என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருங்கல் பஸ் நிலையத்தில் முகத்தில் கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்றவர் கைது
- போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- கைதான டென்னிஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருங்கல்:
கருங்கல் பரமார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஸ்டான்லி (வயது 44), தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவி ஷீலா, தனது குழந்தையுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார்.
அதன்பிறகு தனியாக வசித்து வந்த மெர்லின் ஸ்டான்லி, வீதிகளில் கிடக்கும் மது பாட்டில்களை சேகரித்து டாஸ்மாக் கடையில் கொடுத்து மது அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், கருங்கல் பஸ் நிலையத்தில் முகம் சிதைந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மெர்லின் ஸ்டான்லி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமாக லுங்கி கட்டி ஒருவர் நிற்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சுவாமியார் மடம் அருகே உள்ள நல்லவிளையை சேர்ந்த சுந்தரம் மகன் டென்னிஸ் (43) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் மெர்லின் ஸ்டான்லி முகத்தை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார், டென்னிசை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் கூறுகையில், நானும், மெர்லின் ஸ்டான்லியும் காலி மதுபாட்டில்களை சேகரித்து டாஸ்மாக் கடையில் கொடுத்து வந்தோம். நேற்று முன்தினம் பாட்டில்களை சேகரிப்பது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் மெர்லின் ஸ்டான்லி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை தாக்க திட்டமிட்டேன். அவர் எங்கு இருக்கிறார் என தேடியபோது, பஸ் நிலையத்தில் படுத்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்று கல்லால் அவரை தாக்கி முகத்தை சிதைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் என்னை கைது செய்து விட்டனர் என்றார். கைதான டென்னிஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.






