என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜானகி (வயது55). இவரது 3 பசுமாடுகள் நேற்று மாலை அருகிலுள்ள ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தபோது. அப்பகுதியில் கிடந்த மர்மபொருள் ஒன்றினை மாடுகள் கவ்வியபோது அந்த மர்ம பொருள் வெடித்தது.
இதில் ஒரு பசுமாட்டின் வாய் கிழிந்தது. வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் பசு மாடு வாய் கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காட்டுப்பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகளை சமூகவிரோதிகள் சிலர் இதுபோல வெடி வைத்து வேட்டையாடுவதாக அப்பகுதிபொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அது வெடித்ததில் பசு மாடு வாய் கிழிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
- தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை.
- 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
கோவை:
கோவை சரவணம்பட்டியில் இன்று நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்ட த்தில் பா.ஜ.க. மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.
கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.
2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டை போட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.
இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?
இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
- ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி என 3 அணிகளையும் எதிர்த்து சீமான் ஆண்களுக்கு பாதி, பெண்களுக்கு பாதி என சரிசமமாக பிரித்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கவில்லை. கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இருப்பினும் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்று இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சின்னத்தை கூறி ஓட்டு கேட்க முடியாத நிலையில் உள்ளனர்.
இருப்பினும் 26-ந்தேதி சின்னம் விவகாரத்தில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம். இந்த முறையும் அதே பாணியில் சீமான் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
- குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
- சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரம் எனப்படும் சாஸ்தா கோவில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று சில கோவில்களிலும், நாளை (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படு கிறது. அதன்படி இன்று சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. எனினும் இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பா லான பக்தர்கள் அங்கு புறப்பட்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் பகுதியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் சாஸ்தா கோவில், தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவ நல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை பங்குனி உத்திரத்தை யொட்டி இந்த கோவில்களில் மேலும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் தாழையூத்து, சீவலப்பேரி சாஸ்தா கோவில்கள், சேரன்மகா தேவி செங்காடு சாஸ்தா கோவில், நாங்குநேரி செம்பு குட்டி சாஸ்தா கோவில், ஆழ்வார் குறிச்சி காக்கும் பெருமாள் கோவில், அம்பை மன்னார் கோவில் மெய்யப்ப சாஸ்தா கோவில், அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்க ளிலும் இன்றும், நாளையும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அய்யனார் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மாவட்டத்தில் உள்ள மணக்கரை, மணத்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால் நாளை சாஸ்தா கோவில்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.
இதனால் பெரும்பாலான சாஸ்தா கோவில்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, வாடகை கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று வாடகை கார், வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது. முக்கிய கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர பகுதி யில் மட்டும் சுமார் 40 சாஸ்தா கோவிலுக்கும், நெல்லை மாவட்ட பகுதியில் 120 கோவில்களுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
- மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்:
கடந்த 19-ந் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்த குளச்சலை சேர்ந்த 73 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஒரு கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சிறைபிடிக்கப்பட்டு 5 நாட்களாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். அவர்களை நேற்று இரவு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நள்ளிரவு 2 மணிவரை அங்கிருந்தவாறு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- அ.தி.மு.க.வின் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.
- திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சி, தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. இந்த கூட்டணியில் போட்டியிட உள்ள 40 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார். இரண்டு கட்டமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் அவர் முதற்கட்ட பிரசாரத்தை திருச்சியில் மேற்கொள்கிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டபட்டு வண்ணாங்கோவில் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

பிரமாண்டமான மேடை
அ.தி.மு.க.வின் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறார்.
திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர் மாலை, 4.40 மணியளவில் வண்ணாங்கோவில் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்கிறார்.
பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.
திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
- வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின.
- பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது.
சென்னை:
நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே. சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்றுமாலை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு தமழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்புக்குழு தலைவ ருமான டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், கே.ஏ.ஜி.டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ரவிச்சந்திரன், ஒட்டல் லீ பேலஸ் இயக்குனர் ஏ.என். கார்த்திக், போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின. இதில் வருமானவரி 25-17, 25-23 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. அணி 19-25, 26-24, 25-23 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.மை போராடி வென்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 17-25, 20-25 என்ற கணக்கில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.
பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 2-0 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது.
இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்க ளில் ஜி.எஸ்.டி-டி.ஜி.வைஷ்ணவா, தமிழ்நாடு போலீஸ்-வருமானவரி, இந்தியன்வங்கி-எஸ்.ஆர்.எம்., ஐ.ஒ.பி.-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.-எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ்-டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் மோதுகின்றன.
- 4-வது நாளான இன்றும் ஒனேக்கல்லுக்கு 200 கனஅடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
- மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகம் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 4-வது நாளாக 200 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து 4-வது நாளான இன்றும் ஒனேக்கல்லுக்கு 200 கனஅடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி பறைகளாக காட்சியளிப்பதுடன் சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.
- நேற்று இரவு பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
- தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தருமபுரி:
தருமபுரி அன்னசாகரம் ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
9-ம் நாளான நேற்று மாலை விநாயகர் ரதம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு சிவகிரி செங்குந்தர் சமூகத்தினர் பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விழா நடைபெற்றது. சிவ சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சென்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குத்த மரபினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு 5 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.
- எல்லா தொகுதிகளுக்கும் மத்திய மந்திரிகள் சென்று பிரசாரம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
அடுத்ததாக பிரசார திட்டங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வேட்பு மனுதாக்கல் வருகிற 27-ந்தேதியுடன் முடிகிறது. 30-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பிரசாரம் அனல் பறக்கும். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடியும் வருகிறார். ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு 5 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். அப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். கோவையில் 'ரோடு-ஷோ'வும் நடத்தினார்.

தனது சுற்றுப்பயணத்தின் போது கண்ட எழுச்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுபற்றி தனது வலைதள பக்கத்தில் தமிழகத்தில் அற்புதமான மாற்றம் நிகழும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா எதிர்பாராத வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தமிழகம் முழுவதும் பிரசாரங்களை ஏற்பாடு செய்யும் படி கட்சி தலைவர் நட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமரின் சுற்றுப்பயணத்தில் இதுவரை இடம் பெறாத டெல்டா பகுதிகள் மற்றும் வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் பிரசாரம் செய்யும் வகையில் பிரசார திட்டம் தயாராகிறது. மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தலைவர்கள் சுற்றுப்பயண திட்ட குழுவுடன் ஆலோசித்து வருகிறார்.

இது தவிர 18 மத்திய மந்திரிகளும் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்யும் வகையில் திட்டமிட்டுள்ளார்கள். உள்துறை மந்திரி அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், வி.கே.சிங், கிஷன்ரெட்டி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 18 மந்திரிகள் வருகிறார்கள்.
எல்லா தொகுதிகளுக்கும் மத்திய மந்திரிகள் சென்று பிரசாரம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்கு வருகிறார். கோவை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதுபற்றி பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-
திராவிட மாயையில் இருந்து மக்களை மீட்க வேண்டும். இந்த முறை தமிழகமும் பா.ஜனதா பக்கம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா மேலிடம் தீவிரமாக உள்ளது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு பணிகளை தொடங்கி விட்டோம். அதற்காக 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
எனவே அந்த தொகுதிகளை குறி வைத்து பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமையும். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களை ஒருங்கிணைத்து அந்தந்த மாநிலங்களில் பிரசாரம் செய்யும்போது தமிழகத்திலும் எந்தெந்த பகுதிகளுக்கு வந்து செல்வது எளிதாக இருக்கும் என்பதை பார்த்து பயணத் திட்டம் அமையும் என்றார்கள்.
- அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
- வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்க மாகும். ஜெயலலிதா, தான் தொடங்கும் அனைத்து செயல்களையுமே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே தொடங்கி அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்.
இப்போது அவரது வழியை பின்பற்றியே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 32 இடங்கள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் இறங்குகிறார்கள்.
இவர்கள் அனைவரும் திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பின்னர் அனைவரும் நாளை தங்களது தொகுதிகளுக்கு சென்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை மதியம் 12 மணி முதல் 1 மணிவரை புதன் ஓரையாகும்.
அந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முன்னதாக நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு வேட்பு மனுக்களில் கையெழுத்து போடவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி மேற் கொண்டிருந்த இந்த ஜோதிட நம்பிக்கை அரசியலில் அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






