என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன.
    • மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    மரக்காணம்:

    மரக்காணம் அருகே காக்காபாளையம் கிராமம் மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. இதில் இரவு வெகுநேரமாகியும் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.

    இதனால் சுதாகர் அவரது மாட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது அவரது பசு மாடு குடல் சரிந்த நிலையில் இருந்தது. மர்ம நபர் யாரோ மாட்டின் வயிற்றில் குத்தியதால் குடல் வெளியில் வந்திருக்கும் என்று சந்தேகம் அடைந்த சுதாகர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாடு உயிரிழந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுதாகர், மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் விலங்கு நல வாரியத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் மாடு வளர்ப்போரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
    • 10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

    இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் வெளியில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    வியாபாரிகள் அதிகளவில் பணம் எடுத்துச்செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

    அவ்வாறு முறையான ஆவணங்களை காட்டாதவர்களின் பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.

    பறிமுதல் செய்யப்படும் பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரித்துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாகவும், அதனை கண்காணிக்கவும், கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தது. இதில் போலீசார், வருவாய்த்துறை, 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

    கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால், பறக்கும் படை எண்ணிக்கையை 90-ல் இருந்து 10 ஆக குறைத்துள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இதுவரை பறக்கும் படையில் இடம் பிடித்து இருந்த அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பி பணியை தொடங்கினர்.

    10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 4-ந் தேதி வரை இந்த பறக்கும் படையினர் பணியில் இருப்பார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
    • அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
    • நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் தாலுக்கா, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29 வயது). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூமணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார். அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா, கர்ப்பிணி பூமணிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவியளித்து கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா மற்றும் அவசர சிகிச்சை வாகன ஓட்டுனர் உதயகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
    • வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு தேரடியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. 27-வது தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். திருவையாறு நான்கு ராஜ வீதிகளில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது. இன்று மாலையில் தேர் நிலையை வந்து அடையும். அப்போது தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    விழாவில் வரும் 25ஆம் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
    • செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

    பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

    17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.



    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
    • இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்த சிலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மேலும் அவர் மீதும் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உட்பட 14 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.

    அதனைத் தொடர்ந்து இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 8-வது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங் மற்றும் போலீசார் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-1 நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் முதல் நிலை காவலர் ஒருவர் ஆகிய 4 பேர் தவிர மீதம் உள்ள 10 போலீசாரும் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நீதிபதி திரிவேணி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    அவர்களை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(45),அவரது மகன் சஜித்மேனன்(8) சிவனேசுவரன்(49) என்பது தெரியவந்தது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் இதனால் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

    • சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார்.
    • ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). போலீஸ்காரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஹரிதாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு ஹரிதாசுக்கு அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த போலீஸ்காரர் ஹரிதாஸ் உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

    • ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் பாலகுமார் (வயது 38). இவர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சனிக்கிழமை பாதுகாப்பு பணி முடிந்து கோவை கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த நிலையில் அவரது பெற்றோர் பாலகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் பாலகுமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலகுமாரனின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாலகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கோவையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள ஓட்டலின் கிளைக்கு பணியாற்ற சென்று விட்டார்.

    பாலகுமார் 2 குழந்தைகளையும் தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளிநாட்டில் உள்ள தனது மனைவியிடம் பாலகுமார் போனில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மீண்டும் கணவர் பாலகுமாரை லண்டனில் இருந்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் இதுகுறித்து பாலகுமாரின் பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அதன்பிறகே பாலகுமார் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    • வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
    • தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை வெளியிட்டது.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்கு பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மறுநாள் வாக்கு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.94 சதவீதம் பதிவானதாக அறிவித்தது. இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.

    வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை நேற்று வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மாறி மாறி வாக்குப் பதிவு சதவீதத்தை தெரிவித்து வந்ததால் ஏன் இந்த குளறுபடி என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.


    இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    செல்போன், செயலி வருவதற்கு முன்பு வாக்குச் சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவாகும் வாக்கு விவரம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த வாக்குச்சாவடி அலுவலர்களும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகளும் சரியான புள்ளி விவரங்களை மேலிடத்துக்கு தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வாக்கு சதவீதத்தை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதனால் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடைசியாக அனுப்பிய செய்தி குறிப்பில், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தோராயமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறி இருந்தார்.


    இதுபற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சதவீத மாறுபாடு என்பது வழக்கமாக நடக்க கூடியதுதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரிய அளவில் நாடு முழுவதும் இதே போல் வாக்கு சதவீத வித்தியாசம் ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் அதே போல் இப்போதும் குளறு படி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதீத ஆர்வம் தான். ஒவ்வொரு மணிக்கும் எத்தனை ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கேட்பதால் வரும் பிரச்சனை. ஏனென்றால் ஒவ்வொரு பூத்திலும் உள்ள அலுவலர்கள் அங்கு உள்ள பணியை டென்ஷனுக்கு மத்தியில் பார்க்கும் போது மேலிடத்துக்கு தகவல் சொல்லும்போது பதற்றத்தில் தவறுதலாக புள்ளி விவரங்கள் சொல்வது உண்டு. எனவே இந்த முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.

    அதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை சேகரித்தாலே போதுமானது. தேவையில்லாத டென்ஷன் குறையும்.


    வாக்காளர் பட்டியலில் இருந்து நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கிறது. இதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.

    அதற்கு ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் கார்டையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் இதை செய்ய முற்பட்ட போது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இதை கட்டாய மாக்காமல் விட்டு விட்டனர். இதனாலேயே பாதி பிரச்சனை நடக்கிறது.

    வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டால் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.

    ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்றெல்லாம் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறது என்றால் அது அவர்களின் தவறு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 6 மாதத்துக்கு முன்பே கொடுக்கிறார்கள்.

    அதை அரசியல் கட்சிகள் சரிபார்க்காமல் இருந்து விட்டு இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×