search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்: 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
    X

    பொதுக்கூட்ட மைதானத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ள காட்சி.

    தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்: 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

    • அ.தி.மு.க.வின் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.
    • திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சி, தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. இந்த கூட்டணியில் போட்டியிட உள்ள 40 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார். இரண்டு கட்டமாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் அவர் முதற்கட்ட பிரசாரத்தை திருச்சியில் மேற்கொள்கிறார்.

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டபட்டு வண்ணாங்கோவில் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    பிரமாண்டமான மேடை

    அ.தி.மு.க.வின் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறார்.

    திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர் மாலை, 4.40 மணியளவில் வண்ணாங்கோவில் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்கிறார்.

    பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.

    திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    Next Story
    ×