என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம்.
- காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-ந்தேதி) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36), கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கனமழையை முன்னிட்டு அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
- மீட்பு பணிக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தென்காசிக்கு சென்றுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கனமழையை முன்னிட்டு அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
* மழையால் எவ்வளவு பாதிப்பு வந்தாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது.
* நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்துள்ளது.
* மீட்பு பணிக்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தென்காசிக்கு சென்றுள்ளார்.
* பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு தருவதற்கு தொடர்ந்து பத்திரிகையில் எழுதினாலே மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும்.
* ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலையினை அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்ப்போம் என்று அவர் கூறினார்.
- மழையில் சிக்னல் சரியாக செயல்படாததால் ஒரு சில இடங்களில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
- புதுச்சேரி- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தாமதமாக வந்து சேர்ந்தது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமாகி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் தென் மாவட்ட ரெயில்களும், தென்மாவட்ட பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் ரெயில்களும் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தன.
மழையில் சிக்னல் சரியாக செயல்படாததால் ஒரு சில இடங்களில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. சிக்னல் கிடைத்த பிறகும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக இரு மார்க்கத்திலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் எழும்பூருக்கு தாமதமாக வந்து சேர்ந்தன.
மேலும் விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரெயில்வே பாலத்திலும் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவதும் தாமதத்திற்கான முக்கிய காரணமாகும்.
திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு புறப்பட்ட சிறப்பு ரெயில் 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. புதுச்சேரி- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தாமதமாக வந்து சேர்ந்தது.

எழும்பூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தாமதமாக புறப்பட்டு சென்றது. தென் மாவட்ட ரெயில்கள் விரைவாக வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது.
இதே போல் புறநகர் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரெயல் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.
திருவள்ளூர், ஆவடி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி நின்றதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
அதிகாலையில் இருந்து மூர் மாக்கெட்-அரக்கோணம் இடையேயான புறநகர் மின்சார ரெயில்களை குறித்த நேரத்தில் இயக்கமுடியவில்லை. பயணிகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் மெதுவாக இயக்கப்பட்டன.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
- மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து திடீரென இடிந்து விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரமக்குடி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பரமக்குடியில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு பரமக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இப்பகுதிகளில் அதிகளவில் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் உள்ளன. தொடர் மழையால் மண்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தன. இந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் பலியானார். அதன் விபரம் வருமாறு:-
பரமக்குடி அருகே மேலாய்க்குடி யாதவர் குடியிருப்பில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 6 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
பால்ராஜ் தனது குடும்பத்தினருடன் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜின் மகள் கீர்த்திகா மீது மண்சுவர் விழுந்தது. உடனே பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.
- அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர்:
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு மழை பெய்யாத நிலையில், இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் உத்தரவிட்டார்.
காலையில் பெய்யத் தொடங்கிய மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் பொதுமக்கள் பலர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, காங்கயம், தாராபுரம், பல்லடம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
நேற்று முதல் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணை முழு கொள்ளளவான 90 அடியை எட்ட ஆரம்பித்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் கரையோர கிராம பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. தற்போது வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று காலை முதல் அருவியில் தண்ணீர் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழலும் நிலவியது. அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
மாலையில் சற்று அதிகரித்த நீர்வரத்து அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. மேலும் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-18, கலெக்டர் முகாம் அலுவ லகம்-29, திருப்பூர் தெற்கு-24, கலெக்டர் அலுவலகம்-14, அவினாசி-5, ஊத்து க்குளி-16.30, தாராபுரம்-50, மூலனூர்-56, குண்டடம்-22, உப்பாறு அணை-48, நல்லதங்காள் ஓடை அணை-32, காங்கயம்-23.60, வெள்ளகோவில்-35, வட்டமலை கரை ஓடை அணை-38.60, உடுமலை பேட்டை-63, அமராவதி அணை-110, திருமூர்த்தி அணை-135, திருமூர்த்தி அணை ஐ.பி.,-138, மடத்து க்குளம்-90. மாவட்டம் முழுவதும் மொத்தம் 963.50 மி.மீ., மழை பெய்துள்ளது.
- பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
- விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இவை தவிர வெளிநாட்டு சேவைகளாக பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி தினமும் காலை 6 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்படுவது வழக்கம்.
இந்த விமானம் இன்று காலை ஐதராபாத் நோக்கி புறப்படுவதற்கு தயாரானது.
இதில் 120 பயணிகள் பயணம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
எனினும் அதனை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து அதில் பயணிகள் ஐதராபாத் செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மாற்று விமானம் ஆனது மதியம் 12.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
- பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- விநாடிக்கு 16,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.
இதன் முழுகொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரம் படி நீர்இருப்பு 34.97 அடியாகவும் கொள்ளவு 3159 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என்பதால் அணையின் வெள்ள நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பிற்பகல் முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் மாலை 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து 12760 மில்லியன் கன அடி வந்து கொண்டிருப்பதால் 12000 கன அடி உபரி வெளியேற்றப்படுகின்றது.
இந்த நிலையில் பூண்டி ஏரியில் நீர்வரத்து 16,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் நீர் திறப்பும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999-க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது.
- பச்சரிசி, பாகுவெல்லம் அரைகிலோ, பாசிபருப்பு 100 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி, ஆவின் நெய் 50 கிராம் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999-க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது.
பச்சரிசி, பாகுவெல்லம் அரைகிலோ, பாசிபருப்பு 100 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி, ஆவின் நெய் 50 கிராம் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலைகளில் பரிசு தொகுப்பு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு விற்பனை சங்கம், சில்லரை விற்பனை நிலையங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
- சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.
- வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது .
அரூர்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சித்தேரி, கலசபாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக பகுதியில் உள்ள வரட்டாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று காலை அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமத்தில் சாமநத்தம் ரங்கசாமி தோட்டத்தின் அருகே செல்லும் வரட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த வெள்ள நீரில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது . இதனை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
- அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. துறையூரில் பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி அருகில் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்கிறது.
பச்சமலையில் பெய்த மழையால் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டதால், திருச்சி-துறையூர் சாலைகளில் இருந்து அம்மாபட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இந்த சாலையானது சிங்களாந்தபுரம் ஏரிக்கு அருகில் உள்ளது. இதனால் சிங்களாந்தபுரம் ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அப்பகுதிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறுக்கு சாலையில் உள்ள தண்ணீர் அளவானது தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழையால் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அதிக கன மழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தின சாமி உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
ஜெயங்கொண்டம் 205, செந்துறை 195.4, அரியலூர் 179, சுத்தமல்லி டேம் 152, குருவாடி 115, ஆண்டிமடம் 111.2, திருமனூர் 90, தா.பழூர் 39.4.
எரையூர்-166, அகரம் சீகூர் 140, லெப்பைக்குடிக்காடு 139, வேப்பந்தட்டை-127, தலுதலை-122, கிருஷ்ணாபுரம்-111, வி.களத்தூர்-95, பெரம்பலூர்-94, படுவேட்டைக்குடி 71, செட்டிகுளம் 75, பாடாலூர் 21.
ஆவுடையார்கோவில் 143, மணமேல்குடி 135, மீமிசல் 67, விராலிமலை 63, நாகுடி 66.20, கீழாநிலை 63.90, ஆயின்குடி 57.20, அறந்தாங்கி 56.40, கீரனூர் 50.40, இலுப்பூர் 48.80, ஆதன கோட்டை 48, திருமயம் 46.70, கந்தர்வகோட்டை 45.40, புதுக்கோட்டை 44.10, பெருங்களூர் 40.60, மழையூர் 40.60, உடையாளிபட்டி 39, அன்னவாசல் 35.60, ஆலங்குடி 35, குடுமியான் மலை 34.50, கரையூர் 30.80, பொன்னமராவதி 25.40, கறம்பக்குடி 27, அரிமளம் 20.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 1264.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 52.67 ஆகும்.
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது.
- பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர்:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை இன்றும் நீடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடைமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் மாவட்டத்தில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் ஒரே நாளில் 1731.40 மி.மீ.அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196.40 மி.மீ. மழை கொட்டியுள்ளது. மஞ்சளாறில் 191 மி.மீ., கும்பகோணத்தில் 179 மி.மீ, கீாணை-168 மி.மீ, பாபநாசம்-124.20 மி.மீ, அய்யம்பேட்டை-124 மி.மீ, பூதலூர்-115, திருக்காட்டுபள்ளி-85.20, திருவையாறில் 78 மி.மீ, தஞ்சாவூரில்-35 மி.மீ. மழையும் பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்மழையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மூழ்கிய பயிர்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஃபெஞ்ஜல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இடைவிடாது பெய்யும் மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்மழையால் இன்றும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் பின்னத்தூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் 11.5 சென்டிமீட்டர் திருவாரூரில் 8.3 செ.மீ வலங்கைமானில் 8.8 சென்டிமீட்டர் குடவாசலில் 7.3 செ.மீ நீடாமங்கலத்தில் 7.2 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது
இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீரில் சாய்ந்து வருகிறது. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப்போல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பனங்குடி, ஏனங்குடி, ஆனைமங்கலம், குறுக்கத்தி, கிள்ளுக்குடி, சீராவட்டம், திருப்பூண்டி, பூவை தேடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8.2செமீ மழை பதிவாகியுள்ளது.
நாகையில் 8.2செமீ, திருப்பூண்டி 0.9, வேளாங்கண்ணி 1.9, திருக்குவளை 1.1, தலைஞாயிறு 1.2, வேதாரண்யம் 1.4 கோடியக்கரை 2.8 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதைப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.






