என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது. விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும் மேலும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட பொது மக்கள் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பள்ளி பாழடைந்துள்ளதாகவும் பள்ளிகளில் பல இடங்களில் மின் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாழடைந்த பள்ளியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற தாசில்தாரை அருகே உள்ள மொளசூர் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு அவரை முற்றுகையிட்டு தங்கள் ஊருக்கும் நிவாரணம் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
- பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வடிந்தது. வெள்ளம் வடியாத பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.
ஆனால் புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி பகுதிகளில் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகர், மேல்மா நகர், பிராட்டிஸ் சாலை, அம்மன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை சுற்றி சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை திருவேற்காடு ராஜீவ் நகர், ராஜாங்குப்பம், எஸ்.பி.நகர் குடியிருப்பு, கோலடி, நூம்பல், ஏழுமலை நகர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மாங்காடு சீனிவாசநகர், பத்மாவதி நகர், ஓம்சக்தி நகர், ஸ்ரீசக்ரா நகர் பகுதிகளில் தெருக்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், ஸ்டான்லி நகர், ராயபுரம் பனைமரத் தொட்டி, கல்மண்டபம் சாலை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் வைத்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். கோயம்பேடு ரெயில் நகரில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. சாலைக்கு மேலே ஒரு அடி அளவுக்கு தண்ணீர் செல்வதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.

காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், அருந்ததி பாளையம் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதையடுத்து மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முட்டளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒவ்வொரு பருவமழையின் போதும் இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருப்பதாக கவலை தெரிவிக்கும் நோயாளிகள், இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு அண்ணா நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் இன்னும் சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கியுள்ள நீரில் இருந்து பாம்பு, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னர். அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு மழை வெள்ள நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை வரை செல்லும் சாலையில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நந்தி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளம் காட்டாறு போல் சீறிப் பாய்கிறது. இதனால் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்று வழியாக செல்கின்றன.
- தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
- தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
வி.கே.புரம்:
நெல்லை மாவட்டம் அம்பை, முக்கூடல், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முக்கூடல் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்கு அங்கு பணி யாற்றும் ஊழியர்களான ராஜரத்தினம், லோகராஜ், சங்கர சுப்பிரமணியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்குமார் தலைமையில், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் கயிறு கட்டி, கடும் வெள்ளத்தில் நீரேற்று நிலையத்திற்குள் சென்று அங்கு சிக்கியிருந்த 4 பேரையும் அதே கயிறு மூலமாக பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.
மதுராந்தகம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மதுராந்தகம் ஏரிக்கு வரக்கூடிய நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்பட்டு கிளியாற்று வழியாக செல்கிறது.
இந்த நிலையில் தச்சூரிலிருந்து செங்கல்பட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் பஸ் சகாய் நகர் என்ற இடத்தில் தரைப்பாலம் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது தரைப்பாலத்தின் மீது கிளியாற்று உபரி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த பாலத்தை கடந்து சென்ற போது வெள்ளப்பெருக்கில் பஸ் சிக்கியது. இதனால் பஸ் செல்ல முடியாமல் தத்தளித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் தவித்தனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கயிறு கட்டி பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
ஆனாலும் வெள்ளப்பெருக்கு காரணத்தால் பஸ்சை வெளியே எடுக்க முடியவில்லை. பஸ் தண்ணீரிலேயே சிக்கி நிற்கிறது. தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பவுஞ்சூரில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
- தெற்கு அந்தமான் கடலில் 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
வங்கக்கடலில் மன்னார் வளைகுடா, அதையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று மற்றும் 16, 17, 18-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும்.
தெற்கு அந்தமான் கடலில் 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.
- கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
- உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வங்கடலில் உருவான ஃபெஞ்ஜல் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 377 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 210 ஏரிகள் என மொத்தம் 699 ஏரிகள் முழுவது நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் என மொத்தம் 909ஏரிகள் உள்ளன. இதில் 489 ஏரிகள் முழு கொள்ளள எட்டி உள்ளது.
அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 581 ஏரிகள் உள்ளன. இதில் 210 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதம் 175 ஏரிகளும், 50 சதவீதம் 119 ஏரிகளும், 25 சதவீதம் 73 ஏரிகளும், 20 சதவீதம் 7 ஏரிகளும் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கேசாவரம் அணைக்கட்டு திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கேசாவரம் அணைக்கட்டு நிரம்பியதால் 5 ஷட்டர்கள் மூலம் கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பேரம்பாககம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது. இதேபோல் 100 கனஅடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் உள்ள கால்வாய் வழியே செல்கிறது.
இதனால்ஏரி கரையோரம் உள்ள நேமம், படூர், குத்தம்பாக்கம், இருளப்பாளையம், உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது.
- சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்துங்கநல்லூர்:
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரெயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை பின்னோக்கி கொண்டு சென்றார். இதனால் ரெயில் மீண்டும் தாதன்குளம் ரெயில் நிலையத்துக்கு சென்றது. இதை அங்கிருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து சென்ற பாலக்காடு ரெயில் கச்சானாவிளை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது. இந்த காட்சிகளில் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை செல்லும் போது உடனடியாக என்ஜின் டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று தாதன்குளம் ரெயில் நிலையத்தில் பின்னோக்கி வந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலின் என்ஜின் டிரைவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டுள்ளார்.
- சீமான் போராட்டத்திற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
- கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நா.த.க.வினர் இருப்போம்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தும் மக்களை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.
கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நா.த.க.வினர் இருப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.
- அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
- வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.
கூடலூர்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விடியவிடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் குமுளி-லோயர் கேம்ப் மலைச்சாலையில் அடுத்தடுத்து 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மரம் விழுந்ததால் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல அறிவுறுத்தினர். லோயர் கேம்புக்கு வந்த பல்வேறு வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.
அதனை தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வாகனங்கள் சென்றன. அதிர்ஷ்ட வசமாக மரம் விழுந்த போது வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு மலைப்பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு சாலைக்கு வந்தது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து ஊழியர்களின் உதவியோடு பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்தனர். இருந்தபோதும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.
- வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 4-ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அணுகை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மறுநாள் 5-ம் தேதி வியாழக்கிழமை திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருலுதல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை சுவாமி திருவீதி உலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
தொடர்ந்து 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
- உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம் அணைப்புதூரை சேர்ந்தவர் யோகரத்தினம்..
இவரது மனைவி ஆஷா(வயது41). இவர்களுக்கு அனுப்ராஜா(4), அபிலேஸ்வரன்(15) என்ற மகன்களும், அஸ்வதி(21) என்ற மகளும் உள்ளனர்.
ஆஷா கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து இன்று காலை ஆஷா, தனது மகள் அஸ்வதி, மகன்கள் அனுப்ராஜா, அபிலேஸ்வரன் ஆகியோருடன் திருப்பூரில் இருந்து காரில் புறப்பட்டார்.
காரை திருப்பூர் பவானி நகரை சேர்ந்த விமல்ராஜ்(35) என்பவர் ஓட்டினார்.
இவர்கள் திருப்பூரில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி வழியாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இவர்களது கார் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ரோடு பாப்பாத்தி பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. சிறிது நேரத்தில் சாலையின் இடதுபுறத்தில் உள்ள தென்னை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஆஷா, அவரது மகன் அனுப்ராஜா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
அபிலேஸ்வரனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்துடன் காரில் இருந்த அபிலேஸ்வரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம்.
- காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-ந்தேதி) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36), கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






