search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poonamallee"

    பூந்தமல்லி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்-பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ரூ.6.5 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில் இந்த பணம் டாஸ்மாக் கடையில் வசூலானது என்பது தெரிந்தது.

    இதற்கான ஆவணம் காரில் இருந்தவர்களிடம் இல்லை. பணத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த இந்திரஜித், கார்த்தி ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LoksabhaElections2019

    பூந்தமல்லி சிறைச்சாலை அருகே மர்ம வெளிச்சம் ஏற்பட்டதால் அந்த வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் கிளை சிறைச்சாலை, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சி.ஆர்.பி.எப். பட்டாலியன் பயிற்சி முகாம் ஆகியவை அருகருகே உள்ளன.

    இந்த கிளை சிறைச்சாலையில் இந்த முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட பலர் அடைக்கப்பட்டடுள்ளனர்.

    சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் டவரில் அமர்ந்தபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது சிறைச்சாலை அருகே சுமார் 100 மீட்டர் உயரத்தில் பச்சை நிற வெளிச்சம் தெரிந்தது.

    போலீசார் உஷாரான சிறிது நேரத்தில் அந்த மர்ம வெளிச்சம் காணாமல் போனது.

    மர்ம நபர்கள் யாரேனும் சிறைச்சாலையை கண்காணிக்க ஆள் இல்லா சிறிய விமானத்தை பறக்க விட்டனரா? அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது. இது தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி இடையே போரூர் வழியாக மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-ல் சென்னையில் ‘மோனோ ரெயில் திட்டம்’ தொடங்குவது குறித்து அறிவித்தார். ஜெயலலிதா விரும்பிய மோனோ ரெயில் திட்ட வழித்தடப் பாதைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். போக்குவரத்து நெருக்கடி நிறைந்த போரூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி பாதையில் மோனோ ரெயில் திட்டம் தொடங்குவது சாத்தியமில்லை.

    அங்கு 4-வது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைத்து மெட்ரோ ரெயில் விட அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்தனர். கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. உலக வங்கிகள் நிதி உதவி மூலம் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் அதிகாரிகள் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். #MetroTrain
    பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயரிங் மாணவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா ஜேய்ஷா (18).

    இவர் ராமாவரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாவது ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் 4-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு காயப் போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுப்பு கம்பி எதிர்பாராத விதமாக சரிந்தது.

    இதில் தவறி கீழே விழுந்த வம்சி கிருஷ்ணா ஜோய்ஷா, ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவரை போரூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார். பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சென்னை:

    சென்னை பூந்தமல்லி அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விவேகானந்தன், வீரா என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லியில் வியாபாரி மொபட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பைபாஸ் ரோட்டில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் கடை வைத்திருப்பவர் தேவராஜ் (வயது 52).

    இவர் பூந்தமல்லி டிரெஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 1 லட்சம் எடுத்தார். அதை நண்பர் ஒருவருக்கு கொடுப்பதற்காக தனது மொபட்டில் சென்றார்.

    பணத்தை அந்த மொபட்டின் சீட்டின் கீழே உள்ள அறையில் வைத்திருந்தார். வழியில் ஒரு பெட்டிக்கடை அருகே மொபட்டை விட்டு விட்டு வீட்டுக்கு பொருட்கள் வாங்கினார்.

    பின்னர் மொபட் சீட்டை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ. 1 லட்சத்தை யாரோ திருடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரியிடம் பணம் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள். மொபட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது தேவராஜின் மொபட்டை வேறு ஒரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

    பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    பூந்தமல்லி:

    சென்னை தனிப்படை போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பதுக்கி வைத்துள்ள இடங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த மாதம் அடையாறை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை குட்கா பதுக்கி வைத்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. அதனை தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குடோனில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அடையார் துணை கமி‌ஷனர் சகாயி காங் உத்தரவின் பேரில் 5 பேர் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு மூட்டை மூட்டையாக பான்மசாலா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். சுமார் 10 டன் அளவிலான புகையிலை பொருட்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம்.

    குட்கா பதுக்கி இருந்த குடோன்கள் உரிமையாளர் செந்தில் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது சகோதரர் முத்துலிங்கம் உள்ளிட்ட 5 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடோன் உரிமையாளர் செந்திலிடம் இருந்து ஏற்கனவே குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பறக்கும் சாலை திட்டப் பணிகள் புதிதாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படுகிறது. மேலும் மதுரவாயல்- பூந்தமல்லி வரை நீடிக்கப்படுகிறது. #MaduravoyalFlyover
    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், துறைமுகத்துக்கு எளிதில் கண்டெய்னர் லாரிகள், சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தி.மு.க. ஆட்சியில் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் நடந்து வந்தது.

    2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி பறக்கும் சாலை திட்டத்தை நிறுத்தி வைத்தார். 6 ஆண்டுகளாக பறக்கும் சாலை திட்டம் முடக்கப்பட்டது.

    இந்த நிலையில் 19 கிலோ மீட்டர் துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.2,400 கோடி மறுமதிப்பீட்டில் எல் அண்ட் டி நிறுவனம் இந்த பணிகளை செயல்படுத்துகிறது. துறைமுகம் நேப்பியர்பாலம் அருகில் 14,000 சதுர மீட்டர் கடற்படை நிலம் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஒப்பந்தப் பணிகள் மூலம் இந்த திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து கூவம் ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை பில்லர் அமைக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    2-வது கட்டமாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் பூந்தமல்லி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகள் ரூ.2,400 கோடியில் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் மதுரவாயல்- பூந்தமல்லி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை திட்டப்பணிகள் நீட்டிக்கப்படுகிறது. எல் அண்ட் டி நிறுவனம் பறக்கும் சாலை திட்டப் பணிகளை மேற்கொள்கிறது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் முயற்சியில் இந்த பணிகள் நிறைவேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduravoyalFlyover
    பூந்தமல்லி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி கண்டோன்மென்ட் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(25) தொழிலாளி.

    இவருடைய மனைவி துர்கா(23). இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுப்ரியா(2),சிவன்யா(1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வெங்கடேசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு வெங்கடேசன் தனது 2 குழந்தைகளையும் அருகில் உள்ள துர்காவின் பாட்டி மீராபாய் வீட்டில் விட்டு விட்டு வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தைகள் அழுதன.

    துர்காவின் பாட்டி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டிக் கிடந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். பின்புற ஜன்னலை திறந்து பார்த்த போது துர்கா கட்டிலில் அசைவற்று படுத்து இருந்தார். வெங்கடேசன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். கதவை உடைத்து உள்ளே சென்ற போது துர்கா பிணமாக கிடந்தார். வெங்கடேசனையும் கீழே இறக்கினார்கள். குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு, வெங்கடேசன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.


    மனைவியை கொலை செய்வதற்காக தான், வெங்கடேசன் தனது குழந்தைகளை மனைவியின் பாட்டி வீட்டில் விட்டு வந்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    பிணமாக கிடந்த துர்காவின் உடலில் காயங்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே துர்கா கொலை பற்றிய விவரம் தெரிய வரும்.
    சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் தற்போது 2-வது கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை பூந்தமல்லி வரை நீட்டிக்கப்பட உள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் மாதவரம்- சிறுசேரி வரை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 105 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மாதவரம்- சிறுசேரி, ஆயிரம்விளக்கு- வளசரவாக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்தநிலையில் வளசரவாக்கம்-பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.3850 கோடி செலவில் 13 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது. காரம்பாக்கம், போரூர் ஜங்‌ஷன், ஸ்ரீராமச்சந்திரா ஆஸ்பத்திரி, ஐயப்பன் தாங்கல் டெப்போ, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பை பாஸ் உள்பட 10 மெட்ரோ ரெயில்நிலையங்கள் உருவாக்கப்படுகிறது.


    மெட்ரோ ரெயில் திட்டம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுவதால் சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாதவரம்-சிறுசேரி வரை 2-வது கட்டமாக ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 3 வழித்தடப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்படுகிறது. சென்னை மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் தற்போது பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை நீட்டிக்கப்படுகிறது.

    ரூ.3850 கோடி மதிப்பீட்டில் 13 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்க மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இதில் 10 மெட்ரோ ரெயில்நிலையங்கள் கட்டப்படுகிறது. பல வங்கி கடன் நிதிஉதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    சென்னை மவுண்ட்- பூந்தமல்லி, ஆவடி சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த வீடு மற்றும் கடைகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மவுண்ட்- பூந்தமல்லி, ஆவடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதன்படி 6 வழிப்பாதையாக அகலப்படுத்துவதற்கு தனியார் பட்டா நிலங்களை நில ஆர்ஜிதம் செய்திட மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி காட்டுப்பாக்கம் பகுதியில் ரோட்டை ஒட்டிய கடைகள், வீடுகள், காலியிடங்களை அரசு கையகப்படுத்த உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்டோரது வீடு, கடைகள், திருமண மண்டபம், கோவில்கள் இடிக்கப்பட உள்ளது.

    இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்புபவர்கள் 30 நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்கப்படும் விளக்கங்கள் அதிகாரிகளால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

    ஆட்சேபனைதாரர்கள் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் ஆகஸ்டு 17-ந்தேதி டி.ஆர்.ஓ. முன்னிலையில் ஆஜராகியும் விளக்கம் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் கருணாநிதி மகள் செல்வி மற்றும் செல்வியின் மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது கடந்த 2009-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில் செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் பனையூரில் உள்ள அவர்களது நிலத்தை என்னிடம் விற்க ஒப்பந்தம் செய்தனர். அதற்காக ரூ.4½ கோடியை முன் பணமாக கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமல் வேறு நபருக்கு விற்றுவிட்டனர். நான் முன்பணமாக கொடுத்த ரூ.4½ கோடியை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்தனர்.

    அதனால் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். இவ்வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண்.1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி குருலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி மகள் செல்வி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி குருலட்சுமி வருகிற 25-ந் தேதி செல்வியை மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். #Tamilnews
    ×