search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியில்லை?
    X

    பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியில்லை?

    • பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம்.
    • பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வந்தனர்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம் கேட்டு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதில் தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகு அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

    இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு அவரது ஆதரவாளர்களை சோர்வடைய செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தற்போது எங்களிடம் கட்சி, சின்னம் என எதுவும் இல்லை. இந்த சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களது எதிர்கால நலனை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.

    விரைவில் அது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம். பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்றார்.

    Next Story
    ×