என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
- சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறானது நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
சமீப காலமாக தாமிரபணி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் வி.கே.புரம் நகராட்சியில் தொடங்கி நெல்லை மாநகர பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வரையிலும் சுமார் 60 இடங்களில் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், குடிக்கும் வகையில் இருந்த அந்த தண்ணீர் மாசுபட்டுவிட்டது.
இதனால் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முத்தாலங் குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித் துறைகள், கல்மண்டபங் களை சீரமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு இன்று தாமிரபரணி நதியை நேரில் பார்வையிட வருவதாகவும், அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மதுரையில் இருந்து நெல்லை வந்தனர்.
நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நீதிபதிகள் சந்திப்பு சிந்துபூந்துறை நதிக்கரை, உடையார்பட்டி நதிக்கரை, ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.
பின்னர் டவுன் குறுக்குத்துறை பகுதியில் ஆய்வு செய்த நீதிபதிகள், கல்லணை பள்ளி அருகிலும், முருகன்குறிச்சி பாளையங் கால்வாய் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தலைமையில் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணியில் ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும், நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை.
- மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.
மண்டபம்:
ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய-இலங்கை கடல் எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என மீனவர்களை எச்சரித்தனர். உடனடியாக 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம், அவசரமாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் இலங்கை கடற்படை வீரர்கள் அத்துமீறி ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் தாவிக்குதித்து அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துக்கொண்டனர். அத்துடன் மீன்பிடி உபகரணங்கைளையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.
இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டு விட்டு கரைக்கு புறப்பட்டனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ராஜா, கீதன், சகாயராஜ், ஆகியோருக்கு சொந்தமான மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும், அதிலிருந்து டைட்டஸ், சரவணன், ஜெரோம், யாக்கோபு உள்ளிட்ட 23 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அதனை தங்களது ரோந்து கப்பலில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
இந்நிலையில் இலங்கையில் பாராளுமன்ற பொது தேர்தல் வரும் நாம் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் ஒரே இரவில் 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
கடந்த 29-ந்தேதி கொழும்புவில் நடைபெற்ற இரு நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மீனவர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய சார்பில் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது வேதனை அளிப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
- மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர்.
- வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர்.
வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை இழந்து அவரது வாடும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
- டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக மாணவ, மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.
கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்.
- கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.
- பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி ஷோபனாவின் கல்லூரி படிப்புக்கு உதவியது தொடர்பாக நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.
மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கோவலம் கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது முட்புதருக்குள் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 2 டன் எடை உள்ள பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து இந்த பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகாமை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
- இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மண்டபம்:
இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக அங்கிருந்த தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர தொடங்கினர். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 450 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கியுள்ளனர். அவர்களின் குடும்ப தேவைக்காகவும், வாழ்வாதாரம் காக்கவும் முகாமை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்திற்கு இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு அவ்வாறு வந்த சுமார் 290 பேர் கைது செய்யப்படாமல், மனிதாபிமான அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையில் பொருளாதார தடை காலத்திற்கு பிறகு கடந்த 10.4.2022 அன்று தமிழகம் வந்து மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இலங்கை திரிகோணமலையை சேர்ந்த நிரோஷன் என்ற தீபன் (வயது 25), சுதா என்ற கீதா (38), விதுஸ்திகா (13), அஜய் (12), அபிநயா (2), ஞான ஜோதி (46), ஜித்து (12), மகேந்திரன் (50), பூபேந்திரன் (54)ஆகியோர் இலங்கை செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சொந்தமாக படகு ஒன்றை விலைக்கு வாங்கி நேற்று பிற்பகல் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை நோக்கி சென்றனர். அப்போது இலங்கை கடற்படை இரவு 9 மணியளவில் நெடுந்தீவு அருகே அவர்களை கைது செய்தது. அதைத்தொடர்ந்து இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் இருக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த டெல்லி கணேஷ் மற்றும் இந்திரா சவுந்தரராஜன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, இரந்திரா சவுந்தரராஜன் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பக்தியையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தனது படைப்புகளை உண்மைக்கு மிக நெருக்கமாக உருவாக்கி, லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்த பெருமைக்குரியவர். மிகச் சிறந்த பக்திமானாகத் திகழ்ந்தவர்.
திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடிகளைச் சேர, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டிருந்தார்.
- மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 2 தங்க காசுகளும் 2 தங்க மோதிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் கியாஸ் ரெகுலேட்டரில் மறைத்து எடுத்து வந்த ரூ.27.19 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
- டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன்.
விருதுநகர்:
விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். 2-வது நாளான இன்று ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் பட்டம்புதூரில் நடைபெற்ற விழாவில் 58 ஆயிரம் பேருக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்தேன்.
இதில் 1786 கிராமங்களுக்கு ரூ.1387.73 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
அதேபோல் சமூக நலத்திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது என்றும் ஆய்வு செய்தேன். விருதுநகர் மாவட்டத்தில் 95 சதவீதத்திற்கும் மேல் பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
நேற்றைய கள ஆய்வில் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை சந்தித்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்படி பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் அனைத்து உயர்கல்வி வரையிலான அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதனை மாவட்ட அளவில் முடிவு செய்து வழங்ககூடிய வகையில் கலெக்டரின் கீழ் தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கு முதல் கட்ட நிதியாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்கும்.
காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் உள்ள கண்மாய்கள் ரூ.17 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். காரியாபட்டி வட்டத்தில் உள்ள தெற்கு ஆற்றில் ரூ.21 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்படும்.
காளிங்கபேரி, வெம்பக்கோட்டை, அனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகள் ரூ.23 கோடியே 30 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும். அணைகளின் அருகே ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.
அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் ரூ.24.50 கோடி மதிப்பில் சாலை வசதி, மேம்படுத்தப்படும். சாத்தூரில் ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள், பூங்காக்கள் அமைக்கப்படும்.
ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்படும். அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.3 கோடியில் மழைநீர் வடிகால் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கழிவறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவை ரூ.2.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இந்த விழாவில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றேன். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித்துறையை உருவாக்கினேன். அதன் மூலம் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது வந்த மனுக்களில் பெரும்பாலும் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டுவதற்கு பணம் இல்லை. புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம் என அதிகளவில் மனுக்கள் வந்தன.
இதையடுத்து வருவாய் துறைக்கு உத்தரவு பிறப்பித்தேன். அதில் மக்களுக்கு எந்தளவுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடியுமோ? அந்த அளவிற்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். தீவிர நடவடிக்கை எடுத்ததின்பேரில் 2021-ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து 10 லட்சத்து 3ஆயிரத்து 824 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சி தான் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டு.
மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக் கூடிய முதல்வனாக இருப்பேன். அப்படி தான் செயல்பட்டு வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு இந்தியளவில் அதிக சக்தி வாய்ந்த தலைவர்களில் எனது பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெருமையும் புகழும் தமிழக மக்களையே சாரும்.
உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் ஸ்டாலினின் பலம். தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன். இந்த உழைப்பினுடைய பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் எதிரொலித்து வருகிறது.
முதலில் வந்து விட்டோம் என்று ஒருபோதும் நான் திருப்தியடைவில்லை. என்னை விட என்னை முந்தி செல்வதற்கு இன்னும் வேகமாக பலர் ஓடி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தள்ளதா? என்பதை அறிய மாவட்டந்தோறும் கள ஆய்வு நடத்தி வருகிறோம்.
ஆனால் இதைபற்றி எதுவும் அறியாத மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலைபடாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நல திட்டங்களுக்கு மூலதன செலவுகளை அதிகமாக செய்து கலைஞர் பெயரில் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை வீணடித்து வருகிறோம் என உளறியிருக்கிறார். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது என்ற பேச்சு உள்ளது. பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவிற்கு பொய் சொல்லக்கூடாது என கூறலாம். அந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்.
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டிற்காக 80 ஆண்டுகாலம் ஓயாமல் உழைத்தனர் கலைஞர். மக்கள் திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்களது பெயரையா வைக்க முடியும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
- தமிழகத்தில் சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
சென்னை:
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைந்து வருகிற 28-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதற்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவோம்
* கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும்.
* கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் மழை பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில் சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறும்.
* உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
* ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை எதிர்கொண்டு, வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும், நம் தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






