search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் இருந்து சீமான் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்
    X

    கன்னியாகுமரியில் இருந்து சீமான் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்

    • நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
    • ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி என 3 அணிகளையும் எதிர்த்து சீமான் ஆண்களுக்கு பாதி, பெண்களுக்கு பாதி என சரிசமமாக பிரித்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.

    இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கவில்லை. கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இருப்பினும் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள்.

    எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்று இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சின்னத்தை கூறி ஓட்டு கேட்க முடியாத நிலையில் உள்ளனர்.

    இருப்பினும் 26-ந்தேதி சின்னம் விவகாரத்தில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம். இந்த முறையும் அதே பாணியில் சீமான் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    Next Story
    ×