search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி சாஸ்தா கோவில்களில் திரண்ட பக்தர்கள்
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி சாஸ்தா கோவில்களில் திரண்ட பக்தர்கள்

    • குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரம் எனப்படும் சாஸ்தா கோவில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இன்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இன்று சில கோவில்களிலும், நாளை (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படு கிறது. அதன்படி இன்று சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. எனினும் இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பா லான பக்தர்கள் அங்கு புறப்பட்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் பகுதியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் சாஸ்தா கோவில், தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவ நல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை பங்குனி உத்திரத்தை யொட்டி இந்த கோவில்களில் மேலும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையொட்டி அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மேலும் தாழையூத்து, சீவலப்பேரி சாஸ்தா கோவில்கள், சேரன்மகா தேவி செங்காடு சாஸ்தா கோவில், நாங்குநேரி செம்பு குட்டி சாஸ்தா கோவில், ஆழ்வார் குறிச்சி காக்கும் பெருமாள் கோவில், அம்பை மன்னார் கோவில் மெய்யப்ப சாஸ்தா கோவில், அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்க ளிலும் இன்றும், நாளையும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அய்யனார் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மாவட்டத்தில் உள்ள மணக்கரை, மணத்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால் நாளை சாஸ்தா கோவில்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் பெரும்பாலான சாஸ்தா கோவில்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, வாடகை கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று வாடகை கார், வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது. முக்கிய கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர பகுதி யில் மட்டும் சுமார் 40 சாஸ்தா கோவிலுக்கும், நெல்லை மாவட்ட பகுதியில் 120 கோவில்களுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×