search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணியை துடைத்தெறிவோம்... பிரதமர் மோடி ஆவேச பேச்சு
    X

    இந்தியா கூட்டணியை துடைத்தெறிவோம்... பிரதமர் மோடி ஆவேச பேச்சு

    • நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர்.
    • தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகத்துக்கு வந்தார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக பகல் 11.40 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்றபடி பா.ஜனதா கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்.

    இப்போது நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. அந்த அலை நீண்ட தூரம் பயணிக்கப் போகிறது. அண்ணாமலை குறிப்பிட்டது போல 1991-ம் ஆண்டு இதே கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை புறப்பட்டு காஷ்மீர் வரை சென்றிருந்தேன். ஆனால் இந்த முறை நான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்திருக்கிறேன்.

    நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். நமது தமிழக மக்களும் இப்போது அதைத்தான் செய்ய போகிறார்கள். தி.மு.க.-காங்கிரசின் இந்தியா கூட்டணி கண்டிப்பாக துடைத்தெறியப்படும்.

    அவர்களின் தலைக்கணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால் வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களின் கொள்கை, அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்குதான் அவர்களின் முதல் இலக்கு.

    ஒரு பக்கம் பார்த்தால் பா.ஜ.க.வின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள். அந்த பக்கம் பார்த்தால் காங்கிரஸ்-தி.மு.க. இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள். ஆப்டிக்கல் பைபர் மற்றும் 5ஜி ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு கொடுத்தது. நமது பெயரில் டிஜிட்டல் இந்தியா என்கிற திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல் இருக்கிறது.

    2ஜி கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க.தான். பா.ஜனதா ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பா.ஜனதா பெயரில் உதான் திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல்தான் இருக்கிறது.

    நாம் கேலோ இந்தியா மூலம் விளையாட்டு துறையை உயர்ந்த உன்னதமான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் பெயரில் காமன்வெல்த் ஊழல்தான் முதன்மையாக இருக்கிறது. இந்த பட்டியல் மிக நீளமாக இருக்கும்.

    தி.மு.க.-காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும்.

    தமிழ்நாட்டுக்கு தி.மு.க. ஒரு அரக்கனாக இருக்கிறது. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு தி.மு.க. அரசு எதிரியாக உள்ளது. தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி தி.மு.க.தான். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க விடாமல் செய்ததற்கு சுப்ரீம் கோர்ட்டே கண்டனம் தெரிவித்தது.

    ஜல்லிக்கட்டுக்கு தி.மு.க.-காங்கிரஸ் தடை விதித்தது. அந்த தடையை பா.ஜ.க. அரசு நீக்கியது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது தி.மு.க.வும், காங்கிரசும் வாய் மூடிக் கொண்டு இருந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணி அரசுதான் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது. தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.

    இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க.-காங்கிரஸ் விளையாடுகிறது.

    இலங்கையில் நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மோடி எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ்-தி.மு.க. செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்து விட்டது. கேட்பீர்களா?

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ் அரசுகள் பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரிந்தவர்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

    உங்கள் மத்தியில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு மிகப்பெரிய மனக்குறை உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் நமோ இன் செயலி மூலம் நீங்கள் என் பேச்சை தமிழில் கேட்கலாம். மனதின் குரல் நிகழ்ச்சி போன்று நமோ செயலி மூலம் என் பேச்சை, உரைகளை தமிழில் கேட்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா சரத்குமார், சசிகலா புஷ்பா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×