என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்- அன்புமணி
- அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என யார் யாரோ வந்தார்கள் தவிர, வளர்ச்சி இல்லை.
- கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.
அரியலூர்:
'உரிமை மீட்க தலைமுறை காக்க' எனும் நடைபயணத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் கொள்ளிடம் ஆற்றுநீரை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி, அதன் மூலம் விவசாயம், தொழில்வளம் பெருக வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
சோழர் பாசனத் திட்டத்தில், சோழகங்கம் ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அறிவிப்போடு கிடப்பில் கிடக்கிறது.
இந்த திட்டம் காலத்தின் கட்டாயம். சோழர்காலத்தில், கொள்ளிட ஆற்று நீரை சோழகங்கம் ஏரியில் நிரப்பி விவசாயம் செழித்திருந்தது. ஆனால் இங்குள்ள அரசாங்கம் மண்ணையும், மக்களையும் நாசாக்கியது. கடந்த 4 மாதத்தில் மேட்டூர் அணையில் 7 முறை நீர் நிரம்பி வழிந்தது. 50 டிஎம்சி நீர் வீணாக கடலுக்குச் சென்றது.
இந்த நீரை இங்குள்ள ஏரி, குளங்களில் நிரப்பத்தான் சொல்கிறோம். அதற்காக அரசாங்கம் எதையும் செய்ய வேண்டாம். சோழர்கள் விட்டுச் சென்ற வழிப்பாதைகள் மூலம் ஏரி, குளங்களில் நிரப்பலாம். வலசைப் பறவைகளின் வருகை சென்னைக்கு அடுத்தப்படியாக அரியலூர் மாவட்டத்துக்கு தான் அதிகளவில் வருகிறது.
அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என யார் யாரோ வந்தார்கள் தவிர, வளர்ச்சி இல்லை. மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ.15 ஆயிரம் கோடி செலவிடுவதை, அந்த பணத்தை நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு செலவிடலாமே.
இந்தப் பணத்தை சோழர் பாசனத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி, சேலத்தில் 40 லட்சம் பேர் பயன்பெறும் திட்டமான மேட்டூர் உபரி நீர் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி, அத்திகடவு அவிநாசி விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி, காவிரி-குண்டாறு திட்டத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவிடலாமே.
கர்நாடகாவில், கடந்த மாதம் கிருஷ்ணா நீர்பாசனம் ஒரே திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 2 முறை சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 2023-ம் ஆண்டில், 23 குவாரிகளில் ரூ.27 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது இந்த அரசு.
இதில் ஒரு குவாரியில் 8 லாரிகள் மட்டுமே செல்கிறது என்று தமிழக அரசு கூறுகிறது.
இதனை அமலாக்கத்துறை கண்டுப்பிடித்து, விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவர்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. படுத்தோல்வி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.






