search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வந்த விமானத்தில் சார்ஜர் பிளக்குகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.6½ லட்சம் தங்கம் பறிமுதல்
    X

    மதுரை வந்த விமானத்தில் சார்ஜர் பிளக்குகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.6½ லட்சம் தங்கம் பறிமுதல்

    • சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
    • சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    மதுரை:

    மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.

    Next Story
    ×