என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.51,120-க்கு விற்பனையானது. இதனால் தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370-க்கும் சவரன் ரூ.50,960-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தெற்கு குருவி குளம் பகுதியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.73 ஆயிரத்து 700 இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் பொரிகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினர்.

    ஆனால் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.60 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது. எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை விற்ற பணம் என்று வாகனத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.

    இருந்தபோதிலும் உரிய ஆவணம் இல்லாததால் தொடர்ந்து அந்த பணத்தை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து, கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.

    • வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
    • மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.

    மேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை மற்றும் தணிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கொடிமலர் ஆகியோர் தலைமையில் தலைமை காவலர்கள் அலாவுதீன், கார்த்திக் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் மேலூரில் உள்ள தனியார் சிகரெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் சரவணன் என்பவர் சிகரெட் விற்பனை செய்து பல்வேறு கடைகளில் வசூல் செய்த ரொக்கம் ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 400-ஐ கொண்டு வந்தது தெரியவந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் உத்தரவின் பேரில் அந்த பணம் சரி பார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.
    • ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 27-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கலுக்காக சென்றார். கூட்டணியில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் சென்றனர். அங்கு சென்று புகைப்படம் எடுத்து அதை சசிகாந்த் செந்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் அவருடன் பலரும் நிற்பது தெரிகிறது. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய சம்பவமாகும். ஆனால் அதைத் தடுக்காமல், தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டர் அனுமதித்துள்ளார். அதன்படி, அவர் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. எனவே சசிகாந்த் செந்திலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஆரணி பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடந்த 26-ந்தேதியன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, தேர்தல் முடிந்த பிறகு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இது மக்களை கவரும் நோக்கத்தில் செய்யப்பட்ட பிரசாரமாகும். தேர்தல் நடத்தை விதியின்படி புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது.

    எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நட்சத்திர பேச்சாளர் என்ற நிலையில் இருந்து அப்புறப்படுத்தி, இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
    • அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

    அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.


    • தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
    • புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ந்தேதியே தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. என்றாலும், பங்குனி உத்திர நாளான 25-ந்தேதிதான் பெரும்பாலானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 27-ந்தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் தாக்கல் செய்திருந்தனர். புதுச்சேரியில் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. இதனால், பல இடங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல், புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

    அதன்பின்னர், வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விவரம் தெரியவரும். தொடர்ந்து சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும்.

    அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சிக்கான சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 152 சுயேச்சை சின்னங்களில் இருந்து சின்னம் ஒதுக்கப்படும்.

    • அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், 4 முதல் 9 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்றார்.
    • வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க. என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    தர்மபுரி:

    தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு.

    சமூக நீதி பேசும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பா.ம.க.வின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. மனமில்லாமல் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

    மாநில அரசுக்கு சர்வேதான் எடுக்க முடியுமே தவிர, சென்சஸ் எடுக்கமுடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க.

    ஒருமுறையாவது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

    தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தரமுடியாது என பாஜக கூறிவிட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டார் என தெரிவித்தார்.

    • மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • அப்போது, இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என கூறினார்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்?

    பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கள்ளக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். யாருடனும் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை.

    தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது பதவிக்கு வர முடியுமா?

    இந்தியாவிலேயே ஜனநாயகத்துடன் இயங்கும் கட்சி அ.தி.மு.கதான்.

    அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துவிட்டன.

    கொரோனா காலத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம் என தெரிவித்தார்.

    • ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
    • பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல உயர்மட்ட மேம்பாலம், சுரங்கநடைபாதை வசதிகள் இல்லை. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடைமேடைகளுக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில்மோதி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப் பாதை பணிகளை மீண்டும் தொடங்கி உடனடியாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மேம்பால பணிகள் மற்றும் ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிபெருக்கி மற்றும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் பணிக்கு நிலம் எடுப்புக்கான தடை நீக்கப்பட்டது.


    இந்த பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆனால் அங்கு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை. கட்டி முடிக்காமல் பாதியில் நிற்கும் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து. இதுவரை ரூ.38 லட்சம் செலவிடப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியை முழுமையாக செய்வதற்கும், நில எடுப்பு தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுரைகள் வழங்கிய நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

    எனவே கழிவு நீர் சூழ்ந்து காணப்படும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போதும், இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் கூறும்போது"வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்ட பின்னர் தற்போது 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் வேப்பம்பட்டு ரெயில் நிலைய சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் ரெயில்நிலையத்திற்கு வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே சுரங்கப்பாதை சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    ×