என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
- அடுத்த 5 நாட்களில் 2 டிகிரி வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.
தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. ஈரோட்டில் அதிகபட்சமாக 104 டிகிரி பதிவாகியுள்ளது. பரமத்திவேலூர், தர்மபுரியில் 102 டிகிரியும், சேலம், திருச்சி, வேலூரில் 101 டிகிரியும், திருத்தணி மற்றும் மதுரையில் 100 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகி காணப்பட்டது.
இதே போன்று வெயிலின் தாக்கம் அடுத்த 5 நாட்களுக்கும் அதிகரித்தே காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அடுத்த 5 நாட்களில் 2 டிகிரி வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும்.
படிப்படியாக வரும் நாட்களில் வெயில் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெறும் ஏப்ரல் 2-வது வாரத்தில் தற்போது இருப்பதை விட வெயில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவே ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு தொடங்குகிறது. சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் சி.எஸ்.ஐ., பெந்தெகொஸ்தே, இ.சி.ஐ., லுத்ரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ஆயர்கள் இயேசு உயிர்த்தெழுந்தது குறித்த சிறப்பு செய்தியை வழங்குவார்கள்.
சென்னையில் உள்ள சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், ராதாகிருஷ்ணன் சாலை கதீட்ரல் பேராலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், சூளை ஆன்ட்ரூஸ் ஆலயம், வேப்பேரி தூய பவுல் ஆலயம், சின்னமலை ஆலயம், அண்ணாநகர் ஆலயம் என சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதையொட்டி ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஈஸ்டர் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொள்கிறார்கள். வழிபாடு முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இன்று இரவு முதல் சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட பலர் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கவின் (வயது 17). இவர் கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவிலில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவ மீனவர்கள் ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24).
இந்த நிலையில் கவின், ஜஸ்வந்த், காளிதாஸ் ஆகிய 3 பேரும் நேற்று இரவு சின்னங்குடியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். பின்னர் இரவில் அங்கேயே தங்கினர்.
இன்று காலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாசல் நோக்கி புறப்பட்டனர். அப்போது ராதாநல்லூர் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் மின்கம்பம் உடைந்த நிலையில் மாணவர் கவின், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காளிதாஸ் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கவின், ஜஸ்வந்த் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த காளிதாசை சிகிச்சைக்காகவும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது.
- உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை:
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் 'ஐபேக்' நிறுவனம் பணியை முடித்துக்கொண்டு வெளியேறியது.
இப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 'பென் டீம்' செயல்பட்டு பிரசார வியூகம் வகுத்து வருகிறது. இது தி.மு.க. தலைமையே உருவாக்கிய நிறுவனமாகும். ஐபேக் டீமில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டதோ? அதே வகையில் பென் டீம் சற்று வித்தியாசமாக தி.மு.க.வுக்கு ஆலோசனைகளை வழங்கி பணியாற்றுகிறது.
இந்த நிறுவனம் இப்போது தேர்தல் பிரசார பாடல்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பிரசார பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப் பிரபலமான நிலையில் இப்போது 2-வது பிரசார பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
அந்த பாடல் வரிகளில் ஆஜாகா, ஐஜாகா, ஊஜாகா வேணாமே வீணான பூஜாகா, ஏஜாகா ஐஜாகா ஓஜாகா நாமளா? அவங்களா? பார்ப்போம் வா...
உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிரசார பாடல் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
- பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
- குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கெங்கவல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் இருந்தது மூட்டைகளை பிரிந்து பார்த்த போது அதில் 50 மூட்டைகளில் குட்கா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து காரின் எண்ணை வைத்து யாருடையது என்பது குறித்தும், குட்கா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). அதே பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் (50).
நேற்று மாலை மாரியப்பன் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக லட்சுமணன் வீட்டுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாரியப்பனை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலை குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
- காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றது.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல், தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது. அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆவணங்கள், அரண்மனை பெட்டகத்தில் ஆய்வு செய்தபோது, நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.
- சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகி உள்ளது.
ஆவணங்கள், அரண்மனை பெட்டகத்தில் ஆய்வு செய்தபோது, நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.
சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது.
- தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது.
- முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சஞ்சய் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று இரவு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ மீது பலமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்தார்.
இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்செந்தூர் சாலை ஓரமாக சமீப காலமாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக முன் அறிவிப்பு இல்லாமல் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருவழி பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.
- நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியை சேர்ந்த அலமேலுபுரத்திற்கு உட்பட்ட கோட்டமேடு, அசோக்நகர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
தேவையான குடிநீர் பைப், சாக்கடை கால்வாய் பராமரிப்பு, ரோடு வசதி, தெருவிளக்கு ஆகியவை அமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். மேலும், அவர்கள் நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.
இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.
முறையான நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைப்போம் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
- குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள குப்பை மேட்டில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து எருமப்ப ட்டி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குப்பைமேட்டில் இறந்து கிடந்த பெண் சிசுவை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குப்பைமேட்டில் இறந்த பெண் சிசுவை வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ ர்கள் எருமப்பட்டி மற்றும் பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். குப்பை மேட்டில் இறந்த நிலையில் பெண் கிசு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.
- கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது.
ஆறுகள் அனைத்தும் வறண்டுள்ளதால் போதிய நீர் கிடைக்காமல் வால்பாறை வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கி உள்ளன.
டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.
அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கோழிக முத்தி முகாமில் இருந்து வரகலியாறு வழியாக வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிகளுக்கு கலீம், பேவி, காவேரி ஆகிய 3 யானைகள் நேற்று அழைத்து வரப்பட்டன.
டாப்சிலிப் பகுதியில் போதிய நீர் கிடைக்காததால் இந்த மூன்று யானைகள் மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ள முகாமில் மூன்று யானைகளும் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.






