என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து விளைவிக்கும். தமிழ்நாட்டின் நலன், உரிமைகளை பாதுகாப்பதற்காக S.I.R.-க்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம்.

    ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தில் வந்து தங்கியுள்ளனர்.

    S.I.R. காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் அபாயகரமான நிலை ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என யார் யாரோ வந்தார்கள் தவிர, வளர்ச்சி இல்லை.
    • கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரியலூர்:

    'உரிமை மீட்க தலைமுறை காக்க' எனும் நடைபயணத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் கொள்ளிடம் ஆற்றுநீரை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி, அதன் மூலம் விவசாயம், தொழில்வளம் பெருக வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

    சோழர் பாசனத் திட்டத்தில், சோழகங்கம் ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அறிவிப்போடு கிடப்பில் கிடக்கிறது.

    இந்த திட்டம் காலத்தின் கட்டாயம். சோழர்காலத்தில், கொள்ளிட ஆற்று நீரை சோழகங்கம் ஏரியில் நிரப்பி விவசாயம் செழித்திருந்தது. ஆனால் இங்குள்ள அரசாங்கம் மண்ணையும், மக்களையும் நாசாக்கியது. கடந்த 4 மாதத்தில் மேட்டூர் அணையில் 7 முறை நீர் நிரம்பி வழிந்தது. 50 டிஎம்சி நீர் வீணாக கடலுக்குச் சென்றது.

    இந்த நீரை இங்குள்ள ஏரி, குளங்களில் நிரப்பத்தான் சொல்கிறோம். அதற்காக அரசாங்கம் எதையும் செய்ய வேண்டாம். சோழர்கள் விட்டுச் சென்ற வழிப்பாதைகள் மூலம் ஏரி, குளங்களில் நிரப்பலாம். வலசைப் பறவைகளின் வருகை சென்னைக்கு அடுத்தப்படியாக அரியலூர் மாவட்டத்துக்கு தான் அதிகளவில் வருகிறது.

    அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என யார் யாரோ வந்தார்கள் தவிர, வளர்ச்சி இல்லை. மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ.15 ஆயிரம் கோடி செலவிடுவதை, அந்த பணத்தை நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு செலவிடலாமே.

    இந்தப் பணத்தை சோழர் பாசனத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி, சேலத்தில் 40 லட்சம் பேர் பயன்பெறும் திட்டமான மேட்டூர் உபரி நீர் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி, அத்திகடவு அவிநாசி விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி, காவிரி-குண்டாறு திட்டத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவிடலாமே.

    கர்நாடகாவில், கடந்த மாதம் கிருஷ்ணா நீர்பாசனம் ஒரே திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 2 முறை சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 2023-ம் ஆண்டில், 23 குவாரிகளில் ரூ.27 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது இந்த அரசு.

    இதில் ஒரு குவாரியில் 8 லாரிகள் மட்டுமே செல்கிறது என்று தமிழக அரசு கூறுகிறது.

    இதனை அமலாக்கத்துறை கண்டுப்பிடித்து, விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவர்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. படுத்தோல்வி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம் மோசடியாக செயல்படுகிறது.

    பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது.

    நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.

    குடியுரிமை சான்றிதழை கொடு என்றால் என்னால் கூட தற்போது கொடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
    • ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. ஆந்திராவில் கரையை கடந்த மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இது எங்கள் நாட்டு எல்லை, இங்கு மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறியதுடன், அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அத்துடன் தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் நீண்ட தூரம் வரை ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும் துரத்தியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் இலங்கை கடற்படைக்கு அஞ்சி ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

    இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ராமேசுவரம் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பிரச்சனையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
    • எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.

    சென்னை:

    வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-

    பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.

    பழங்குடி மக்கள் குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை.

    ஒவ்வொரு வாக்காளரும் 2002-2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும்.

    இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.

    தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை 2002-2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு உத்தேசமாக பொருத்திப் பார்த்ததில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்களே முழுமையாகப் பொருந்துகின்றன எனக் கூறப்படுகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.

    அதாவது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று கருத வேண்டி உள்ளது.

    மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்க்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இதற்கிடையில் எஸ்.ஐ.ஆர். குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் மத்தியில் தொடங்கியபோது கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அணைகள், ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. மேலும் ரூல்கர்வ் நடைமுறையால் உபரியாக கேரளாவுக்கு தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 333 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 400 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 137.65 அடியாக உள்ளது. 6533 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.11 அடியாக உள்ளது. 1823 கனஅடி நீர் வருகிற நிலையில் 1499 கனஅடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையில் 5601 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 139 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உள்ளது. 4 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது .
    • ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.

    2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்தி ரேலியா)-ஜோர்னா கார்லேண்ட் (சீனதைபே) மோதினார்கள். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் கிம்பெர்லி 6-7 (2-7), 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

    3-வது செட்டில் ஒரு கட்டத்தில் கார்லேண்ட் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வாய்ப்பை அவர் தக்க வைக்க தவறிவிட்டார். 4 முறை மேட்ச் பாயிண்ட் வந்தும் அவர் தோல்வியை தழுவினார்.

    நீண்ட நேரமாக போட்டி நடைபெற்றதால் கார் லேண்ட் மிகவும் சோர்வடைந்தார். மேலும் தசைப் பிடிப்பும் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மருத்துவ உதவியை பெற்றார். தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது . அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த போட்டி 3 மணி 24 நிமிட நேரம் நடைபெற்றது.

    முன்னதாக நடந்த அரை இறுதி போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜேனிஸ் டிஜென்- கிம்பெர்லி பிரெல் மோதுகிறார்கள்.

    இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரியா பாட்டியா- ருதுஜா போசலே ஜோடி 7-5, 0-6, 5-10 என்ற கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென்- அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனே சியா)ஜோடியிடம் தோற்றது.

    இந்த ஜோடி இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்டோம் கண்டர் (ஆஸ்திரேலியா)- மோனிகா (ருமேனியா) ஜோடியுடன் மோதுகிறது.

    • சாலையின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.
    • வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் 3டி லேசர் ஸ்கேனர் கருவி உதவியுடன் சாலையின் பல்வேறு இடங்களில் அளவீடு செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து 100 அடி வரை அளவீடு செய்யப்பட்டது. இந்த சோதனை சுமார் 6½ மணி நேரம் நடந்தது.

    நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு அங்கு வந்த அவர்கள் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த அளவீடு செய்யும் பணியானது மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. சம்பவம் நடந்த இடத்தின் 2 பக்கங்களிலும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. நேற்று காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை 9½ மணி நேரம் இந்த ஆய்வு பணி நடந்தது.

    இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தற்போது 10 வணிகர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்ஐஆர் நடவடிக்கைகை எதிர்ப்பது ஏன்? என விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.

    அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே.

    மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

    இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருகை தந்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கொல்லிமலையில் இருந்து காரவள்ளி வரை சுமார் 25 கிலோ மீட்டர் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்தார். ரூ.2.28 கோடி மதிப்பில் புதுச்சத்திரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு வட்டாரங்களில் 3 புதிய பொது சுகாதார வளாகம், 2 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தையும் திறந்து வைத்து பேசினார்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் உருவாகி உள்ளது.
    • அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் - வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் - வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?

    மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தம் என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

    ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.

    அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

    முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?

    தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?

    இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக. பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன.

    அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது.

    எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து. ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

    மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகளை முன்வைக்கிறது.

    1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

    2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

    3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.

    4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.

    6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

    7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.

    நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.

    அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.

    அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க., இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?

    தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு, மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம்.

    ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.

    தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.

    சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க.

    தூங்கிக்கொண்டிருந்ததா? ஒன்றிய பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறதா?

    இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

    ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.

    ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் த.வெ.க. எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.

    ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர்.

    மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×