாநகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், பாறைக்குழி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அதனை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த மயில்சாமி (வயது 55), அவரது மகன் சதீஷ் குமார்(30) மற்றும் முகமது இக்பால் (25), சூர்ய நாராயணன் (23), சூர்ய பிரகாஷ்(25) மற்றும் சிவக்குமார் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் தேர்தல் அதிகாரி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    • நாடு முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயற்சிகளை அளித்து வந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்காக நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    மேலும் நாடு முழுவதும் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், சட்டம்-ஒழுங்கு பணிகளை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு பயற்சிகளை அளித்து வந்தார். 2 நாள்கள் டெல்லி பயணத்தை முடித்து விட்டு நாளை (வியாழக்கிழமை) அவர் சென்னை திரும்ப உள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வேடசந்தூர், ஆயக்குடி, காலப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

    திருமண தடை, குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பூசாரியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்திலேயே மிகப்பெரிய வானலி வைக்கப்பட்டு பூரி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூரி படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது.
    • அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை பங்கீடு செய்துவிட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது. ஆனாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

    பா.ம.க.வை தனது பக்கம் இழுக்க அ.தி.மு.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பா.ம.க.வுடன் ரகசியமாக பேசி வருகின்றனர்.

    அதே வேளையில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்க ஒருபுறம் பேச்சு நடத்தி வருகிறது.

    இந்த நிலையல் அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது. ஒருவேளை பா.ம.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால் தே.மு.தி.க.வை அழைத்து பேசி தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய அ.தி.மு.க. தயாராகி விட்டது.


    பா.ம.க.வுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்தி விட்டு தொகுதி பங்கீட்டை முடிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. பா.ம.க.வுடன் பா.ஜனதா இன்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட அ.தி.மு.க.வும் தொடர்ந்து அக்கட்சியை இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையில் தே.மு.தி.க.வுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நாளை (வியாழக்கிழமை) நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பா.ம.க.வுடன் ரகசிய பேச்சு நடத்திய அ.தி.மு.க. அதில் முடிவு எட்டாததால் தே.மு.தி.க.வை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் நாளை மாலை அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்திக்க உள்ளனர். அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை எம்.பி.யும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அ.தி.மு.க. 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன் வருவதாக தெரிவித்தது. மேல்சபை எம்.பி. கொடுக்க இயலாது என்று தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது. அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு நாளை சுமூகமாக நடைபெற்று இறுதியாகக் கூடிய சூழல் நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதா கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.
    • இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியை உறுதிப்படுத்துவதில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்ட ணிக்கு முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதில் பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதா கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.

    பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அ.தி.மு.க.வுடனும் பேசிக் கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை.


    நேற்று இரவு மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்களை டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கூட்டணியை உறுதி செய்து உள்ளார்.

    பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. வுடன் பேசிய பிறகு தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

    இன்று பகலில் பா.ம.க. தலைவர் அன்புமணியை சந்தித்து பேசுகிறார்கள். அதன்பிறகு டாக்டர் ராமதாசையும் சந்தித்து பேசி கூட்டணியை உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    பின்னர் தே.மு.தி.க.வுடனும் பேச திட்டமிட்டு உள்ளார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
    • பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் இன்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 1166 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.

    கேரளாவை சேர்ந்த டிரைவர் விஷ்ணுவிற்கு 13 விருதுகளை அவர் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் வரவேற்றார். பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.
    • முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும் என்றும் முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.69 அடியாக குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடிவரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கனஅடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 19 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.02 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.22 அடியாகவும் குறைந்து உள்ளது.

    ×