என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது.
    • பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை இன்றும் நீடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடைமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் மாவட்டத்தில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 1731.40 மி.மீ.அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196.40 மி.மீ. மழை கொட்டியுள்ளது. மஞ்சளாறில் 191 மி.மீ., கும்பகோணத்தில் 179 மி.மீ, கீாணை-168 மி.மீ, பாபநாசம்-124.20 மி.மீ, அய்யம்பேட்டை-124 மி.மீ, பூதலூர்-115, திருக்காட்டுபள்ளி-85.20, திருவையாறில் 78 மி.மீ, தஞ்சாவூரில்-35 மி.மீ. மழையும் பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    தொடர்மழையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மூழ்கிய பயிர்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஃபெஞ்ஜல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இடைவிடாது பெய்யும் மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    தொடர்மழையால் இன்றும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் பின்னத்தூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் 11.5 சென்டிமீட்டர் திருவாரூரில் 8.3 செ.மீ வலங்கைமானில் 8.8 சென்டிமீட்டர் குடவாசலில் 7.3 செ.மீ நீடாமங்கலத்தில் 7.2 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது

    இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீரில் சாய்ந்து வருகிறது. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப்போல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பனங்குடி, ஏனங்குடி, ஆனைமங்கலம், குறுக்கத்தி, கிள்ளுக்குடி, சீராவட்டம், திருப்பூண்டி, பூவை தேடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8.2செமீ மழை பதிவாகியுள்ளது.

    நாகையில் 8.2செமீ, திருப்பூண்டி 0.9, வேளாங்கண்ணி 1.9, திருக்குவளை 1.1, தலைஞாயிறு 1.2, வேதாரண்யம் 1.4 கோடியக்கரை 2.8 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

    இதைப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
    • உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்

    திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் [டிசம்பர் 12] ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

    இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரித்துள்ளார்.

    • ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர், களக்காடு, அம்பை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்சவல் பத்தமடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    முக்கூடல் பகுதியில் இருந்து கடையம் நோக்கி செல்லும் சாலையில் இடை கால் அருகே சாலையில் முழங்கால் அளவுக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    24 மணி நேரமாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந் துள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை 2 நாட்களாக பெய்து வருவதால் களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை சுற்றுவட்டாரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதே போல் பாப்பாக்குடி, இடைகால், சீதபற்ப நல்லூர், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வீரவநல்லூர் பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் சரகம் புதூர் அருகே நான்கு வழி சாலையில் உள்ள முதியோர், பெண்கள் காப்பகம் ரோட்டின் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை தண்ணீர் சூழ்ந்தது. முதியோர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    நெல்லை மாநகரப் பகுதியில் நெல்லையில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாநகரில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக டவுன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    டவுன் முகமது அலி தெருவில் நேற்று நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் தெரு, செண்பகம் பிள்ளை தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்களில் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    காட்சி மண்டபம் அருகே உள்ள ஊசி மாடன் கோவில்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கி கிடந்தது. நெல்லையப்பர் கோவிலில் வடக்கு மண்டபம் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

    டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பாளையங்கோட்டை பகுதியிலும் மனக்காவலம் பிள்ளை நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதிகாலையில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தங்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்துக்கு இடையே பொதுமக்கள் வெளி யேறினர்.

    இதேபோல் கே.டி.சி நகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகரின் விரிவாக்க பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சுமார் 2000 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று இரவு வரை பெய்த மழையிலேயே பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சிந்து பூந்துறை தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர். அங்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வங்கி கட்டிடத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பேட்டை பழைய பேட்டை இணைப்பு சாலையில் வெள்ளநீர் கரை புரண்டு வருவதால் அங்குள்ள ஆதாம் நகர் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    இதேபோல் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அவற்றை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று அப்புறப்படுத்தி னர். ஒரு சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலும் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவற்றை சரி செய்தனர்.

    டவுன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் அந்த சாலை ஆனது துண்டிக்கப்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைய ஆரம்பித்த நிலையில் ஏராளமான பொது மக்கள் தரைபாலத்தை பார்வையிட்டனர்.

    இதே போல் ஆபத்தை உணராமல் வண்ணார் பேட்டை கொக்கிரகுளம் ஆற்று பாலம், வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலங்களில் நின்றபடி வெள்ளத்தை கண்டு ரசித்தனர். ஏராளமானார் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிந்தது.

    கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை இடை விடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கோவில்பட்டி நகர் முழுவதும் சாலை களில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள கார் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    அப்பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீர் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து இருந்துள்ளனர். தங்களது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர்.

    பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குறிஞ்சான் குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இ.எஸ்.ஐ.மருந்தக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்து வரும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெரு பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், கியாஸ் சிலிண்டர் அனைத்துமே மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பலத்த மழையின் காரணமாக இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் உள்ளன. மேலும் அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பஸ் மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

    அதேபோன்று அப்பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க், லாரி செட்டுகள், தனியார் நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இன்று காலை 9 மணி வரையிலும் பரவலாக பெய்தது. சிறிது நிமிடங்கள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் வறண்டு கிடந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அந்த குளங்களில் 70 சதவீதம் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    ஏற்கனவே குறைந்த அளவு தண்ணீர் கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளது.

    பல ஆண்டுகளாக நிரம்பாத குளங்கள் கூட நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு சில இடங்களில் கோவில்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நேர் புகுந்தது. 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது. அங்குள்ள புது குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் மறுகால் பாய்ந்ததால் மெயின் ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    ஆலங்குளம் பஞ்சாயத்து அலுவலக தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்ததன் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது. முக்கிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இது தவிர தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்தும் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலமாகவும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வருவதால் இன்று காலை நிலவரப்படி 60 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார். 

    • சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
    • சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50அடியாகும்.

    இந்த ஏரி சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர்வரத்து இருக்கும்.

    இந்த ஏரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் தற்போது 46.8 அடி தண்ணீர் உள்ளது. மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான மீன் சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் ஏரி அமைந்துள்ள லால்பேட்டையில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.

    நீர்வரத்து அதிகமாக உள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வி.என்.எஸ் மதகு வழியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், வெலிங்டன் ஓடை வழியாக 18 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் திருநரையூர், சித்தமல்லி, அறந்தாங்கி உள்ளிட்ட 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

    என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அங்குள்ள பெருமாள் ஏரியில் வந்தடையும். தற்போது அதிக அளவில் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் பெருமாள் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள பெல்லாந்துறை அணைக்கட்டில் இருந்தவினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    கோவை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

    கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மிதமான அளவில் மழை பெய்தது. இன்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருள்போல காட்சியளித்தது.

    தொடர்ந்து மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், பாப்ப நாயக்கன்பாளையம், அண்ணாசிலை, லட்சுமில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    காலை நேரத்தில் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆங்காங்கே உள்ள நிழற்குடைகள், பாதுகாப்பான இடங்களில் மக்கள் நின்றனர். பலர் குடைபிடித்தபடியும், பிளாஸ்டிக் கவர், ஜர்க்கின் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான அளவில் மழை பெய்தது. மாலையிலும் மழை நீடித்தது.

    இரவில் 7 மணிக்கு பிறகு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை வெளுத்து வாங்கி வருகிறது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அக்காமலை, பச்சைமலை, சோலையார் அணை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கவர்க்கல் எஸ்டேட், ரொட்டிக்கடை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மழையால் வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

    இரவு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, சூலூர், சுல்தான்பேட்டை, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையால் கோவையில் குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    வால்பாறை தாலுகா-57 நீரரார்-40, சோலையார் அணை-26 

    • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • அணையில் தற்போது 89.24 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 4727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 6384 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 117.31 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 89.24 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யத் தொடங்கியது.

    தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைகை அணையின் பிறப்பிடமான வெள்ளியனை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தும்மக்குண்டு, வருசநாடு, முருக்கோடை, கடமலைக்குண்டு, மயிலா டும்பாறை, கண்டமனூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இப்பகுதி மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கும்படியும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தங்கமாள்புரம் பகுதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.


    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயரத்தொடங்கி உள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 49.67 அடியாக உள்ளது. வரத்து 1039 கன அடியாகவும், திறப்பு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 1950 மி. கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக உள்ளது. வரத்து 3153 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 2756 மி.கன அடி.

    மஞ்சளாறு அைணயின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. இருப்பு 399 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.17 அடி. வரத்து 88.58 அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 83.57 அடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடி. வரத்து 103 கன அடி. திறப்பு 14.47 கன அடி. இருப்பு 67.14 மி.கன அடி.

    பெரியாறு 101., தேக்கடி 108, சண்முகாநதி அணை 51, ஆண்டிபட்டி 42.2, அரண்மனைபுதூர் 26, வீரபாண்டி 30.4, பெரியகுளம் 54.2, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 24, வைகை அணை 39, போடி 30, உத்தமபாளையம் 18.4, கூடலூர் 33 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து நேற்று முன்தினம் சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

    நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    11-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    10-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,640

    09-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    08-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-12-2024- ஒரு கிராம் ரூ. 104

    11-12-2024- ஒரு கிராம் ரூ. 103

    10-12-2024- ஒரு கிராம் ரூ. 104

    09-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    08-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    • குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அருவி கரையில் அமைந்துள்ள சிறிய பாலம் பலத்த சேதமடைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோவில் அணை, குண்டாறு அணை, கருப்பாநதி அணை, கடனாநிதி அணை, ராமாநதி அணை உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ராமநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,550 கன அடிக்கு மேல் நீரானது வெளியேற்றப்படுகிறது.

    இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையானது அந்த பகுதியில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சுமார் 188 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து உள்ளது.

    அதன்படி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 230 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் 238 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், குண்டாறு அணைப்பகுதியில் 208 மில்லி மீட்டர் மழைப் பொழியும், செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் 240 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 312 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், சங்கரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் 146 மில்லிமீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக அதிகாலை 6 மணி வரை மாவட்டத்தில் 188 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    சுற்றுலா தலமான குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அருவி கரையில் அமைந்துள்ள சிறிய பாலம் பலத்த சேதமடைந்தது.

    வெள்ள நீர் குற்றாலம் பஜார் பகுதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். அதேபோன்று ஐந்தருவியிலும், பழைய குற்றால அருவியிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.


    பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடைபாதையில் அமைந்திருக்கும் கடைகளை சூழ்ந்து வெள்ள நீர் சென்றது.

    மேலும் கடுமையான மழையின் காரணமாக குளங்கள், கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. நீர் நிலைகள் வேகமாக நிரம்புவதோடு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட கலெக்டர் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை எனவும் அறிவித்துள்ளார்.

    கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633-290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். 

    • மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    • 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.Spirituality

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.


    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரி யார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    பரணி தீபத்தை முன்னிட்டு 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

    விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்ததால் காலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

    நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டு சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
    • தமிழகத்திற்கு வரும் 17-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

    மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று மற்றும் 16, 18-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்திற்கு வரும் 17-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நேற்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக இருந்த நிலையில், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். நேற்று அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில் அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    ×