search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    மெயினருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

    குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
    • விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி, களக்காடு, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 9 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு பிறகு புதிய பஸ் நிலையம், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. பாளையில் 1.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் மாநகர பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 34 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை கொட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட்டுகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி மாவட்டத்திலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மழை குறைந்து பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் தணிந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 7.5 மில்லிமீட்டர் மழை கொட்டியது. செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதிகளான ராமநதி, கருப்பா நதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு பரவலாக மழை பெய்தது. மேலும் ஆவுடையானூர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது.

    Next Story
    ×