search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam waterfall"

    • ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இருப்பினும் பெரிய வெள்ளம் ஏற்படாததால் காலை 10 மணி வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    அதன் பின்பு மழைப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் காட்டாற்று வெள்ளத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மெயின் அருவியில் பாது காப்பு வளைவை தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்ட தால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு உடனடியாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    இன்று காலை முதலே அருவி கரைகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணி களின் வருகை அதி கரித்ததன் காரணமாக அருவிக் கரைகளில் அமைந்துள்ள கடைகளில் பழங்கள் உணவுப் பொருட்களின் விற்பனை யானது அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.'

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 107.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறில் 119.62 அடியும், மணிமுத்தாறில் 74.85 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 376 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பிசான பருவ நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி அமைந்துள்ள வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் சிவகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் மழை குறைந்ததால் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக வானம் பார்த்த பூமியான பல்வேறு இடங்களில் குளிர்ந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதிகளில் வெண்டை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

    தற்போது புதியம்புத்தூர் அருகே குப்பனாபுரம் பகுதியில் மக்காச்சோளப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு அதிக பலன் தரும் வகையில் இருப்பதால் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். விரைவில் அவை அறுவடையாகும்.

    • குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று சாரல் அடித்தது.

    புறநகர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் அங்கு விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

    நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 41.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 93.40 அடியையும், சேர்வலாறு அணை 107.87 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்த வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 76 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 8 அடி நீர் உயர்ந்தால் அணை நிரம்பிவிடும். அந்த அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 73.50 அடியாக உள்ளது. அங்கு 216 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்துள்ளனர். மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
    • விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி, களக்காடு, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 9 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு பிறகு புதிய பஸ் நிலையம், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. பாளையில் 1.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் மாநகர பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 34 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை கொட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட்டுகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி மாவட்டத்திலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மழை குறைந்து பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் தணிந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 7.5 மில்லிமீட்டர் மழை கொட்டியது. செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதிகளான ராமநதி, கருப்பா நதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு பரவலாக மழை பெய்தது. மேலும் ஆவுடையானூர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது.

    ×