என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பிரிந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகளை கண்காணித்து வரும் போலீசார் அவர்களின் செல்போன்களையும் கண்காணித்து வருகிறார்கள்.
இதன்மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.
- மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும்.
- பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமையும். அத்துடன் வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தலானது இருக்க போகிறது.
தற்போது நீலகிரி எம்.பியாக இருக்க கூடிய ஆ.ராசா இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக கூடலூர் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் அவர்களை வஞ்சித்துள்ளனர்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இருண்டகாலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வர போகிறது என ஏக்கத்தோடு காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு விடிவு காலம் பிறக்க போகிறது.
மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜனதா தீர்வு காணும். பிரதமர் மோடி ஆட்சியின் வளர்ச்சியை நீலகிரி மக்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரை போன்றுள்ள 5 நபர்களை இறக்கியுள்ளனர்.
எத்தனை பேர் வந்தாலும் மக்களிடம் அவருக்கான செல்வாக்கு உள்ளது. நிச்சயமாக அவர் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது.
- போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்களை ரகசிய தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்படி வாகன சோதனையின் மூலமாக போதைப்பொருட்கள் பிடிபடுவதால் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
படித்த இளைஞர்களும் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். கூரியர் சர்வீஸ் மூலமாக இந்த மாத்திரைகளை போதை கும்பலிடம் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி சப்ளை செய்து வருகிறார்கள். மருத்துவத் துறையில் தூக்கமின்மை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருந்து சீட்டுகள் இல்லாமல் கொடுக்கக்கூடாது.
இதுதொடர்பாக போலீசார் அனைத்து மருந்து கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இதனால் மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரைகளை நேரடியாக வாங்குவது சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்த போதை மாத்திரைகள் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது என மருந்து கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, டாக்டர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்டத்தையும் மீறி போதைக்காக மாத்திரைகளை ஆன்லைனில் விற்று வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மற்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும்போதும் மது குடித்த பிறகும் தலை சுற்றல் உள்ளிட்ட போதைக்கான அறிகுறிகள் காணப்படும் என்றும் ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதால் அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது. உள்ளுக்குள் இருந்தே இந்த போதை மாத்திரை வேலை செய்யும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போதை மாத்திரைகளை பயன்படுத்தி இருப்பவர்களை வீட்டில் இருக்கும் பெற்றோரால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதால் இளைஞர்கள் அதிக அளவில் அதனை பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி சென்னை மாநகரில் சத்தம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் போதை மாத்திரைகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் பிடிபட்டுள்ளன. 23 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த 40 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை மாத்திரைகளை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இதுவரை 1243 வழக்குகள் போடப்பட்டு 2423 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. போதை மாத்திரைகளை பொடியாக்கி அதனை தண்ணீரில் கரைத்து நரம்பு வழியாக ஊசி மூலம் உடலில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே பயன்படுத்தி விடவும் முடிகிறது. இப்படி போதை மாத்திரைகள் சென்னை மாநகர இளைஞர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரும் நிலையில் அதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
- போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் மது போதையில் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் 3 கட்டுகளாக பணம் இருந்தது தெரியவந்தது. பணத்தை எண்ணிப்பார்த்ததில் ரூ.1½ லட்சம் இருந்தது.
விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணி மேகலை (வயது 35) என்பதும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணத்தை வைத்திருந்ததாக கூறினார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த நித்தியா என்பவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண், நித்தியா வீட்டுக்குள் வந்து சென்றது தெரியவந்தது.
அந்த பெண் குறித்து விசாரிக்கும் போது பறக்கும் படை சோதனையில் சிக்கிய மணிமேகலை என்பது தெரியவந்தது. அவர்தான் ரூ. 1½ லட்சம் பணத்தை திருடியதுடன், பிச்சை எடுத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் தெரிவித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குனியமுத்தூர்:
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். நேற்று காலை பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தேர்தல் விதியை மீறி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்டோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை திரட்டி ஊர்வலமாகச் சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், அனுமதி குறித்து ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சர்வர் பிரச்சனை காரணமாக அனுமதி இன்னும் கையில் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தனர். ஆயினும் போலீசார் பா.ஜ.க. வேட்பாளர் வசந்தராஜன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
- போலீசார் 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- விசாரணை நடத்தி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 44). இவர் வீரபாண்டி பிரிவில் உள்ள நல்லாத்துதோட்டம் பகுதியில் வாஷிங் நிறுவனம் (டையிங்) வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருடைய நிறுவனத்திற்குள் 4 பேர் சென்றுள்ளனர். அவர்கள் செல்லமுத்துவிடம் தங்களை பொதுப்பணித்துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் இருந்து சாயகழிவு நீரை சாக்கடையில் திறந்து விடுவதாக புகார்கள் வந்துள்ளது , உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த செல்லமுத்து அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சிவசாமி (55), ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் (51), முத்துவேல் (50), சண்முகசுந்தரம் (63) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.
- கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக வலம் வந்தவர். 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் அவரது துரதிருஷ்டம் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனால் வடிவேலுவின் சிரிப்பும் அடங்கிப் போனது. சினிமா வாய்ப்புகள் அரிதான நிலையில் தனது 2-வது இன்னிங்சை மாமன்னன் படத்தின் மூலம் தொடங்கினார். அமைச்சர் உதயநிதியுடன் நடித்த அந்த படத்தில் மாமன்னன் பாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து அவரது 2-வது இன்னிங்ஸ் விறுவிறுப்பானது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் அவரை பிரசாரத்துக்கு அழைத்தனர். ஆனால் ஏற்கனவே பட்ட சூட்டால் சுதாரித்து கொண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்த்து நழுவிவிட்டார்.
அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்ய நடிகர்-நடிகைகள் அதிகம் இருப்பதால் தி.மு.க.வும் திரை நட்சத்திரங்களை அதிக அளவில் எதிர்பார்த்தது.
இந்நிலையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக கருணாசை பயன்படுத்த தி.மு.க. முடிவு செய்தது. அதற்கு கருணாசும் ஒத்துக்கொண்டார். தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரை 10 நாட்கள் பிரசாரம் செய்யும்படி தி.மு.க. மேலிடம் அறிவித் துள்ளது.
கருணாசை தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் 13 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இந்த பயண பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.
- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
- தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்த அவர் இன்று சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அவர் தருமபுரிக்கு புறப்பட்டு சென்றார். தே.மு.தி.க. சார்பில் அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
- வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.
இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.
போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு கடையை நோக்கி சென்றார். அங்கு பெண்மணியிடம் இஸ்திரி பெட்டி வாங்கி துணிகளுக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அருகில் இருந்த பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என கூறினார்.
இதையடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது.
- பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
கோவை மாவட்த்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
மொத்தம் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 10 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அலுவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24-ந் தேதி நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு காலை முதல் மாலை வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன்படி மொத்தம் 10 சட்டசபை தொகுதிகளில் 3,779 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 12,294 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு என மொத்தம் 15,073 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பயிற்சி நாளில் விடுமுறை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். பலர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கடந்த முறை பங்கேற்காத 980 பேரும் பங்கேற்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இன்று நடக்கும் பயிற்சி வகுப்பில் மொத்தம் 1,700 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள மிக முக்கியமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, போல் மானிடரிங் சிஸ்டம் செயலி குறித்த விளக்கம் உள்ளிட்டவை குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
- கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?
- விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் 5 முறை பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பேசத் தொடங்கும்போது "வணக்கம்" என்று தமிழில் கூறியே பிரசாரம் செய்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
தனது பேச்சின் இடையே திருக்குறளை கூறுவது, தனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பது என பிரதமர் மோடியின் தமிழ் பாசம் தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், "தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லையே" என்றும் கூறி ஆதங்கப்பட்டார்.
இதற்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். எங்கும் இந்தி, எதிலும் இந்தி என இந்தியை திணித்துவிட்டு பிரதமர் மோடி கண்ணீர் வடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,
நேற்று மாலைச் செய்தி:
தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!
நேற்று காலைச் செய்தி:
அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?
ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே...
கருப்புப் பணம் மீட்பு,
மீனவர்கள் பாதுகாப்பு,
2 கோடி வேலைவாய்ப்பு,
ஊழல் ஒழிப்பு போல்
காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,
அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!
விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.
"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!
தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று தெரிவித்துள்ளார்.
நேற்று மாலைச் செய்தி:தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!நேற்று காலைச் செய்தி:அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?கெட்டிக்காரன் புளுகாவது… pic.twitter.com/iHbDlYQKio
— M.K.Stalin (@mkstalin) March 30, 2024






