என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

1 கோடி பேர் பெயர்களை நீக்கி தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்ட சதி- திருமாவளவன் குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
- எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.
சென்னை:
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-
பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.
பழங்குடி மக்கள் குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு வாக்காளரும் 2002-2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும்.
இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை 2002-2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு உத்தேசமாக பொருத்திப் பார்த்ததில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்களே முழுமையாகப் பொருந்துகின்றன எனக் கூறப்படுகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.
அதாவது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று கருத வேண்டி உள்ளது.
மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்க்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கிடையில் எஸ்.ஐ.ஆர். குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






