search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிச்சை எடுத்த பெண்ணிடம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.1½ லட்சம் திருட்டு பணம்
    X

    பிச்சை எடுத்த பெண்ணிடம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.1½ லட்சம் திருட்டு பணம்

    • தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் மது போதையில் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் 3 கட்டுகளாக பணம் இருந்தது தெரியவந்தது. பணத்தை எண்ணிப்பார்த்ததில் ரூ.1½ லட்சம் இருந்தது.

    விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணி மேகலை (வயது 35) என்பதும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணத்தை வைத்திருந்ததாக கூறினார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த நித்தியா என்பவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண், நித்தியா வீட்டுக்குள் வந்து சென்றது தெரியவந்தது.

    அந்த பெண் குறித்து விசாரிக்கும் போது பறக்கும் படை சோதனையில் சிக்கிய மணிமேகலை என்பது தெரியவந்தது. அவர்தான் ரூ. 1½ லட்சம் பணத்தை திருடியதுடன், பிச்சை எடுத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் தெரிவித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×