என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
    • சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும்.
    • பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 57-வது வார்டுக்கு உட்பட்ட யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது.

    இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும். இப்பாலம் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி ரெயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, இந்தப் பகுதியை இடித்து விட்டு 156.12 மீ. அளவிற்கு ரெயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை பெருநகர சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

    அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதியின் கீழ், ரூ.30.78 கோடி மதிப்பிலும், ரெயில்வே துறையின் மூலம் ரூ.40.48 கோடி மதிப்பிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒருவழிப்பாதை முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டாரவி தேஜா, (வடக்கு), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரண்டப்பள்ளி, சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.
    • 500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா - சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட தோரிப்பள்ளி ஊராட்சிக்கு சேர்ந்த கல்லுக்குறுகி கிராமத்தில் அமைந்த முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அப்பகுதி ஊர் கவுண்டர் குள்ளப்பா தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு தோரிப்பள்ளி, கல்லுக்குறுக்கி அட்ட குறுக்கி, காமன்தொட்டி, வெங்கடேசப்புரம், அத்திமுகம், பேரிகை, பேரண்டப்பள்ளி, ஓசூர், சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.

    500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் எற்பட்டது . அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பேரிகை, அத்திமுகம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.

    இந்த விழாவில் பேரிகை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எருது விடும் விழாவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களும் பிரிந்துகிடந்தன.
    • கன்னியாகுமரியையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்கமுடியாது.

    நாகர்கோவில்:

    அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    பிரதமர் மோடி எனக்கு பிடித்தமான மண்ணுக்கு வந்துள்ளார். கன்னியாகுமரியையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்கமுடியாது. 1991 டிசம்பர் 11-ந்தேதி இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து முரளிமனோகர் ஜோஷியுடன் ஏக்தா யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார்.

    இந்தியாவை துண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களும் பிரிந்துகிடந்தன. 1992 ஜனவரி 26 அன்று காஷ்மீரில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து யாத்திரையை முடித்தார் மோடி. தாயின் பாலை குடித்து வளர்ந்த நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என காஷ்மீரில் தேசியகொடியை ஏற்றினார்.


    இந்த மண்ணின் மைந்தனாக நீங்கள் பிரதமர் மோடியை கொண்டாடி கொண்டிருக்கிறீர்கள். இன்று குமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய உறுதிமொழியோடு வந்திருக்கிறார். 3-வது முறையாக மோடி பிரதமராக வரப்போகிறார். இதுபோன்ற அரசியல் தலைவர் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. இந்தியா கூட்டணி வாரிசு அரசியல். மக்களே என் குடும்பம். மோடியின் தம்பிகளாக இங்கு வந்துள்ளீர்கள்.

    400 எம்.பி.க்கள் என்பது வெறும் வார்த்தை கிடையாது. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும்போது 400 எம்.பி.க்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, மக்களின் உணர்வாக இருக்கும். அதில் 370-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதே குமரிக்கு இன்னொரு மனிதரும் வந்தார். 1882-ல் டிசம்பர் 24-ல் நரேந்திர தத்தா என்கிற மனிதன் கடலில் நீந்தி மூன்று நாட்கள் பாறையில் அமர்ந்து நாடு, மக்கள் குறித்து சிந்தித்து விவேகானந்தராக மாறினார்.

    இந்தியாவை அசைக்கமுடியாத சக்தியாக மாற்ற மோடி வந்துள்ளார். மோடி விஸ்வகுருவாக மாறிக்கொண்டிருக்கிறார். விவேகானந்தர் சிக்காகோவுக்கு போராமகிருஷ்ண மிஷனை தொடங்கினார். டீ விற்ற, 5 வீடுகளில் பாத்திரம். தேய்த்துக்கொண்டிருந்த ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ணர் மிஷனுக்கு சென்றார். அங்கிருந்த அஸ்வஸ்தானந்தா சொன்னார் ஞானி ஆகி இருக்க நீ பிறக்கவில்லை. இந்த நாட்டுக்காக பிறந்துள்ளாய் என திருப்பி அனுப்பப்பட்டார். 2-வது முறையும் சென்றார். அப்போதும் திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது 140 மக்களின் விஸ்வ குருவாக அமர்ந்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கறுப்பு பணத்தை பா.ஜ.க.தான் உருவாக்கி கொண்டிருக்கிறது.
    • பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பல கோடி வாங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பத்திர மெகா ஊழலை விஞ்ஞான முறையில் பா.ஜனதாவினர் செய்துள்ளனர். கறுப்பு பணத்தை மீட்போம். பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கறுப்பு பணத்தை பா.ஜ.க.தான் உருவாக்கி கொண்டிருக்கிறது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பல கோடி வாங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதியை பா.ஜ.க மிரட்டி வாங்கி உள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

    இதுபற்றி பேசினால் வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது.

    இந்த மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கோபண்ணா, ஆனந்த் சீனிவாசன் உடன் இருந்தனர்.

    • புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி.
    • நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமை சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.

    இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கி வருகிறது. இதன்படி, இவ்வரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், மாநகராட்சிகளை அமைத்துருவாக்குதற்கான 4 புதிய நடைமுறைகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது ஆணையிட்டுள்ளார்கள்.

    இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி; நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி: காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்படும்.

    இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம்.
    • கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    தக்கலை:

    பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தக்கலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநில துணை தலைவர் வக்கீல் ராபரட் புரூஸ், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டார் வட்டார தலைவர் வக்கீல் ஜெபா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜான் விக்னேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கட்பர்ட், நிர்வாகிகள் குமார், செல்வின்ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மக்களை பிரித்தாள நினைக்கும் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன் இன்றைக்கு கோ பேக் மோடி எனும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்றார்.

    அவரை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து ஒவ்வொரு முறையும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈடுபட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

    சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கண்டிக்கின்றோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ராதா கிருஷ்ணன், ராபர்ட் புரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.
    • குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், கடந்த 3 நாட்களாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2500 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

    தற்போது கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.

    இந்த நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து இன்று அதிகாலை வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நிலையில் காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 800 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்திற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெப்பத்தை தணிக்கவும், தற்போது நீர்வரத்து ஓரளவிற்கு வந்து கொண்டிருப்பதாலும், அருவிகளில் தண்ணீர் சீராக செல்வதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
    • ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது21). செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு அவர் உடன் படிக்கும்

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், கோகுல கண்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். செங்கல்பட்டு, ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து மேலமையூர் நோக்கி அண்ணா நகர் பிரதான சாலையில் சென்று கொண்டு இருந்தபோது திருமணி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான நந்தகோபால் என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார்.

    திடீரென சதீஷ் மற்றும் நந்தகோபால் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் அதிவேகமாக மோதியது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் விபத்து நடந்த இடம் அருகே சாலையில் நடந்து சென்ற திருமணியை சேர்ந்த மேஸ்திரி தணிகாசலத்தின் (46) மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ், மேஸ்திரி தணிகாசலம், ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாய் கிருஷ்ணன், கோகுல், பெயிண்டர் நந்தகோபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும்.
    • பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
    • உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,

    * தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    * திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரியும்.

    * பெண்களின் பெயரில் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள்.

    * முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டனர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

    * நம்முடைய பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. தலைவர்கள் கேள்விஎழுப்பினர்.

    * தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

    * தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பெருமையையும் பாதுகாக்க பா.ஜ.க என்றும் முன்னிலையில் இருக்கிறது.

    * உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை.

    * நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×