என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
- ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.
குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.
இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.

இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.
இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.
- பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு.
- எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.
மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதைதொடர்ந்து, கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.
- தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20 மற்றும் 21-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம்.
- பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வந்தனர்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருந்தது.

பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம் கேட்டு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதில் தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகு அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார்.
இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு அவரது ஆதரவாளர்களை சோர்வடைய செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தற்போது எங்களிடம் கட்சி, சின்னம் என எதுவும் இல்லை. இந்த சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களது எதிர்கால நலனை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.
விரைவில் அது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம். பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்றார்.
- கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
- கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும். இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது கோடை வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் கோவில் உட்பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உட்பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.
வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து தார் ரோடு செல்லும் பகுதிகளிலும் மேட் விரித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- திருமணத்தின் போது 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
- மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார்.
மதுரை:
மதுரை கோ.புதூர் பாரதியார் மெயின்ரோடு திரவுபதி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் பால் பாண்டியன் மகள் அனுசுயா (வயது 28). இவர் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். அப்போது என்னுடன் வேலை பார்த்த பேராசிரியரான விஜய் என்பவரை காதலித்து 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எங்கள் வீட்டின் சார்பில் 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
இந்தநிலையில் எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எனது கணவர் விஜய் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு எனது பெற்றோர் அளித்த நகைகளை ரூ.12 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.
மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தில் அவரது கள்ளக்காதலியின் பெயரில் வீடு வாங்கியுள்ளார். இதை கண்டித்த என்னை மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்து வருகின்றனர் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
மனுவை பரிசீலித்த போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை சித்ரவதை செய்ததாக அனுசுயாவின் கணவர் விஜய், மாமியார் ஜெயலட்சுமி, கணவரின் சகோதரி சுகப்பிரியா, சுகப்பிரியாவின் கணவர் சிவயோகம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி (33) இவரது மனைவி சரண்யா( 31). இவர்கள் இங்கு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சரண்யா திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு சரண்யா இரவு காவலர் பணிக்கு சென்றுள்ளார். இவரது கணவர் மனைவிக்கு இரவு உணவு எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டு இரவு மனைவியுடன் அங்கேயே தங்கி உள்ளார்.
இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமூர்த்தி தனது வீட்டிற்கு வந்து பார்க்கும்போது முன் பகுதியில் உள்ள பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த ஐந்தே முக்கால் பவுன் நகை, ,ரூ.40ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது .
அங்கு வைத்திருந்த சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார்.
- கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை:
தமிழகம் வந்த பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இன்று எழுச்சி உரையாற்றினார்.
இதையடுத்து கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் மோடி மற்ற மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று பேசி வந்தார். ஆனால் கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ரோடு ஷோவானது சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நடத்தப்பட உள்ளதாகவும், ரோடு ஷோவின்போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.
பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல் ஆணையாளர் கடிதம் அளித்துள்ளார்.
- இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.
- நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
"2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, பா.ஜ.க. ஆட்சி இந்தியாவின் மதச் சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின் மையை வளர்த்து, நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இசுலாமியர் மீதான வெறுப்பைச் சட்டப் பூர்வமாக்க வழிவகுக்கிறது.

இசுலாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்.
- தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகத்துக்கு வந்தார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக பகல் 11.40 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்றபடி பா.ஜனதா கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-
எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்.
இப்போது நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. அந்த அலை நீண்ட தூரம் பயணிக்கப் போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டது போல 1991-ம் ஆண்டு இதே கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை புறப்பட்டு காஷ்மீர் வரை சென்றிருந்தேன். ஆனால் இந்த முறை நான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்திருக்கிறேன்.
நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். நமது தமிழக மக்களும் இப்போது அதைத்தான் செய்ய போகிறார்கள். தி.மு.க.-காங்கிரசின் இந்தியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்.
அவர்களின் தலைக்கணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால் வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களின் கொள்கை, அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்குதான் அவர்களின் முதல் இலக்கு.
ஒரு பக்கம் பார்த்தால் பா.ஜ.க.வின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள். அந்த பக்கம் பார்த்தால் காங்கிரஸ்-தி.மு.க. இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள். ஆப்டிக்கல் பைபர் மற்றும் 5ஜி ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு கொடுத்தது. நமது பெயரில் டிஜிட்டல் இந்தியா என்கிற திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல் இருக்கிறது.
2ஜி கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க.தான். பா.ஜனதா ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பா.ஜனதா பெயரில் உதான் திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல்தான் இருக்கிறது.
நாம் கேலோ இந்தியா மூலம் விளையாட்டு துறையை உயர்ந்த உன்னதமான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் பெயரில் காமன்வெல்த் ஊழல்தான் முதன்மையாக இருக்கிறது. இந்த பட்டியல் மிக நீளமாக இருக்கும்.
தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.
தமிழ்நாட்டுக்கு தி.மு.க. ஒரு அரக்கனாக இருக்கிறது. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு தி.மு.க. அரசு எதிரியாக உள்ளது. தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி தி.மு.க.தான். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க விடாமல் செய்ததற்கு சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்தது.
ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க.-காங்கிரஸ் தடை விதித்தது. அந்த தடையை பா.ஜ.க. அரசு நீக்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது தி.மு.க.வும், காங்கிரசும் வாய் மூடிக் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணி அரசுதான் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது. தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.
இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க.-காங்கிரஸ் விளையாடுகிறது.
இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ்-தி.மு.க. செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா?
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ் அரசுகள் பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரிந்தவர்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம். மனதின் குரல் நிகழ்ச்சி போன்று நமோ செயலி மூலம் என் பேச்சை, உரைகளை தமிழில் கேட்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா சரத்குமார், சசிகலா புஷ்பா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- கைதான டென்னிஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருங்கல்:
கருங்கல் பரமார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஸ்டான்லி (வயது 44), தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவி ஷீலா, தனது குழந்தையுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார்.
அதன்பிறகு தனியாக வசித்து வந்த மெர்லின் ஸ்டான்லி, வீதிகளில் கிடக்கும் மது பாட்டில்களை சேகரித்து டாஸ்மாக் கடையில் கொடுத்து மது அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், கருங்கல் பஸ் நிலையத்தில் முகம் சிதைந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மெர்லின் ஸ்டான்லி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமாக லுங்கி கட்டி ஒருவர் நிற்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சுவாமியார் மடம் அருகே உள்ள நல்லவிளையை சேர்ந்த சுந்தரம் மகன் டென்னிஸ் (43) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மெர்லின் ஸ்டான்லி முகத்தை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார், டென்னிசை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் கூறுகையில், நானும், மெர்லின் ஸ்டான்லியும் காலி மதுபாட்டில்களை சேகரித்து டாஸ்மாக் கடையில் கொடுத்து வந்தோம். நேற்று முன்தினம் பாட்டில்களை சேகரிப்பது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் மெர்லின் ஸ்டான்லி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை தாக்க திட்டமிட்டேன். அவர் எங்கு இருக்கிறார் என தேடியபோது, பஸ் நிலையத்தில் படுத்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்று கல்லால் அவரை தாக்கி முகத்தை சிதைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் என்னை கைது செய்து விட்டனர் என்றார். கைதான டென்னிஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
- சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.






