என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்தவர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்வர்களை தேடி வருகின்றனர்.

    வெள்ளிச்சந்தை:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை கடத்துவதாக பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் மகேந்திர மங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த இன்னோவா சொகுசு காரை போலீசார் நிறுத்த கூறினர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்தவர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 40 மூட்டைகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 டன் குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்வர்களை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை பார்வையிட்ட டி.எஸ்.பி மனோகரன் கூறுகையில் தொடர்ந்து குட்கா பொருட்கள் கடத்தல் குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குட்கா கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

    • இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • 13, 14, 15-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 13-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    12-ந் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    13, 14, 15-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    • நிர்வாக காரணங்களால் விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
    • விமானங்கள் திடீர் ரத்தால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 4, புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ஆகிய 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதில் காலை 9.40 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும் மற்றும் அதிகாலை 1 மணிக்கு புனே, காலை 9 மணி, மாலை 5.35 மணிக்கு பெங்களூரு, இரவு 8.20 மணிக்கு டெல்லி, இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. விமானங்கள் திடீர் ரத்தால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, இதை போல் நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள விமான பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் இன்று இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுவிட்டு, அதன் பின்பு பயணம் செய்ய விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது.

    • கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டக் கழக முன்னணியினரான உங்களைச் சந்திப்பதில் பெருமை அடைகிறேன்.
    • வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று கள ஆய்வு நடத்தி வருகிறார்.

    விருதுநகரில் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    அரசின் திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கள ஆய்வு செய்வதற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் திட்டமிட்டு என்னுடைய பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். ஆட்சிக்கான கள ஆய்வோடு - கட்சிக்கான கழக ஆய்வும் சேர்த்து நடத்தினால்தான், இந்தப் பயணத்தின் நோக்கம் முழுமையாகும்.

    அதனால்தான் உங்களையும் சந்திக்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தில் சொல்லி, இது போன்ற சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டக் கழக முன்னணியினரான உங்களைச் சந்திப்பதில் பெருமை அடைகிறேன். தேர்தல் நேரங்களில் விருதுநகர் மாவட்டத்தில் மாநாடுகளை நடத்துவதை நாம் வழக்கமாக வைத்திருந்தோம். 2004 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விருதுநகரில்தான் 'தென்மண்டல மாநாடு' நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 40-க்கு 40 பெற்றது தி.மு.க. கூட்டணி! அதேபோல் 2024 தேர்தலில் "நாற்பதுக்கு நாற்பது" முழக்கத்தை முதன் முதலாக 2022-ல் விருதுநகரில் நடந்த கழக முப்பெரும் விழாவில் தான் முன் வைத்தேன்! சொன்னது போலவே 40-க்கு 40 வரலாற்று வெற்றியை நாம் பெற்றோம்.

    அதே போன்ற வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டும். வரும் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதை நினைத்துக் கொண்டு மெத்தனமாகவும் இருந்துவிடக் கூடாது. அலட்சியமாகவும் இருந்து விடக் கூடாது.

    மக்களை சந்தித்து நம்முடைய கொள்கைகளை, சாதனைகளைச் சொல்லுங்கள். நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அதை மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்வது மாதிரி துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இளைஞர்கள் மற்றும் மகளிரைக் கழகத்தை நோக்கி ஈர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களை அழைத்து, அவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களைச் சிறு சிறு அளவில் நடத்துங்கள்.

    நேற்றுகூட, கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட "என் உயிரினும் மேலான" பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பேச்சாளர்கள் பங்கெடுத்து இருந்தார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்ற பேச்சாளர்களைப் பயன்படுத்தி நீங்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

    மாதம் ஒரு சிறு கூட்டம் போதும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை!

    அதேபோல், மகளிருக்காக ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறையாவது சந்திக்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் கழகப் பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

    அவர்கள் சென்று பார்க்கும்போது மகளிருக்கு என்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நோட்டீஸாக அடித்து வழங்கச் சொல்லுங்கள். நம்முடைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய வேலை.

    இங்கு வந்திருக்கும் நிர்வாகிகள் பல்வேறு தொழில்கள் செய்கிறவர்களாக இருப்பீர்கள். உங்களின் வேலையில் கவனம் செலுத்துவது போன்றே, உங்கள் குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்கிச் செலவிடுங்கள்.

    உங்கள் பணிகளுக்கிடையே ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்.

    உங்களுக்கு நான் நிர்ணயித்துள்ள இலக்கு எவ்வளவு? 200-க்கு 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும்.

    வேட்பாளர் யார் என்று தலைமைக் கழகம் அறிவிக்கும். வெற்றி பெறுபவர் தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனவே, திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை.

    ஏழாவது முறை ஆட்சி அமைக்க விருதுநகரில் இருக்கும் ஏழு தொகுதிகளிலும் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி எனக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் கழக ஆட்சி அமைந்தது என்ற வரலாற்றை எழுத கழகத்தினர் வீரியத்துடன் செயல்படுங்கள். வெற்றியை ஈட்டித் தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு கேள்விகளை எழுப்பியதால் நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    • தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது.
    • 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 7-வது நுழைவுவாயில் 5 கிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடருடன் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சின்னத்திரை துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா (வயது 28) என்பது தெரிய வந்தது.

    தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது. 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். துணை நடிகை மீனாவுக்கு 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.
    • ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன. அவை கடற்கரை பகுதிகளில் குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகின்றன.

    ஆமையை மீனவர்கள் உணவுக்காக பிடிக்கவோ, வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

    கரை ஒதுங்கிய ஆமை சுமார் 3 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் முகத்தில் கண்கள் இல்லாமல், வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. கடற்கரையில் இறந்து ஒதுங்கி கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பார்த்தனர்.

    இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆமை எவ்வாறு இறந்தது? யாரேனும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஆமையை அந்த பகுதியிலேயே உடற்கூறாய்வு செய்து புதைக்கவும் ஏற்பாடு செய்தனர். 

    • ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
    • உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).

    இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

    இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

    இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.

    குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    • மர்ம தேசம் உள்ளிட்ட படைப்புகளை கொடுத்த எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் காலமானார்.
    • என் பெயர் ரங்கநாயகி, மர்மதேசம், விடாது கருப்பு உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன.

    பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

    இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி -இந்திரா தம்பதியினருக்குப் பிறந்தார். நாற்பது ஆண்டுகாலமாக மதுரையில் வசிக்கிறார்.

    நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர்.

    இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுஷ்ய நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டன.

    என் பெயர் ரங்கநாயகி, மர்மதேசம், விடாது கருப்பு, சொர்ண ரேகை, உள்ளிட்ட புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார். என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம், விடாது கருப்பு உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. இந்த தொடர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது வரைக்கும் யாருமே மறக்க முடியாத தொடர்களாக இது உள்ளது. சிங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

    • நாகராஜ், கடந்த 7-ந் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த நாகராஜனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரிடமும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(48), கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக நாகராஜிக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது.

    இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது இரைப்பையில் கட்டி இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து நாகராஜ், கடந்த 7-ந் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது, டாக்டர்களின் கவன குறைவாலும், தவறான சிகிச்சையாலும் அருகில் இருந்த மண்ணீரலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நாகராஜிக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அதிகமான ரத்த போக்கு இருந்ததாக தெரிகிறது.

    இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததால் டாக்டர்கள் தாங்களாகவே நாகராஜிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இதுபற்றி டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த நாகராஜனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரிடமும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆபரேசன் முடிந்தும் நாகராஜின் உடல் நிலை மோசம் அடைந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் டாக்டர்களிடம் விசாரித்தபோதுதான் இறப்பை கட்டி ஆபரேசனின் போது தவறான சிகிச்சையால் மண்ணீரல் அகற்றப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜனின் உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நாகராஜின் உறவினர்கள் ஆஸ்பத்திரி உள்ளேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து நாகராஜின் உறவினரான திருவள்ளூரை சேர்ந்த மாறன் என்பவர் கூறும்போது, நாகராஜ் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு இங்கு வந்தபோது இரைப்பையில் கட்டி உள்ளது என்று கூறி அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது தவறான சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இது குறித்து உறவினர்யாரிடமும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • 12-ந்தேதி- காலையில் போடி நாயக்கனூர், மாலையில் பெரியகுளம் (தேனி).
    • 5, 6, 9 ஆகிய மண்டலங்களுக்கான சமூக வலைதள பயிற்சி, மாநில துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து சட்டமன்ற தொகுதி வாரியாக சமூக வலைதள பயிற்சி வழங்கி வருகிறோம்.

    இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இப்போது கீழ்க்கண்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான சமூக வலைதள பயிற்சி நடைபெற இருக்கிறது.

    அதன் விவரம் வருமாறு:-

    12-ந்தேதி- காலையில் போடி நாயக்கனூர், மாலையில் பெரியகுளம் (தேனி).

    13-ந்தேதி- காலையில் நாகை, ஆண்டிப்பட்டி, மாலையில் கீழ்வேளூர் (திருக்குவளை), கம்பம்,

    14-ந்தேதி காலையில் தென்காசி இலஞ்சி, மாலையில் கடையநல்லூர்.

    இதே போல் இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான சமூக வலை தள பயிற்சி மண்டல வாரியாக நடைபெறுகிறது.

    இதில் 5, 6, 9 ஆகிய மண்டலங்களுக்கான சமூக வலைதள பயிற்சி, மாநில துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
    • இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாமன்னர் ராஜராஜசோழன் 1039-வது சதயவிழா நடந்து வருகிறது. விழாவில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியகோவில் மிக புண்ணியம் பெற்றது. திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் ஏற்ப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜசோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள்.

    அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு.

    எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன்.

    தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகத்தை இந்த அரசு நடத்துவதை சாதனையாக பார்க்கிறேன். பெரிய கோவில்களை காட்டிலும், கிராம கோவில்களின் உண்டியல் வருமானம் அதிகளவில் உள்ளது. கிராம கோவில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த கோவில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.

    இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான ரூ.400 கோடி மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் ரூ.500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
    • லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூரைஅடுத்த காட்டுப்பள்ளியில் நிலக்கரி கிடங்கு சாலை வடசென்னை அனல் மின்நிலைய குடியிருப்பு முதல் நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனை காமராஜர் துறைமுகம் பராமரித்து வருகிறது.

    இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் சேமிப்பு கிடங்கில் இருந்து நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் 4 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் பழுதடைந்து பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது. சேதம் அடைந்த சாலையில் லாரிகள் செல்லும் போது அதன் டயர்கள் அடிக்கடி கிழிந்து விடுவதால் லாரி டிரைவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, நிலக்கரி கிடங்கு சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு லாரியாக சென்று வருவதால் குறித்த நேரத்தில் நிலக்கரியை ஏற்றி செல்ல முடிவதில்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களில் சேதம் அடைந்த சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட லாரிகள் பழுதாகி உள்ளன. எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாகம் சாலையை சீரமைத்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×