என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
    • ஜனவரி மாத இறுதியில் படிப்படியாக குறையும்.

    சென்னை:

    கோயம்பேடு மார்க் கெட்டுக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்கு வருகிறது. தினசரி 150 டன் அளவிலான பூண்டு விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 25 டன் பூண்டு மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்ற முதல் ரக பூண்டு தற்போது ரூ.350ஆக அதிகரித்துள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.220 முதல் ரூ.350 வரையிலும், சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்படுகிறது.

    இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் வெங்காயம் விலை ஏற்கனவே ஒரு கிலோ ரூ.100-யை எட்டி உள்ள நிலையில் தற்போது பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, "கோயம்பேடு சந்தைக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வரும்.

    இந்த மாநிலங்களில் தற்போது பூண்டு சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.

    இனி வரும் நாட்களில் பூண்டின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஜனவரி மாத இறுதியில் மீண்டும் வரத்து அதிகரித்து பூண்டு விலை படிப்படியாக குறையும்" என்றார்.

    • 77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது.
    • இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடிஉயர திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் இரண்டுக்கும் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சம் கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட கூண்டின் மீது 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பகுதி அமைகிறது. இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

    இந்த பாலத்தில் 101 கூண்டுகள் பொருத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரியில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக 30 கூண்டுகள் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கொண்டு சென்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

    கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையிலும் விவேகானந்தர் பாறையிலும் ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் ஆர்ச் போன்ற கூண்டு அமைப்பை பொருத்து வதற்காக இரும்பு தூண்கள் மூலம் சாரமும் அமைக் கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டு உள்ள 2 ராட்சத தூண்களுக்கு இடையே இரும்பு கம்பிகளால் வடம் போன்று தயாரிக்கப்பட்ட ரோப்புகள் அமைக்கப்பட்டு அந்த ரோப்புகள் வழியாக தொழில் நுட்ப வல்லுநர்கள் விஞ்சு மூலம் சென்று இந்த கூண்டு ஆர்சுகளை பொருத்தி வருகின்றனர்.

    இந்த இரு பாறைகளிலும் தலா 4 ஆர்ச்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் வர உள்ளது.

    இதனை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

    • கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை.
    • சோதனை சாவடிகளிலேயே சோதனை.

    கொடைக்கானல்:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. வார விடுமுறை காரணமாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.


    இ-பாஸ் மற்றும் வழக்கமான சோதனைக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    மேலும் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.20 பசுமை வரி வசூலிக்கப்பட்டது.

    இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருேக உள்ள சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இ-பாஸ் பெறாமல் வந்த வாகனங்களை சுங்கச்சாவடி அருகிலேயே நிறுத்தி சோதனை செய்ததால் மற்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இ-பாஸ் குறித்து தெரியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் இ-பாஸ் பெறுவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    மலைச்சாலையில் இ-பாஸ் சோதனை செய்வதால் குறுகிய இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு மற்றும் காமக்காபட்டி சோதனைச்சாவடியிலும், பழனி அடிவார பகுதியிலும் கொடைக்கானல் வருவதற்கு முன்பே சுற்றுலாப் பயணிகளிடம் இ-பாஸ் சோதனை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

    மேலும் நேர விரையமும் தவிர்க்கப்படலாம். எனவே அடிவாரப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலேயே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க அரசு பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு ஜனவரி மாதம் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இதேபோல் அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் மோடி பலரை களத்தில் இறக்கினாலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க, காங்கிரஸ் ஒன்று சேர்ந்து மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் பணியை மேற்கொள்வோம்.

    சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து பா.ஜ.க அரசு பழிவாங்கும் நோக்கோடு செயல் பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் கலவரத்தை ஏற்படுத்த முடியாதா?, குழப்பத்தை ஏற்படுத்த முடியாதா என பலர் ஏங்கி வருகின்றனர்.

    திருமாவளவன் பேட்டி கொடுத்தால் அணி மாறுகிறார் என்றும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கூட்டணியில் குழப்பம் என பேசி வரும் எடப்பாடி, நாங்கள் வருகின்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என கூறுகிறார்.

    முதலில் அவருடைய கட்சி வலுவான கட்சியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓ.பி.எஸ், தினகரன் உள்ளிட்டவர்களை ஒன்றாக சேர்க்க முடியாதவர்கள் வலுவான கூட்டணியை எப்படி அமைக்க முடியும்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். எங்கள் கூட் டணி வலுவாக உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக இருப்போம். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை நுழைய விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.
    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.

    மேலும் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 64.96 அடியாக உள்ளது. அணைக்கு 1309 கன அடி நீர் வருகிறது. 4622 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு இன்று முதல் 9 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை வைகை அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று முதல் 18-ந் தேதி வரை 9 நாட்களுக்கு 1830 மி.கன அடியும், வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 418 மி.கன அடியும் வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 8 நாட்களுக்கு 752 மி.கன அடியும், 3000 அடிக்கு மிகாமல் 27 ஆயிரத்து 529 ஏக்கர், 40 ஆயிரத்து 743 ஏக்கர் மற்றும் 67 ஆயிரத்து 837 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1354 மி.கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசன பகுதி 1, 2, 3க்கு தண்ணீர் திறப்பு விதிகளின்படி 2:3:7 விகித அடிப்படையில் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.60 அடியாக உள்ளது. 766 கன அடி நீர் வருகிற நிலையில் 1100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 3539 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 100 கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 52.30 கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • வினோத தேங்காய்யை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
    • தேங்காயை பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போகிறோம் என்றார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள நரிக்குடி கிராமத்தில் மெயின்ரோட்டில் வசிப்பவர் காசிநாதன் (வயது 60). விவசாயி. இவரது தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தோப்பில் உள்ள தென்னை மரங்களில் விளைந்த தேங்காய்களை (மட்டையுடன்) பறித்து, அதனை வீட்டில் வைத்திருந்தார். பின்னர், நேற்று அவர் பறித்த தேங்காய்களில் இருந்து மட்டை தேங்காய்களை உறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது ஒரே மட்டையில் ஒரு பெரிய தேங்காயுடன் இயற்கையாகவே விளைந்த குட்டி தேங்காயும் நாருடன் சிக்கி இருந்துள்ளது. அந்த குட்டி தேங்காயின் அளவு சுமார் 3 செ.மீ வரை இருந்துள்ளது.


    இதனை கண்ட அவர் ஆச்சரியம் அடைந்தார். பின்னர், இதுகுறித்து அவர் குடும்பத்தினருக்கு தெரிவித்த, அவர்களும் இந்த வினோத தேங்காய்யை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

    பின்னர், இதுகுறித்து விவசாயி காசிநாதன் கூறுகையில்:-இது போன்ற வினோதமான தேங்காய் இதுவரை விளைந்ததில்லை. எனக்கு தெரிந்து இதுவே முதன்முறை. எனவே, இந்த தேங்காயை நாங்களே (குடும்பத்தினர்கள்) பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போகிறோம் என்றார்.

    மேலும், இந்த ருசிகர சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தினர், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அந்த குட்டி தேங்காயை கண்டு புன்னகைத்து மகிழ்ந்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்து கொண்டிந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 250 கிராம் எடையுள்ள கஞ்சா அல்வா மற்றும் கஞ்சா, அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் பகுதிக்கு மேற்கே உள்ள கருவாட்டு பாறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி ஆகியோரின் ஆலோசனையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வகணேசன், தனிப்பிரிவு மகேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரகசிய சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கருவாட்டு பாறை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் நெல்லை மாவட்டம் தேவர்குளம் சுப்பையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் ஈஸ்வர மூர்த்தி (வயது 21) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் எடையுள்ள கஞ்சா அல்வா மற்றும் கஞ்சா, அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்றுள்ளதும், போலீசில் சிக்காமல் இருக்க அல்வாவிற்குள் கஞ்சாவை வைத்து பல நாட்களாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    • இப்போது சாலையில்‌ செல்லும்‌ 10 கார்களில்‌ 8 கார்கள்‌ தமிழக வெற்றி கழகத்தின்‌ கொடிகளைக்‌ கட்டி செல்கின்றன.
    • இன்னும்‌ 16- 17 மாதங்கள்‌ கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும்‌.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பேசினார்.

    தமிழக வெற்றி கழகத்தினர் முதல் மாநாட்டை எப்படி நடத்த போகிறார்கள் என்று உலகமே உற்று நோக்கி வந்த நிலையில் ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகிகளும் ஒற்றுமையோடு ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் விழாவாக நினைத்து கடுமையாக உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் சரி, தமிழக வெற்றிக் கழத்தினருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் விஜய் தான். உங்களுக்காக முதலில் வந்து நிற்பதும் அவர்தான். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18. மாதங்கள் மட்டுமே உள்ளன. 2026-ல் முதலமைச்சர் இடத்தில் விஜய்யை உட்கார வைப்பதற்கு நாம் உழைக்க வேண்டும்.

    நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதனை செயல்படுத்த வேண்டும். நல்ல விஷயங்களுக்காக நல்ல முறையில் நமது கட்சியை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தை வளர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

    இப்போது சாலையில் செல்லும் 10 கார்களில் 8 கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்கின்றன. இன்று உச்சத்தில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தலைவர் உண்டு என்றால் அது விஜய்தான். இனி வரும் காலங்களில் இது போன்ற மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளது.

    அதற்கும். தொண்டர்கள் ஓத்துழைப்பு தர வேண்டும். வருகிற 16, 17,23,24-ந் தேதிகளில் நடக்கவுள்ள வாக்காளர் பெயர் சேர்க்கை, திருத்தம் முகாம்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று பொதுமக்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்வதற்கும் உதவ வேண்டும்.

    இது போன்ற விஷயங்களுக்கு மக்களுக்கு உதவுவதோடு மக்களோடு மக்களாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் இருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொறு தொகுதிக்கும் விஜய் வர உள்ளார். அப்போது நம் கட்சியினர் மக்களுக்கு செய்த உதவிகளை அவரிடம் தெரிவிக்கும் வகையில் உதவ வேண்டும்.

    இன்னும் 16- 17 மாதங்கள் கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும். தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விஜய் படத்தை வைத்து உள்ளாட்சிகளில் 127 இடங்களில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், துணைத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளோம். தற்போது கட்சியாக ஆரம்பிக்கப்பட்டதால் இனி எல்லாமே வெற்றி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
    • இந்த ஆண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி. பாசனத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அணை குறிப்பிடத்தக்க பங்களிப்பை உடையது. 3864 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் மொத்தம் 120 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம்.

    ஆழியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர் ஆயக்கட்டு பாசனம், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி ஆழியாறு அணையில் 118.65 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அவ்வப்போது நீர்வரத்துக்கேற்ப மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது. இதன்காரணமாக 3 மதகுகள் வழியாகவும் வினாடிக்கு 600 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. மேலும் வினாடிக்கு 722 கனஅடிநீர் வரத்து உள்ளது. இதனால் ஆறு மற்றும் மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 1006 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று மதியம் 12 மணிக்கு 119.5 அடியாக நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 900 கனஅடி நீர்வரத்தும் இருந்தது. மேலும் மேல்நீராறு, காடம்பாறை பகுதியில் இருந்து தண்ணீர்வரத்து அதிகம் இருந்ததால் 3 மதகுகள் மற்றும் ஆறு வழியாக வினாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்தாண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கு நீர்மட்டம் ஒரே அளவில் நீடித்து வருகிறது. மேலும் தொடர்மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதால் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை நீடிக்கிறது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
    • இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி (15-ந்தேதி), பிரதோஷத்தை (13-ந்தேதி) முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 4 நாட்களில் மலையேற வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதி 11-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    பாலித்தீன் கேரிப்பை, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    வருகிற 16-ந்தேதி கார்த்திகை மாத பிறப்புன்று பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினித் (20). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர்களான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

    நேற்று வினித் வீட்டிற்கு அவரது நண்பர்களான நந்தகுமார், ஷேக் பெருசல்லி சாகிப் ஆகியோர் வந்துள்ளனர். பின்னர் மாலை சுமார் 3 மணியளவில் நகப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு நண்பர்கள் 3 பேரும் குளிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் வினித்தின் பெற்றோர் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜவேல், ஜெர்மையா அருள் பிரகாஷ், செல்வம், கார்த்திகேயன், பூபதி, சரவணகுமார், சரவண கணேஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் காவிரி ஆற்றில் மீன்பிடி படகுமூலம் தேடினர்.

    இரவு 11 மணி வரை தேடி பார்த்தனர். இரவு இருள் சூழ்ந்ததன் காரணமாக தண்ணீரில் மாயமான மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மணியுடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் நகப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து மீன்பிடி படகு மூலம் காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி காணாமல் போன 3 பொறியியல் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து தேடினர்.

    அப்போது வட்டப்பாறை என்ற பகுதியில் பாறை இடுக்கில் இருந்து மாணவர் வினித் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து மேலும் நந்தகுமார், ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய 2 கல்லூரி மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்களை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.
    • கஸ்தூரி மீது சென்னை எழும்பூரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.

    அந்த வகையில் சென்னை எழும்பூரில் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சம்மன் கொடுக்க சென்றபோது நடிகை கஸ்தூரி தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. கஸ்தூரியின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

    ×