என் மலர்
உள்ளூர் செய்திகள்
விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்?
- 77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது.
- இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடிஉயர திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் இரண்டுக்கும் இடையே நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
77 மீட்டர் நீளத்திலும் 10 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சம் கடல் அலைக்கு மேல் 7 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தின் ஆர்ச் உயரம் 11 மீட்டர் ஆகும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட கூண்டின் மீது 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பகுதி அமைகிறது. இரு பக்கங்களிலும் கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தில் 101 கூண்டுகள் பொருத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரியில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதல் கட்டமாக 30 கூண்டுகள் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் கொண்டு சென்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையிலும் விவேகானந்தர் பாறையிலும் ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் ஆர்ச் போன்ற கூண்டு அமைப்பை பொருத்து வதற்காக இரும்பு தூண்கள் மூலம் சாரமும் அமைக் கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டு உள்ள 2 ராட்சத தூண்களுக்கு இடையே இரும்பு கம்பிகளால் வடம் போன்று தயாரிக்கப்பட்ட ரோப்புகள் அமைக்கப்பட்டு அந்த ரோப்புகள் வழியாக தொழில் நுட்ப வல்லுநர்கள் விஞ்சு மூலம் சென்று இந்த கூண்டு ஆர்சுகளை பொருத்தி வருகின்றனர்.
இந்த இரு பாறைகளிலும் தலா 4 ஆர்ச்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் வர உள்ளது.
இதனை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பிறக்கும் போது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.